
இலங்கையின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கடந்த புதன் அன்று அரச தரப்பால் கொண்டாடப்பட்டது. ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் அதிகம் இன்றி அமைதியாகவும், எழிமையாகவும் நிறைவேறியிருந்தது.
கடந்த வருட கொண்டாட்டங்களோடு ஒப்பிடுகையில், படைத்தரப்புக்கான முக்கியத்துவமும், அணிவகுப்புகளும் மட்டுப்படுத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தமது அரசின் திட்டங்கள், சவாலான விடயங்கள், இனநல்லிணக்கம் என்பவற்றை குறிப்பிட்டு உரையாற்றியிருந்தார்.
“அதிஉத்தம ஜனாதிபதி” போன்ற சொற்பதங்களை பாவித்து தன்னை உயர்வாக முன்மொழிய வேண்டாமென்றும், தனது மனைவியை “முதல் பெண்மணி” என்று அழைக்க வேண்டாமென்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக சொல்லப் படுகிறது.
மக்கள் தன்னை ஒரு சாதாரணமானவனாக கருதவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி அவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிலிருந்து தான் முற்றிலும் வேறானவன் என்ற அடையாளத்தை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளதாக தெரிகிறது.
தனது ஒவ்வொரு செய்கையிலும் அவர் அதை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. வீண் விரயம் இல்லாத தனது ஆடம்பரமற்ற வெளிப்பாடுகள் மகிந்தவின் ஆதரவாளர்களை மேலும் தன்பக்கம் சார வைக்கும் என்ற எதிர்பார்ப்போடு மைத்திரியின் நகர்வுகள் அமைவதாகவும் சொல்லலாம்.
மகிந்தவின் முறைகேடான அரசில் பங்கு கொண்டவர்களும், அவரது ஆதரவாளர்களும் மைத்திரியின் 100 நாள் திட்டத்தையோ, அவரது நடவடிக்கைகளையோ எதிர்க்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
பதவி பறிக்கப்பட்டதோடு, எதிர்ப்பு அரசியலுக்கும் வழியில்லாத ஒரு நிலையே மகிந்த தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றில் இன்னமும் வலுவான பிரதிநிதித்துவம் இருப்பது மட்டுமே எதிர்தரப்பினருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாகும்.
ஆனாலும், அரசுக்கு எதிராக வலுவான பிரேரணைகள் எதனையும் கொண்டுவந்து விவாதம், வாக்கெடுப்பு என்று எதிர்ப்பை காட்ட முடியாத நிலையே காணப்படுகிறது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கூட அதிகம் எதிர்ப்பை வெளியிட முடியவில்லை. அடுத்து, பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிரதம நீதியரசர் மொகான் பீரிசின் பிரச்சனையை பாராளுமன்றில் உயர்த்திப் பிடித்தார்கள். அதுவும் பெரிதாக எடுபடவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி தரப்பு வெற்றி பெற்றிருந்தாலும், அவர்கள் முழுமையான வலிமையோடு ஆட்சியை கொண்டுசெல்ல முடியாத நிலை தொடர்ந்து காணப்படுகிறது. முக்கியமான சட்ட மூலங்களை தமது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நிறைவேற்ற முடியாதபடிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவ பற்றாக்குறை நீடிக்கவே செய்கிறது.
அதே சமயம், நெருங்கிவரும் பொதுத் தேர்தல் அறிவிப்பானது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அனைவருக்குமே எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மகிந்தாவால் அரசதரப்புக்கு ஏற்படக்கூடிய தேர்தல் அச்சுறுத்தல் முற்றாக நீங்கியதாக இல்லை.
பொதுத் தேர்தல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மகிந்த மீள்எழுச்சி பெறுவதற்கான வாய்ப்பை புறம்தள்ளி விடுவதற்கில்லை. எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகித்து, பாராளுமன்றத்தில் அதிக ஆசனத்தை பெற்று பிரதமராக வருவதற்கான முயற்சியில் மகிந்த இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள வாக்குகள் மகிந்தாவுக்கே விழுந்ததால், தொகுதி வாரியாக அதிக அங்கத்துவத்தை பெறலாம் என்ற எதிர்பார்ப்போடு அவர் களத்தில் இறங்கலாம் என்றே கருதப்படுகிறது.
தேர்தலில் மகிந்தா தரப்புக்கான அங்கத்துவம் அதிகமானால், மைத்திரியின் 100 நாள் திட்டங்கள், நல்லாட்சி என்பன சாத்தியப் படாதவையாகவே ஆகிவிடும்.
மூன்று வாரங்களேயான புதிய அரசின் திட்டங்கள் உயர்ந்தவையாக இருந்தாலும், இன நல்லிணக்கம் பற்றி வாய் வார்த்தைகளில் வெளிவரும் அளவுக்கு செயலில் காணப்படுவதாக தெரியவில்லை.
சில விடயங்கள் தமிழரின் எதிர்பார்ப்புக்கு மாறாக வெளிப்படுத்தப்படுவதை அண்மைய நாட்களில் காணக்கூடியதாக இருக்கிறது. 15 புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிராக கடந்த அரசு கொண்டுவந்த தடையை மைத்திரி அரசு தொடர்ந்து நீடித்துள்ளதும், சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலான “றோம்” பிரகடனத்தில் கைச்சாத்திட இலங்கை மறுத்துள்ளதாக தெரியவருவதும்,
உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களே இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில், இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளை வரவழைக்க முயற்சிப்பதும், பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் இலங்கையின் முப்படையினருக்கும் பொலிஸ்துறையின் அதிகாரங்களை பயன்படுத்த அதிகாரம் வளங்கப்பட்டுள்ளதாக சொல்லப் படுவதும்,
விமான நிலையத்தில் தமிழர்கள் கைது செய்யப்படுவதும், அரசால் மூடப்பட்டதாக சொல்லப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி வழமைபோல் இயங்கும் என்று இராணுவத் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதும், பாதுகாப்பு வலயம் அகற்றப்படமாட்டாது என்று சொல்லப்படுவதும், நல்லாட்சிக்கான முன்னெடுப்புகளாக தமிழ் மக்களுக்கு தெரியவில்லை.
ஆட்சியில் மாற்றம் வந்தாலும், “தேசிய மனச்சாட்சியில் மாற்றம் வேண்டும்” என்று சொல்லிய மனோ கணேசனின் வார்த்தைகளை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
அண்மைய ஆட்சி மாற்றத்தின்படி சிங்கள மக்களுக்கு ஒரு நல்லாட்சி அமைந்துள்ளதால் அவர்கள் சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாடலாம். ஆனால், தமிழருக்கு அது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.
67 வருடங்கள் ஏற்படாத நம்பிக்கையை 3 வாரங்களில் தமிழ் கூட்டமைப்பின் தலைமை எப்படி பெற்றதோ தெரியவில்லை, அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களின் கருத்துக்கு மாறாக இலங்கை அரசின் சுதந்திரதின விழாவில் கலந்துகொண்ட சம்பந்தரும் சுமந்திரனும் கூட தேர்தல் வரவிருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.
தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடி நடப்பதில்தான் வெற்றி வாய்ப்பு தங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து நடப்பது நல்லது.
க.ரவீந்திரநாதன்
No comments:
Post a Comment