
நிறைவேற்றப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தை கலைப்பேன் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிடிவாதமாக இருந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த திருத்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இதற்கு முன்னர், அமைச்சரவையில் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான இரண்டு யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றுக்கு எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இது பற்றி ஆராய்ந்து திருத்தங்களை முன்வைப்பதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இப்போது திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரத்தை அளித்திருக்கிறது. 20ஆவது திருத்தச்சட்டம் என்பது தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இருக்கும் விருப்பு வாக்கு முறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்து வருகிறது. வாக்காளர்களின் விருப்பத் தெரிவைத் தீர்மானிக்கும் ஒன்றாக இது இருந்தாலும், பணப் பலமே விருப்பத் தெரிவைத் தீர்மானிக்கும் ஒன்றாக மாறியிருப்பதும் விருப்பு வாக்குகளுக்காக ஒரே கட்சி வேட்பாளர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுவதாலுமே, பெரும்பாலான கட்சிகள் இதனை வெறுக்கின்றன. அதை விட, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு மாவட்ட ரீதியாகவே தெரிவு இடம்பெறுவதால், தமக்கான பிரதிநிதி யார் என்று பொதுமக்களுக்கு தெரியாதுள்ளது. அதுபோல, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலகுவாக பொறுப்பை தட்டிக்கழிக்கின்ற நிலை உள்ளது. விருப்பு வாக்கு மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாமை ஆகிய இரண்டு காரணங்களுமே, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் முக்கியமான குறைபாடாக கருதப்படுகிறது. ஆனால், இந்த தேர்தல் முறை சிறுபான்மையினர் மற்றும் சிறிய கட்சிகளுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழுகின்ற சிறுபான்மையினருக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்கியது இந்த தேர்தல் முறைமையே. அதுபோலவே, இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் தவிர்ந்த, தொகுதிவாரியாக வெற்றி பெறும் வாய்ப்பில்லாத சிறிய கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வைத்ததும் இந்த தேர்தல் முறையே. தனியே தொகுதிவாரியான தேர்தல் முறையின் மூலம் தென்னிலங்கையில் மூன்றாவது அரசியல் சக்தியாக ஒன்று உருவெடுக்க முடியாது. தென்பகுதியில் பிரதான அரசியல் கட்சிகளை தோற்கடித்து தொகுதி ஒன்றில் தனித்து வெற்றி பெறக்கூடிய நிலையில் எந்தவொரு சிறிய அரசியல் கட்சியும் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி, இடதுசாரிக் கட்சிகள், தேசிய சுதந்திர முன்னணி என்று எந்தக் கட்சியை எடுத்துக்கொண்டாலும் இதேநிலை உள்ளது. அதுபோலவே, தென்பகுதியில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் கூட தனியாக போட்டியிட்டு வெற்றி பெறமுடியாது. தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையின் முக்கியமான குறைபாடு இது. இதன் காரணமாக, சிறிய அரசியல் கட்சிகளால் சுதந்திரமாக அரசியல் நடத்தமுடியாத, தமது கொள்கைகளை முன்னிறுத்த முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக, கூட்டணிகளில் இணைந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று ஏற்படும். ஆனால், மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் காரணமாக சிறிய கட்சிகளும் கூட தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளால் நாடாளுமன்றத்துக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப வழி செய்தது இந்த தேர்தல் முறையே. ஆனாலும், விருப்பு வாக்கு முறைமையின் மீதுள்ள வெறுப்பினால்; தான் அரசியல் கட்சிகள் இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றன. இந்த முறை மாற்றப்படுவதால் பாதிக்கப்படப்போவது தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சிறிய கட்சிகளுமே. இதனால், தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போதெல்லாம் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் சிறு கட்சிகளும் அதற்கு எதிராகவே குரல் கொடுத்துவந்தன. அல்லது தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் மாற்று யோசனைகளை முன்வைக்க வலியுறுத்தின. 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனைகள் சிலவற்றில் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் நலன்களை பாதிக்காத வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. ஆனால், இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை அவற்றுக்கு நேர் முரணானது. நேரடியாகவே சிறிய மற்றும் சிறுபான்மையினர் கட்சிகளை நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாமல் வெட்டித் தடுக்கும் நோக்கம் கொண்டது. கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனையின் படி, 125 உறுப்பினர்கள் மட்டுமே நேரடியாக தொகுதிவாரி முறைப்படி தெரிவு செய்யப்படுவர். எஞ்சிய 75 பேர் மாவட்ட விகிதாசார அடிப்படையிலும் ஏனைய 25 பேர் நியமன அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறையின்படி, தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை 125 ஆக குறைக்கப்பட வேண்டும். தற்போது இலங்கையில் மொத்தம் 160 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் பல உறுப்பினர் தேர்தல் தொகுதிகளும் உள்ளன. இவற்றில் இருந்து இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் தெரிவாக முடியும். தொகுதிவாரி தேர்தல் முறை மீளவும் கொண்டுவரப்படும்போது மலையகம், கொழும்பு மற்றும் கிழக்கில் தமிழர்களினதும் மலையகம், கொழும்பு, கிழக்கில் முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் வகையில் பல உறுப்பினர் தொகுதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கேற்பவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 வரை அதிகரிக்கலாம் என்று யோசனையும் முன்னர் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையின் படி தொகுதிவாரியாக தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் தொகை 125 ஆக குறைக்கப்படும்போது, ஏற்கெனவே இருந்த பல தொகுதிகளே காணாமற்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், பல உறுப்பினர் தொகுதிகள் குறித்து சிந்திக்கவே முடியாத நிலை ஏற்படும். கடந்த வாரம் அமைச்சரவை அங்கிகரித்த தேர்தல் முறை நடைமுறைக்கு வருமானால், 11 தேர்தல் தொகுதிகளைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 5 அல்லது 6 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவுசெய்யப்படும் நிலை ஏற்படும். இதே நிலை, ஏனைய மாவட்டங்களிலும் ஏற்படும். பதுளையில் உள்ள 9 தொகுதிகள் 6 தொகுதிகளாக குறைக்கப்படும். காலியில் 10 தொகுதிகள் 7 ஆக குறையும். தற்போது 7 தொகுதிகளை கொண்டுள்ள மாத்தறையில் இரண்டு தொகுதிகள் இல்லாமல் போகும். 14 தொகுதிகளைக் கொண்ட குருநாகல் மாவட்டத்தில், 3 அல்லது 4 தொகுதிகளைக் குறைக்க நேரிடும். 9 தொகுதிகளைக் கொண்ட கேகாலை, 8 தொகுதிகளைக் கொண்ட இரத்தினபுரி, 7 தொகுதிகளைக் கொண்ட அநுராதபுரம், 8 தொகுதிகளைக் கொண்ட களுத்துறை மாவட்டங்களிலும் 2 தொடக்கம் 4 தொகுதிகள்வரை குறைக்க வேண்டிவரும். இது தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களுக்கு மட்டும் ஆப்பு வைக்காது. ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கும் பாதகமான விடயமாகும். 125 உறுப்பினர்கள் மட்டுமே தொகுதி வாரியாகத் தெரிவாகுவர் – மாவட்ட விகிதாசாரப்படி 75 உறுப்பினர்கள் தெரிவாக இடமுள்ளதால் சிறுபான்மையினர் மற்றும் சிறுகட்சிகளின் நலன் பாதகாக்கப்படும் என்ற வாதம் தவறானது. ஏனென்றால், 225 உறுப்பினர்களில் 196 பேர் விகிதாசார முறைப்படி தெரிவாகும்போது, சிறுபான்மையினர் சிறுகட்சிகளுக்கு கிடைத்த வாய்ப்புக்கும் 75 பேரை மட்டும் அந்த முறையில் தெரிவு செய்யும்போது கிடைக்கும் வாய்ப்புக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கும். விகிதாசார முறைப்படி தெரிவாகும் 75 பேரும் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையிலேயே தெரிவாகுவர் என்பதால், அங்கேயும் பலம் வாய்ந்த கட்சிகளுக்குத் தான் முன்னுரிமை கிடைக்கும். பிரதிநித்துவம் உறுதியாகும். எனவே, 75 உறுப்பினர்களை மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தெரிவு செய்வதன் மூலம் சிறுபான்மையினரின் நலன்களை உறுப்படுத்த முடியாது. அதுபோலவே நியமன உறுப்பினர் விடயத்திலும் பெரிய கட்சிகளே ஆதிக்கம் செலுத்தும் நிலையே காணப்படும். இதனால், இந்த தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயமாக தமிழ், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வீழ்ச்சியடையும். இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டே இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனென்றால், கடந்த செவ்வாயன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளின் மூலம் 125 தொகுதிகளை ஐ.தே.க. கைப்பற்றும் என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து ஐ.தே.க.வின் இப்போதைய குறி சிங்கள பௌத்த வாக்குகளா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஏற்கெனவே, தேர்தல் முறை மாற்றம் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கூறப்பட்டுள்ளபோதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனை அதற்கு எதிர்மாறானதாக அமைந்திருக்கிறது. இது, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்த 20ஆவது திருத்தச்சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற எத்தனிக்கிறதா அல்லது அரசாங்கம் மீதுள்ள அழுத்தங்களை குறைக்கவோ அல்லது திசை திருப்பவோ இதனைப் பயன்படுத்த எத்தனிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை. சாதாரண பெரும்பான்மை பலத்தையே கொண்டிராத ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம். எனவே எதிர்க்கட்சியினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளினதும் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவை. அமைச்சரவையில் தமக்குள்ள பெரும்பான்மை பலத்தைக் கொண்டு இந்த யோசனையை நிறைவேற்றியிருக்கின்ற அரசாங்கம், இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. ஏற்கெனவே சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த யோசனை திருத்தப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும். இது ஐ.தே.க. வுக்கு ஒன்றும் தெரியாத விடயமல்ல. ஆனாலும், இப்படியான யோசனையை சமர்ப்பித்து அமைச்சரவையில் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது என்றால், இதன் பின்னால் ஏதோ ஒரு நரித்தந்திரம் இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. இந்த திருத்த யோசனையின் ஊடாக அரசாங்கம் அடைய நினைக்கும் இலக்கு என்ன? அதனைத் தெரிந்துகொள்ள சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுபான்மையினரின் ஆதரவின் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள இப்போதைய அரசாங்கம், அதனையே பணயம் வைத்து அரசியல் ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளது என்பதே அதுவாகும்.
கே.சஞ்சயன்
No comments:
Post a Comment