இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Thursday, October 30, 2014

பேருகலை மலையின் 'சம்ஹாரம்'


புதையுண்டதால் மனங்கள், ரணங்களாய்... இங்கே வதையுண்ட நாங்கள், நடை பிணங்களாய் ஆனோம். பல தடைகள் மீறியே பெத்த உயிர்கள்...மீரியாபெத்த மண்ணுக்குள் சங்கமாகிவிட்டன. அந்த உறவுகளுக்கு,  கண்ணீர் காணிக்கைகள் என்ற கண்ணீரஞ்சலி பதாகைகளுக்கு வடுவாகிவிட்டது கொஸ்லாந்த, மீரியாபெத்த பேரழிவு.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி முழுநாட்டின் கரையோரங்களையும் புரட்டி கவிழ்த்துபோட்ட கடற்கோள் இயற்கை சீரழிவு. அதற்கு பின்னர் 2009ஆம் ஆண்டு வடக்கில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத
செயற்பாடுகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகள் வரையும் கல்நெஞ்சான மனங்கள், கொஞ்சம் கொஞ்சம் இழகிக்கொண்டுவருகையில் பேருகலை மலையும் தாண்டவமாடிவிட்டது.

கொஸ்லாந்தை மீரியாபெத்த!


ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்லை பிரதேச சபைக்கு உட்டபட்ட பெருந்தோட்டமாகும். இந்த தோட்டத்துக்கு பதுளை, ஹப்புத்தலையிலிருந்து இருவழிகளில் செல்லலாம். இந்த தோட்டத்தை மஸ்கெலிய பிளான்டேசன் நிர்வாகமே நிர்வகிக்கின்றது.


வழமையாகவே, தோட்டங்கள் காலை வேளையிலேயே சுறுசுறுப்பாகிவிடும். 29ஆம் திகதி புதன்கிழமையன்றும் அப்படிதான். கடும் குளிருக்கு மத்தியில் தட்டியெழுப்பப்பட்ட சின்னஞ்சிறுசுகள் 7 மணிக்கு முன்னதாகவே இருந்ததை சாப்பிட்டுவிட்டு முன்பள்ளிகளுக்கும் பாடசாலைகளுக்கும் சென்றுவிட்டனர். அதிகாலை வேளையில், வேலைகளுக்கு செல்லவேண்டியவர்களும் சென்றுவிட்டனர்.


அடுத்த சங்குக்கு... முன்னர் வேலைக்கு சென்று விடவேண்டும் என்று எண்ணி பெரட்டு தப்பை (ரொட்டிக்கு மலையத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டபெயர்) வாயில் வைத்தவர்களின் காதுகளுக்கு என்றும் கேட்காத சத்தமொன்று கேட்டுள்ளது. அதற்கு பின்னர் பாரிய புகைகிளம்ப, மண்ணுடன் கலந்த தண்ணீர் ஓடையாய் பெருக்க, மண்ணாறு, தோட்டத்தையே விழுங்கிகொண்டிருந்தது.


(சங்கு ஓசை என்றால் தோட்டங்களில் இருகின்ற தொழிற்சாலையிலிருந்து கூ.... கூ... கூ.... என்று எழுப்பப்படும் ஒருவகையான ஓசையாகும். இந்த சங்கு ஓசையானது காலை வேலைக்கு செல்லுதல், சாப்பாட்டு இடைவேளை, பகல் வீட்டுக்கு திரும்புதல் மற்றும் மாலை வேலை முடிவடையும் நேரங்களை குறித்து காட்டுவதற்காக எழுப்பப்படும் ஓசையாகும்;)


கையில் கிடைத்ததையல்லை, உயிரை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஓடிய பலரையும் மண்ணாறு இழுத்துபோர்த்தி படுத்தபடுக்காய் படுத்துகொண்டது என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு, சுமார் 30 அடியிலிருந்து 50 அடி வரையிலான உயரத்துக்கு 3.5 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் மண்ணாறு குப்புறப்படுத்துகொண்டது.


அன்று காலை 7 மணிக்கு முன்னர் தோட்டத்திலிருந்து கிளம்பிவிட்டவர்களை தவிர, வேறு யாரையும் உயிருடன் மீட்கமுடியாது என்றுதான் அனர்த்தத்துக்கு பின்னரான படங்கள் படம்பிடித்து காட்டுகின்றன. பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிக்களுக்கு சென்ற 75 சிறுவர்கள் உயிர்தப்பிவிட்டனர்.


அந்த தோட்டத்தின் ஒருதிசையில், முருங்கை பள்ளத்தாக்கை அணிந்ததாக சுமார் 2,500 அல்லது 3,000 அடி உயரத்தில் கம்பீரமாக செங்குத்தாக நிமிர்;ந்துநிற்கும் பேருகலை மலையின் ஒருபகுதியே வெடித்து சிதறி தண்ணீருடன் பெருக்கெடுத்து ஓடி, மீரியாபெத்த தோட்டத்தின் ஒரு எல்லையை அழித்துவிட்டுள்ளது.


இந்த மலை இன்றுநேற்றல்ல 2005ஆம் ஆண்டுமுதல் கொஞ்சம் கொஞ்சமாக உறுமிகாட்டி பயமுறுத்தியுள்ளது. அவ்வப்போது அனர்த்த எச்சரிக்கை விடும் வகையில் தன்னுடைய அங்கங்களை அசைத்து மண்சரிவை ஏற்படுத்தி எதிர்வும் கூறியிருக்கின்றது.


அப்போதெல்லாம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்தது. அரசாங்கமும் அத்தோட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை செய்தது. பெருந்தோட்ட மக்களின் உழைப்பை, அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதைப்போல உறிஞ்சும் பெருந்தோட்டங்களில், மீரியாபெத்தை தோட்டத்தை நிர்வகிக்கும் மஸ்கெலியா பிளாண்டேசன் மட்டும் விதிவிலக்காக இருக்கவிரும்பாமல் இந்த விடயத்தில் அசட்டையாகவே இருந்துவிட்டது.


இலங்கையில், பதுளை மாவட்டம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் 1957ஆம் ஆண்டுமுதல் மண்சரிவுகள், பாறைகள் புரண்டுவிழுதல் இடம்பெற்றுள்ளன. பதுளையில் 1986ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலும் இடம்பெற்ற மண்சரிவில் 11 பேர் பலியாகியுள்ளனர்.


மலையக மக்களை பொறுத்தவரை, அவர்களுக்கு ஒரு பேர்ச் நிலம் கூட சொந்தமில்லை, மீரியாபெத்த தோட்டமக்களுக்கும் அது விதிவிலக்கானவர்கள் அல்ல. மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் எங்கு செல்வதென்று தெரியாமல் அங்கே தங்கிவிட்டனர். அதன் விளைவாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள் மண்ணாகிபோய்விட்டன.


லயன்குடியிருப்புகளை மட்டுமன்றி, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.


இரண்டு பால் சேகரிக்கும் நிலையங்கள் இருப்பதனால் அங்கு மாடுகளும் ஆடுகள் மற்றும் கோழிகளும் இருந்திருக்கலாம் அவற்றுக்கெல்லாம் என்ன நடந்தது என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரையிலும் வெளியாகவில்லை.


அதற்கு அப்பால், மஹாமுனி கோவிலையும் மண்ணாறு விடாமல் விழுங்கிவிட்டது. இந்த கோவிலில் பூஜை வழிபாடுகளுக்கு மட்டுமன்றி மலையத்தில் அருகிகொண்டு போகின்ற கூத்துகளில் ஒன்றான பொன்னர் சங்கர் கூத்தும் அதனோடு இணைந்த நல்லதங்காள் கதை பாடும் படுகல திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் நடைபெறும்.


பொன்னர் சங்கர்  கூத்து மலையத்தில் ஏனைய பகுதிகளில் ஆங்காங்காங்கே அரங்கேற்ப்பட்டாலும் மீரியாபெத்தயில் போல் சிறப்பாக நடத்தப்படுதில்லை என்றே கூறவேண்டும்.


மஹாமுனி கோவிலையும் மண்ணாறு விழுங்கிவிட்டதால் அந்த கூத்துக்கள் மீண்டும் உயிர்பெறுமா? என்பதெல்லாம் எம்முன்னே விட்டுச்செல்லப்பட்ட கேள்விகளில் சிலவாகும்.


பொன்னர் சங்கர் கூத்து, நல்லதங்காள் கதையெல்லாம் வாய்வழி இலக்கியங்கள் என்பதனாலும் அனர்த்தத்தில் சிக்கிமீண்டிருக்கின்ற முதியவர்கள் அக்கூத்தை சொல்லி கொடுக்கும் மனநிலைக்கு திரும்புவார்களா? என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாதவையாகும்.


அதுமட்டுமன்றி ஏதோ ஒருவகையில் ஆதரவற்றவர்களாக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்திற்கொண்டு, அவர்களின் வாழ்கையாவது மண்ணில் புதையுண்டுவிடாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கம் மற்றும் மலையகம் சார்ந்த அரசியல்வாதிகளின் கடப்பாடாகும்.


தீபாவளி கொண்டாடப்பட்டு ஏழு நாட்களில் இவ்வாறானதொரு பேரழிவு ஏற்படுத்தியுள்ளமை மலையத்தையே சோகத்தில் மூழ்கடிக்கச்செய்துவிட்டது.


நரகாசுரன் என்ற கொடிய அசுரன் அழிக்கப்பட்ட தினம் தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.  தீபாவளியை மலையக மக்கள் ஏனைய பண்டிகைளையும் விடவும் வெகு சிறப்பாக  கொண்டாடிவருகின்றனர். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை அடுத்து, மீரியாபெத்தையில் இடம்பெற்ற  சோகமான இந்தச் சம்பவம்  அங்குள்ள மக்களின்  அடுத்த தீபாவளியையும் இல்லாமல் செய்துவிட்டது.


தீபாவளியைத் தொடர்ந்து  வருகின்ற முருகனுக்கு உகந்த விரதங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் கந்தசஷ்டி விரதம்,  தொடர்ந்து ஆறு நாட்களுக்கு அனுஷ்டிக்கப்பட்டு, ஆறாவது நாள் சூரன் போர் நடைபெறும்.


சூரனை வதம் செய்த முருகனின் அறுபடைவீடுகளில்  திருப்பரங்குன்றம் மிகமிக முக்கியமானதாகும். அந்த திருப்பரங்குன்றத்தில் சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்குவதற்கு  தவம் செய்தார்.


அப்போது அருகிலிருந்த குளத்தில், இலை ஒன்று பாதி மீனாகவும் மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால்,  அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவவழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. 


நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். 


அப்போது நக்கீரர், முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. 


சூரபத்மனை அழிக்க புறப்பட்ட முருகனுக்கு 'வீரவேல்' தந்து, முருகனின் போர் படையின் சேனாதிபதியாக வீரபாகுவை நியமித்து ஆசி கூறினாள் அன்னை பார்வதி. முருகப்பெருமானின் தலைமையில் நடந்த போரில் அசுர படையினர் பெரும் அளவில் அழிந்தார்கள். 


இறுதிக்கட்டம் நெருங்கியது. முருகப்பெருமானிடம் போர் செய்ய முடியாமல் மாயையின் மகனான சூரபத்மன், மாமரமாக மாறினான். அந்த மரத்தை கந்தன் தன் வேலால் இரண்டாக பிளந்தார். சூரபத்மன் வீழ்ந்தான். மரமாக மாறி இரண்டாக பிளந்த சூரபத்மனின் ஒருபாகத்தை சேவலாகவும் மறுபாகத்தை மயிலாகவும் மாற்றினார்.


தன் வெற்றிக்கு அடையாளமாக சேவலை தன் கொடியில் சின்னமாகவும் மயிலை தன் வாகனமாகவும் மாற்றினார் முருகப் பெருமான். முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த காலத்தை உமாதேவியார் கந்தசஷ்டி விரதமாக அனுஷ்டிஸ்ததாக  வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.


கந்தசஷ்டி விரதத்தின்  இறுதிநாளான 29ஆம் திகதி புதன்கிழமை சூரசம்ஹாரத்துக்கு உலகளாவிய ரீதியில் இந்துக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், காலை வேளையிலேயே கொஸ்லாந்தை மீரியபெத்தையிலுள்ள பேருகலை மலை பிளந்து சரிந்து  தோட்டத்திலிருந்த ஆறு லயன்களையும் துவசம் செய்துள்ளமையானது  இலங்கையில் மண்சரிவு வரலாற்றி;ல் இதுவரையிலும் இடம்பெறாத ஒன்றாகும்!


கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான்று இடம்பெற்ற இந்த மண்சரிவுச் சம்பவத்தை வாழ்நாளில் மறக்கமுடியாது.  இனி வரும் ஒவ்வொரு சூரசம்ஹாரமும் பேருகலை மலையின் சம்ஹாரத்தை நினைவூட்டும். 


நன்றி -தமிழ் மிரர்

-அழகன் கனகராஜ் 

No comments:

Post a Comment