இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, October 11, 2014

தமிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடி ஆர்வம்

மிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடி ஆர்வமாக இருப்பதாகவும் அவரது உத்தரவுப்படியே அகில இந்திய தலைவர் அமித்ஷா ரஜினியுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமித்ஷா  ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பாக எதுவும் தெரியாது என்று மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை மழுப்பலாக பதில் அளித்துள்ளார். 
 நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால்,  இதுவரைக்கும் அரசியலுக்கு வருவேனா , மாட்டேனா என்பதை ரஜினியும் உறுதியாக கூறவில்லை. தேர்தல் வந்தவிட்டால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா ?  மாட்டாரா ? என்ற விவாதம் தொடங்கிவிடும்.
 கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ் நாட்டில் பிரசாரம் செய்ய வந்த நரேந்திர மோடி , சென்னையில் ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று சந்தித்ததால் அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினி காந்த் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.

 இந்நிலையில் ரஜினிகாந்தை பா.ஜனதாவுக்கு இழுக்க வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.  அகில இந்திய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா , ரஜினியுடன்  3 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் பேச்சுக்கு பிறகு ரஜினி தரப்பிலும் மாற்றங்கள் தென்படுவதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரில் லிங்கா படப்பிடிப்பில் இருந்த ரஜினியை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோரும் நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடியும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உத்தரவுப்படியே அமித்ஷா பேசி வருவதாகக் கூறுகின்றன. பா.ஜ.க. வட்டாரங்கள். ரஜினியிடம் பேசிய அமித்ஷா , நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளர்  நீங்கள் தான் என்று உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு ரஜினி படப்பிடிப்பு முடியட்டும் பதில் சொல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.  இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில பா.ஜ.க  தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பாக எதுவும் தெரியாது  என்றும் பா.ஜ.க. விற்கு  ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் வரவேற்போம் என்று கூறியிருக்கிறார்.
 பெங்களூர் ரசிகர் மன்ற தலைவர் இளவரசன், ரஜினியை நேரில் சந்தித்து நீங்க அரசியலுக்கு வரணும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதைக்  கேட்ட ரஜினி “ கொஞ்சம் பொறுங்கள்'என்று பதில் அளித்துள்ளார். இதனால் அவர் அரசியலுக்கு வரும் காலம் கனிந்து வருவதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.    
|
நன்றி-விகடன்

No comments:

Post a Comment