இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Sunday, October 26, 2014

வரவு செலவுத் திட்டம் மக்களுக்கா ... தேர்தலுக்கா ...?

தேர்தல்களை  உரிய முறையாக நடத்துங்கள்,  உரிய காலத்துக்குள் நடத்துங்கள் என்கிற கோரிக்கைகளை காணக் கூடிய அரசியல் மற்றும் தேர்தல்கள் கட்டமைப்பில் தேர்தலை நடத்த வேண்டாம் . தேர்தலை பிரகடனம் செய்வது சட்ட  விரோதமானது எனும் புதுமையான களநிலைமையை கண்டவண்ணமுள்ளது இலங்கை. இந்தப் பின்னணியில் தங்களது
ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காக ஆணையாளரை சந்திப்பதற்காக ஆணையகப்படிக் கற்களை ஏறி இறங்கியுள்ளன எதிர்க்கட்சிகளான ஐ.தே.க. , ஜே.வி.பி.  ஆகியன.
இப் பேர்ப்பட்டதொரு  பின்புலத்தில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை நாள் குறிக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை தாங்கியுள்ள வரவு  செலவுத் திட்டம்  10 ஆவது  முறையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டமை நாடறிந்ததே. ஜனாதிபதிகள் நிதியமைச்சுப் பொறுப்புகளை தாங்கியிருத்தல் கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் முந்திய விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும் அத்தகைய நடைமுறையை  ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவே. அந்த வகையில் நிதியமைச்சுப் பொறுப்பை தாங்கும் ஜனாதிபதிகள் என்ற நடைமுறை நீலத்தாரிடமிருந்தே   உதயமானது. இதேவேளை இலங்கை வெளிவிவகாரத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் கொந்தராத்து மோசடி, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உரிய பங்காற்றவில்லை என மும்முரமாக சுட்டிக்காட்டும்  ஊடகங்கள் வரவு  செலவுத் திட்டம் தொடர்பில்  ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்கூற மறுத்தமையையும் சேர்த்து சுட்டிக்காட்டுவதையும் அறிய முடிகிறது. 
 இயல் பூக்கமும் இனிப்பூட்டலும்
உண்மையில் பாதீட்டறிக்கை தொடர்பில் ஒருவகை ஜனாதிபதித் தேர்தல் பார்வை இருக்கிறது என்பதில் குறை காண்பதற்கில்லை. ஆனால், எதிர்த்தரப்புகள் குறித்த பட்ஜெட்  வெஞ்சத்தில் கொடுக்கும் இலஞ்சம்  என குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எவ்வாறாயினும் உரிமைகளை விடவும் முழுக்க முழுக்க சலுகைகளுக்கே முன்னுரிமையளிக்கும் அரசியல் கட்டமைப்பில் பலரதும் பாராட்டையும் நன்றியுணர்வையும்  இந்தப் பாதீடு பெற்றிருப்பதாக அரச தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அரசாங்க ஊழியர்கள், துறை சார்ந்தோருக்காக ஜனாதிபதி  திறந்த சலுகை நிவாரணங்களை முன்மொழிந்திருப்பதாக அரசுசார்  அமைப்புகளும் அமைச்சர்களும் கூறிக் கொண்டுள்ளனர்.இரண்டு மாத காலத் தவணையில் நடத்தப்படவுள்ளதாகவும் கருதப்படும் உ த்தேச ஜனாதிபதித் தேர்தல் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட இயல் பூக்கமாக வந்த இனிப்பூட்டல்கள் நிறைந்த பாதீடு பாதிப்பேருக்கு சங்கடமாகவே இருக்கக் கூடும் என்றாலும்  ஜனாதிபதியின் பட்ஜெட் வாக்குறுதி வரவேற்கத்தக்கதாகும் என்ற அபிப்பிராயமுண்டு.  எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைக் கவருவதற்கான முயற்சியாகவே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறுவோரிடம் அப்படியிருந்தால் தான் என்ன?  என்று ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்கள் கேட்கின்றனர். ஜனாதிபதியின் மனதை  எது மாற்றுமோ , மாற்றியதோ தெரியவில்லையாயினும்  இலட்சக்கணக்கான முதியோர் தற்போதாவது நிம்மதிப் பெருமூச்சு விடக் கூடிய வாய்ப்பு வெளிக் கொணரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
 பொருளாதார போராட்டம்
 இதேவேளை ஐநூறு ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்ட தனியார் துறை ஊழியர்களுடன் பொதுத்துறைக்கு முழுமையாக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக வர்ணிக்கப்படும் பட்ஜெட்  ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திரை நீக்கம் என்று கூறப்படுகின்றது.  தனியார் துறையினர் கருத்துகள் முரண்பட்டுக் காணப்படுகின்றன. ஊழியர் சேமலாப நிதியத்துக்காக தங்களது பங்களிப்பாக இரண்டு வீத அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றமை  சுட்டிக்காட்டப்படுகிறது. இப்பிரேரணை  2015 ஜனவரியிலிருந்து ஆரம்பித்து நிதி நெருக்கடிகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தை தனியார் துறைக்கு ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஆடைத் துறை ஊழியர்களின் மனதை வென்றெடுப்பதற்காக அத்தகையோருக்கு ஓய்வூதியத் திட்டத்தை ராஜபக்ஷ  அறிமுகப்படுத்தவுள்ளமை அறிந்ததே.
 ஆனால்,  எதுவுமே உறுதியான முறையில் கூறப்படாத போதிலும்  ஆரம்பம் முதல் முடிவு வரையான ஜனாதிபதியின் சகல முன்மொழிவுகளும் ஜனவரி ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்துள்ள சலுகைகளைக் கொண்ட பொதியாக தென்படுவதாக நோக்கர்கள் கூறுகின்றனர். அதேவேளை இப் பேர்ப்பட்ட பெரியளவிலான சலுகைகளை வழங்குவதற்கேற்றவாறாக சமகால நாட்டு நிதி நிலைமை காணப்படவில்லை என்ற பொருளாதார நிபுணர்களின் கருத்துகளுமுண்டு.  பிரகடனப்படுத்தப்பட்ட பிரேரணைகள்  அமுலாக்கப்படுமானால் இரவோடிரவான பணவீக்கத் தாக்கத்தால்  2015 மார்ச்சளவில் நாட்டின் பொருளாதாரம் போராட்டத்துக்குள்ளாகலாம்.
நெருக்கடி  வியப்பு
 அது அவ்வாறுள்ள போதிலும் கடந்த காலங்களில் தேர்தல் இலக்குகளை எட்டுவதற்காக சில சலுகைகளை முன்மொழிந்த வகையில் பின் தொடர்ந்த அரசுகள்  பண வீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக நெருக்கடிகளுக்குள்ளான வரலாறுகள் உள்ள போதிலும் சமகால பட்ஜெட் சலுகைகள் தொடர்பில் அரச ஊழியர்கள் குறைந்த பட்ச சம்பள வரையறை 15,000 ரூபா என்றும் சகல கொடுப்பனவுகளையும் சேர்த்து  25000 ரூபாவுக்கு குறையாததாக இருக்கும் என்பதையிட்டும் மகிழ்ச்சியடைந்திருக்கக்  கூடும். எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க சேவையாளர்களின் வாக்குகளை ஒன்று திரட்டலாம் என்ற நம்பிக்கையும் ஜனாதிபதிக்கு இருக்கலாம். சுதந்திர இலங்கையில் எத்தகைய நிதியமைச்சராலும் என்றைக்கும் ஒருபோதும்  முன்மொழியப்பட்டிருக்க முடியாத வகையில் கற்பனை பண்ணமுடியாத பாணியில் சலுகைகளை ஜனாதிபதி அறிவித்துக் கொண்டிருந்த பாணியை கண்ணுற்ற எதிர்க்கட்சி வியந்தும் போயிருக்கக் கூடும்.
 கிண்டலும் கொதிப்பும்
 வரவு   செலவுத் திட்ட உரையை நிறைவு செய்த ஜனாதிபதி ராஜபக்ஷ  எதிர்க் கட்சியைப் பார்த்து எப்படி நாட்டுப்புறத்தவனது பட்ஜெட் ? என நகைச்சுவையோடு வினவியமை ஜனவரித் தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி  தனது சுலோகங்களை காட்சிப்படுத்தும் பாணியையிட்டு ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும்.  ஜனவரியிலிருந்து சலுகைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதால் எவ்வாறு அவற்றை  அமுலாக்கப்போகிறார் என்பதையிட்டும் எதிர்க்கட்சி சிந்தித்திருக்கக் கூடும். ஏனெனில் உத்தேச ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் முதல் பத்து நாட்களுக்குள் சாத்தியமாகலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. பட்ஜெட் நன்மைகளில் பொதுவாக அரச துறை ஊழியர்களுக்கான சம்பளம் ஜனவரி மூன்றாம் வாரத்திலேயே கரங்கிட்டக்  கூடியதாகும். அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக ஜனவரி  சம்பளத்தை
 ஊழியர்களுக்கு வழங்க மகிந்த ராஜபக்ஷ தீர்மானிக்கவும் கூடும். அவ்வாறு நடந்தால் சம்பள அதிகரிப்புடன் அரச துறை  வாக்காளர்கள் மகிழ்ச்சியடைந்து காணப்படக் கூடிய கள நிலைமை ராஜபக்ஷவுக்கு அனுகூலமாக அமைந்து விடும் வாய்ப்பிருக்கும் எனலாம்.
இதேவேளை  நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டமை எவ்வாறிருப்பினும் கோரிக்கை முன்வைக்கப்பட்டமைக்கமைவாக  10,000 ரூபா சம்பள அதிகரிப்பை  வழங்க அரசாங்கம் தவறியமைக்காக எதிர்க்கட்சி தொழிற் சங்கங்கள் கொதிப்படைந்துள்ளன. உண்மையான வார்த்தையில்  கூறுவதானால் ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு வெறும் ரூபா  760  மாத்திரமே என்று எதிர்க்கட்சி வரைவிலக்கணம் செய்தது. மக்களை மடையர்களாக்குவதற்கான பாடலும் ஆடலும் என்று ஜனாதிபதியின் பட்ஜெட்டை எதிர்க் கட்சிகள் விபரிக்கத் தயங்கவில்லை. ஐ.தே.க. கூறும் விளக்கம் யாதெனில் அரச துறை ஊழியர்களின்  ஆகக் குறைந்த சம்பளம்  ரூபா 11,730 இருந்ததாகவும் தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுப்படியையும் சேர்க்கையில்  14,240. இந்தத் தொகையுடன்  760 ரூபாவை சேர்த்து விடுகையில்  15,000 தேறுகிறதாம்.
 நிபுணர்கள்  ஆய்வாளர்கள்
 எவ்வாறாயினும் பட்ஜெட் சலுகைகள் பொதுவாக சுமையேற்றம் செய்யக் கூடியவை என்ற நிபுணர்கள் கருத்துகளுண்டு. இத்தகைய சலுகைகளின் இறுதிமுடிவு  வரவு  செலவுத் துண்டு விழும் தொகையை அதிகரிக்கச் செய்யலாம். உள்வாரி,  வெளிவாரி கடன்படுகைகள் மூலமே துண்டு விழும் தொகையை ஈடுகட்ட நேரிடும். வட்டி வீதங்கள் அதிகரிக்கச் செய்யப்பட நேரிடலாம். பொருளாதாரம் மீது பண வீக்க அழுத்தம் தாக்கத்தை உண்டு பண்ணலாம்.  எவ்வாறாயினும் தற்காலிக இனிப்பூட்டல்கள் வழங்குவதிலோ, அதற்கேற்றவாறான பொருளாதார கொள்கைகளை, தேர்தல்களை வெல்லும் வகையில் தக்கவைத்துக் கொள்வதிலோ தீர்வு இல்லை. ஆனால், ஒருவரின் வெற்றியில் உறுதிப்படுத்துவதற்கு உயிரோட்டமான அரசியல் கொள்கைகளை முன்னோக்கி நகர்த்துவதே சிறந்ததாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கசப்பான வில்லைகளும் தொல்லைகளும்
 இது இவ்வாறிருக்க ஜனாதிபதியின் வரவு  செலவுத் திட்டம் ஒரு ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் என்று கூறப்படுகிறது. வழங்கப்பட்டுள்ள இனிப்புகள்  இலங்கையின்  அரசியல் வரலாறுகள் உணர்த்தியமை போன்று தேர்தல்களுக்குப் பிறகு கசப்பான வில்லைகளாகவும்  தொல்லைகளாகவும் கூட மாறலாம்.  1956 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம், இலவசமாக  இரண்டு கொத்து அரிசி  , 1970 இல் சகலருக்கும் தொழில் வாய்ப்புகள்,  1994 இல் மூன்று ரூபாவுக்கு பாண், போன்ற தலைப்புகள் சிறந்த உதாரணங்களாகும். அந்த வகையில் அவசியமான அரசியல் வேலைத் திட்டம் வளமான பொருளாதார வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படாத விடத்து தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படுகின்ற  10,000 ரூபா சம்பள உயர் வு யதார்த்தமாகாததும் ஆதாரமற்றதுமாகவே இருக்கும் எனலாம்.
 எதிர்க்கட்சிக்கு ஒரு மறைதிறவு
 இந்தப் பின்னணியில் எவர் என்ன கூறிக் கொண்டிருந்தாலும் எதிர்வரக் கூடிய ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயார்ப்படுத்துவதற்கு ஜனாதிபதி எதிர்க்கட்சிக்கு மறைதிறவை தோற்றுவித்துள்ளார். யதார்த்தமாகாததும் நீடித்து நிலைத்திருக்க முடியாதவைகளே வாக்குறுதிகள். ஜனாதிபதிக்கு  பதிலடியாகவும் அதிரடியாகவும் எதிர்க்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான தகவல்களையும் மறைதிறவுகளையும் வைத்துக் கொண்டு ஜனாதிபதி வழங்கியுள்ள சலுகைகள் இரட்டிப்பாகும் வகையில் அல்லது மும்மடங்காகும் வகையில் தனது தயார்ப்படுத்துகைகளை எதிர்த்தரப்புகள் மொழிய முடியும். அது சாத்தியப்படாதவை என்று கூறி காய்நகர்த்தல்களை செய்யாது போனால் எதிர்க்கட்சியின் நிலைமைகள் படுமோசமாகி விடலாம்.

நன்றி - தினக்குரல்
 கட்டுரையாளர்  சட்டத்தரணி ,
சுயாதீன தேசிய
முன்னணி  ஸ்லைசோ தலைவர், ஒலி, ஒளி பரப்பாளர்.

No comments:

Post a Comment