இறைவனைத்தேடி நாம் செல்வதுதான் பொதுவாக மக்களின் வழக்கம். ஆனால் அதற்கு மாறாக நாம் செல்லும் சாலைகளில் நமக்காக காத்திருக்கிறார்கள் கடவுளர்கள்.
வாசுகியின் மீது திருமால், குழலுடன் கண்ணன் , பழனிமலை முருகன், பிரமாண்ட பிள்ளையார்
என அத்தனை கடவுளர்களும் விதவிதமான வடிவங்களில் நிறங்களில் நம் இல்லத்துக்கு வந்துவிடும் ஆவலோடு சாலையோரங்களில்
தவம் கிடக்கிறார்கள் நமக்காக. அத்தனையும் கடவுளர் பொம்மைகள். அதனருகில் கடவுளை விற்கும் ஆர்வத்தில் கசங்கிய உடையும் ஒட்டிய வயிறுமாக சில மனிதர்கள். அவர்கள்தான் அந்த கடவுளர்களை உருவாக்கிய மனிதர்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் ஒரு தலைவர். ஆனால் இறைவனையே படைக்கும் இவர்கள் முகத்தில் மட்டும் சிரிப்பு என்பதை காணவே முடியவில்லை.
சின்னக் குடில், பிடித்த வண்ணத்தில் கூரை, வெயிலில் ஒய்வெடுக்கவும், மழையில் ஒதுங்கிக்கொள்ளவும் கூரையில் சிறு சிறு ஒட்டைகளுடன் கூடிய குடில் அல்லது கூடாரம். இதுதான் இவர்களின் மாளிகை. எல்லா ஊர்களின் நெடுஞ்சாலைகளிலும் இப்படி ஒரு கூட்டம் ஏழ்மையின் நிரந்தர முகவரியோடு இருக்கிறார்கள்.
மழைக்காலங்களில் இத்தைகைய குடிசைப் பகுதிகளை கடந்து செல்லும் போதெல்லாம் யாரோ காதுகளில் முகாரி ராகம் பாடுவதாகவே உணர்கிறோம். பெரும்பாலும் வடமாநிலத்தவர்களாகவே இருக்கிறார்கள் அதுவும் இன்றைக்கு.. நேற்று தமிழகத்தில் தஞ்சம் அடைத்தவர்கள் அல்ல. வயிற்றுப்பாட்டுக்கு கையில் கொஞ்சம் திறமையோடு, உழைப்பை நம்பி பல வருடங்களுக்கு முன் இங்கு வந்தவர்கள். இத்தனை வருடங்களில் வயதானதைதவிர அவர்கள் தோற்றத்தில் எந்த மாற்றமுமில்லை. வறுமை அப்படியே தொடர்கிறது.

ஊரின் ஒதுக்குப்புறத்தில் தங்கியபடி மேற்கூறிய கடவுளர்கள் பொம்மைகளை, குடும்பத்தினர் இணைந்து செய்கிறார்கள். பகல் இரவு என்று வேலை நேரம் ஒதுக்கிக்கொள்வது கிடையாது. பகலில் மக்கள் கூடும் இடங்களில் தங்கள் பொம்மைகளுக்கு கடைவிரிக்கிறார்கள். இதுவும் நிரந்தரமல்ல. ஒரு இடத்தில் இருந்து வெளியேறக் கேட்டுக் கொண்டால், அடுத்த இடம் தேடிப் பிடிக்கிறார்கள்.
சில பிரச்னைகளுக்குப்ப்பிறகு வேறு இடத்தில் தங்கவேண்டிய நிலை. பெரியவர்கள் வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடிக்கொண்டிருக்க, அவர்களின் பிள்ளைகள் கல்வியை இழந்து விடுகின்றனர். அவர்கள் நிச்சயம் பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. குழந்தைகள் படிக்க உதவி செய்வதாக யாரேனும் முன்வந்தாலும் நிரந்தர முகவரி இல்லாததால் அந்த உதவியை ஏற்கமுடியாத நிலை.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் தங்கியிருந்த சிலரிடம் பேசினோம்.
“யார் நீங்க என்ன வேணும்“ என்று நம் தமிழ் நடிகைகளை விட நல்ல தமிழில் பேசினர். முதலில் பேச மறுத்தவரின் கையில் இந்தியில் பச்சை குத்தப்பட்டிருந்த அவரது பெயரை குறிப்பிட்டு, 'உங்க பேரு மோகன் ராமா?' என்று கேட்டதற்கு, 'எப்படி தெரியும்?' என்று ஆச்சர்யப்பட்டார். உங்க கையில பச்ச குத்தியிருக்கு என்று சொன்னவுடன், இந்தி தெரியுமா என்று புன் சிரிப்பை உதிர்த்தபடி சற்று நெருக்கமாக பேசத்தொடங்கினார்.
"பன்னிரென்டு ஆண்டுகளுக்கு முன்பே ராஜஸ்தானில் இருந்து வந்துவிட்டோம். இது எங்கள் பரம்பரை தொழில். தாத்தா காலத்திலிருந்து இதைத்தான் செய்து வருகிறோம். ராஐஸ்தானில் தண்ணியில்லை. சுற்றிலும் காடு. அங்கு வாழ முடியாமதான் இங்க வந்தோம். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு செல்வோம். மற்றபடி வருடம் முழுவதும் இங்கேயேதான் இருப்போம்.
நீங்க பார்க்கிற இந்த மாதிரி சிலைகளையெல்லாம் செஞ்சு தள்ளுவண்டில தெருத் தெருவா போய் விற்போம். சில நேரத்துல 500 ரூபாய்க்கு விற்கும். சில நேரத்துல வெறுங்கையோடு திரும்புவோம்“ என்றார்.
“நவராத்ரி சீசனில்தான் நல்லா விற்பனையாகும். விநாயகர் சதுர்த்திக்கு பெரிய பெரிய விநாயகர் சிலைகளை செய்து விற்போம்.அங்க பாருங்க இந்த வருஷம் செஞ்சது எல்லாம் அங்க இருக்கு.கெமிக்கல்ல செஞ்சது. இதை தமிழ்நாட்டில இப்போ தடை பண்ணியிருக்காங்க“ என 7 அடி 8 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பிள்ளையார்களைக் காட்டினார்.

இதையெல்லாம் மகாரஷ்டிரா கொண்டு போய்தான் விற்க முடியும். சாக் பீசு பொடியை அச்சில் வார்த்து காயவைத்து பெயின்ட் அடிச்சு காயவைச்சு தயார் பண்ணுவோம். வெயில் காலத்துல பிரச்னை இல்லை. மழை காலத்துலதான் காயவைக்கிறது கஷ்டம். அதுமட்டுமில்லாம மழை அதிகமாகி அச்சில இருந்த சிலைகள் கரைஞ்சுதுன்னா, எங்க வருமானம் அதில கரைஞ்சுடும்ங்கறதால நாங்க மழைல நனைஞ்சாலும் பொருள்களை நனையாம காப்பாத்திருவோம்.
மழை ரொம்ப வந்துச்சுனா பக்கதுல இருக்க கடைத்தெருவுக்கு போய் படுத்துக்குவோம். அதுவும் பத்து மணிக்கு மேலதான். வேலை செய்றோம் ஏதோ சாப்டுட்டு இருக்கோம். முன்பெல்லாம் திருஷ்டி பொம்மைகளாவது அதிகமா விற்கும் இப்ப அதோட விற்பனையும் குறைஞ்சுருச்சு. அலங்கார பொருள்களாக மட்டுமே இத வாங்குவாங்க அதனால எப்ப எப்படி விற்கும்னு தெரியாது" என்றார் வெறித்த பார்வையுடன்.
ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்றால் அரசாங்கத்தை கழுவிலேற்றவும் தயங்காத நம்மிடையே, மின்சாரம் இன்றி வருடக்கணக்கில் வாழ்ந்தாலும் யாரையும் குறை சொல்லாமல், கிடைத்தைக் கொண்டு வாழ்கிறார்கள். இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியதும் இவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதும் நிறையவே இருக்கிறது.
தாங்கள் வடிக்கும் கடவுளர் சிலைகளுக்கு வர்ணங்களை பூசி, அதை அழகுப்படுத்தும் இவர்களின் வாழ்க்கையையும் அந்த கடவுள் ஒரு நாள் அழகுப்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந் து நகர்ந்தோம்.
குபேரன் பொம்மையை வீட்டின் பூஜை அறையிலிருந்தால் செல்வம் கொழிக்கும்.. ஏழ்மை நீங்கும் என்பதெ ல்லாம் காலம் காலமாக புழங்கி வரும் மூடநம்பிக்கைதான் என்பதை பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்து சொல்கிறது சாலையோரத்தில் குபேர பொம்மையை விற்கும் இந்த கைவினைக் கலைஞர் களைப் பார்க்கிறபோது! காரணம் அத்தனை குபேர பொம்மைகளும் இந்த குடிசைகளில்..!
நன்றி - விகடன்-
-பா.குமரேசன் (மாணவ பத்திரிக்கையாளர்)
No comments:
Post a Comment