இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Sunday, May 24, 2015

பூகோள அரசியலில் தமிழர்கள்!

பூகோள அரசியலை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணப்பாடு அரசியல் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்த காலம் தொட்டு இருந்து வருகின்றது. ஆனால், பூகோள அரசியலில் பிரதான கருவிகளில் ஒன்றாக கையாளப்பட்டு வந்துள்ள தமிழ் மக்கள், கருவி நிலையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை பெருமளவில் மேற்கொண்டதில்லை. அல்லது, அப்படியான முயற்சிகளை பிராந்திய வல்லரசு உள்ளிட்ட பூகோள அரசியலை தீர்மானிக்கும் சக்திகள் அனுமதித்தது இல்லை.   தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டங்களின் எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் பூகோள அரசியல் மாற்றங்களும், போக்கும் சம்பந்தப்பட்டு வந்திருக்கின்றது. அது, எந்த வித்தியாசமும் இன்றி அஹிம்சை வழிப் போராட்டங்களிலும், ஆயுத வழிப் போராட்டங்களிலும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. எந்த வழிமுறைப் போராட்டங்களாக இருந்தாலும், தமிழ் மக்கள் குறிப்பிட்டளவு அர்ப்பணிப்போடு போராடி வந்திருக்கின்றார்கள். அந்த அர்ப்பணிப்பை விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தம்மை சுற்றியுள்ள வலை தொடர்பில் அதிக தருணங்களில் தமிழ் மக்கள் புரிந்து கொண்டதில்லை. அதுதான், ஆங்காங்கு சிக்க வைத்திருக்கின்றது. அதில், முள்ளிவாய்க்கால் பேரழிவு என்றைக்குமே மறக்க முடியாத பாடம். கடந்த வாரம் (மே 15, 2015) யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்;கும் இடையில் அரசியல் விவாதமொன்று இடம்பெற்றது. விவாத ஒழுங்கமைப்பு, பார்வையாளர்கள் மத்தியில் வெளிப்பட்ட அதீத உணர்ச்சிவசப்படல்கள், கேள்விகளில் தெளிவின்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்த விவாதத்தின் குறைபாடுகளாக இருந்தாலும், கருத்தியல் ரீதியான விவாதமொன்றை ஆரம்பித்து வைத்தமை தொடர்பில் கவனம் பெற்றது. அந்த விவாதத்தின் போது, எம்.ஏ.சுமந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ் மக்கள் பூகோள அரசியல் போக்கினை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என்கிற எண்ணத்தினை வெளிப்படுத்தினார்கள். ஆனால், அதன் அணுகுமுறை தொடர்பிலேயே வேறுபாட்டினைக் காட்டினார்கள். (ஒட்டுமொத்த விவாதத்திலும் பெருமளவு கொள்கை- கோட்பாட்டியல்(!) ரீதியாக ஒரே புள்ளியிலேயே இருவரும் விவாதித்தார்கள். அணுகுமுறையில் தான் சிறிய மாற்றம் இருந்தது.) இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சார்ப்பு நிலையிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பலமாக முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது. சீனா சார்பு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை கடும்போக்கில் கையாண்டு வந்த நிலையில், அதனை மாற்றுவதற்கான தேவை இருந்தது என்று எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார். அதுதான், தமிழ் மக்களை பெருமெடுப்பில் வாக்களிக்க வைக்கவும் காரணமாகவும் இருந்தது.   1990களின் இறுதியிலும், 2000களின் ஆரம்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்ட ரீதியில் பெற்று வந்த வெற்றிகள் இலங்கை அரசினை மட்டுமல்ல, பிராந்திய வல்லரசான இந்தியாவையும் பெருமளவு அச்சுறுத்தின. அந்த அச்சுறுத்தலின் அளவினை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் உணர்ந்து கொண்டன. அதுவும், விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை வேகம் பெற வைத்தன.   தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வந்தாலும், ஆயுதப் போராட்டக்களம் நீண்டு செல்லும் போது ஏற்படும் களைப்பு அதிகமானது. அந்தக் களைப்பும், மேற்கு நாடுகளின் அழுத்தங்களும் இணைந்து விடுதலைப் புலிகளை 2002இல் போர் நிறுத்தத்துக்கு இணங்க வைத்தது. போர் நிறுத்தமும், தொடர்ந்து வந்த சமாதானப் பேச்சுவார்த்தைக் காலமும் இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை பலமிழக்கச் செய்வதற்கான கால இடைவெளியாக கையாளப்பட்டது. அதனை விடுதலைப் புலிகளோ, அவர்களின் ஆதரவு சக்திகளோ உணராமல் இல்லை. ஆனாலும், தவிர்க்க முடியாத நிலையில் சிக்கிக்  கொண்டார்கள்.   சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது செய்து கொள்ளட்ட ஒப்பந்தங்களின் போக்கில் இணக்கப்பாட்டுக்கு விடுதலைப் புலிகள் வந்திருந்தாலும் கூட, அவர்கள் வேறொரு வடிவில் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள் என்பது வேறுவிடயம். ஆனால், அதற்கான வாய்ப்பை வழங்காமல் மீண்டும் ஆயுதப் போராட்டம் எனும் விடயத்தினை தெரிவு செய்ததன் மூலம், குறுகிய காலத்துக்குள்  விடுதலைப் புலிகள் தமிழ் போராட்ட அரங்கிலிருந்து முற்றுமுழுதாக அகற்றப்பட்டார்கள். குறிப்பாக, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இந்தியாவும், மேற்கு நாடுகளும் விரும்பின. ஆனால், அதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு விடுதலைப் புலிகள் இணங்கவில்லை. மாறாக, தமிழ் மக்கள் வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை, சீனா சார்பு மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிபீடமேற்றியது. தங்களினால் ரசிக்க முடியாத ஒருவர் ஆட்சிபீடமேற்றப்பட்டது இந்தியாவுக்கும், மேற்குநாடுகளுக்கும் இன்னும் இன்னும் எரிச்சலை ஊட்டின. அது, நாம் ரசிக்காத மஹிந்த ராஜபக்ஷவுக்கே பெரும் ஒத்துழைப்புக்களை வழங்கி விடுதலைப் புலிகளை விரைவாக அழிக்க வைத்தது.   அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளுக்கு எதிரான பூகோள அரசியல் சக்திகள் (சீனா சார்ப்பு என்றும் கொள்ளலாம்) இலங்கை அரசியலில் வெளிப்படையாக அல்லது நேரடியாக தலையிடுவது போல எப்போதுமே காட்டிக்கொண்டது இல்லை. ஆனால், அவர்களின் தலையீடு என்பது தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கின்றது. இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி பீடமேறினாலும் மறைமுகமாக அதற்கு ஒத்துழைத்து வந்திருக்கின்றன. 2005 தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருந்தாலும் கூட, சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கும். ஆனால், அந்த ஆதிக்கத்தில் அளவு ஓரளவுக்கு குறைந்திருக்கும். இந்தியப் பிராந்தியத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் வெளிப்படுத்தும் மேலாதிக்கம் என்பது காலணித்துவ காலத்து மனநிலை. அந்த கையாள்கையே சில நேரங்களில் அவர்களை பூகோள அரசியலில் தோற்றுப்போகவும் வைத்திருக்கின்றது.   பூகோள அரசியலில் தெற்காசியப் பிராந்தியம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதேயளவுக்கு (ஈழத்) தமிழர்களும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள். தமிழ் மக்கள் தென் இந்தியா, வட இலங்கைப் பிராந்தியங்களில் பரவியிருக்காவிட்டால் இவ்வளவு இன்னல்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை என்கிற பேச்சு உண்டு. அதில், குறிப்பிடத்தக்களவிலான உண்மையும் இருக்கின்றது. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த முக்கியத்துவம் இருந்து வந்திருக்கின்றது.   பூகோள அரசியலில் தமிழ் மக்களின் முக்கியத்துவம் என்பது கருவி நிலைக்கு மாற்றப்பட்ட தருணமே பெரு வீழ்ச்சிகளை பெற்றுக் கொடுத்தது. கருவிகளாக இன்றி  கையாளுகைத் தரப்பாக மாறியிருந்தால் பெரு வெற்றிகள் சாத்தியப்பட்டிருக்கும். அல்லது, ஆதிக்கம் பெற்ற தரப்பாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கலாம். பல நேரங்களில் பூகோள அரசியலின் போக்கினை உள்வாங்குவதைத் தவிர்த்து சுயாதீனமாக நாம் செயற்படுகின்றோம் என்ற எத்தணிப்புக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தமையும் தோல்வியாக முடிந்து போயிருக்கின்றது. சுயாதீன எழுச்சி என்பது வரவேற்கப்பட வேண்டியதுதான், ஆனால், எம்மைச் சுற்றியுள்ள சக்திகளின் போக்குகள் தொடர்பில் அறிய மறுப்பது சரியான அரசியல் போக்கு அல்ல. அது, காலந்தோறும் எம்மை போட்டு மிதித்து வந்திருக்கின்றது.   பழைய கதைகளுக்கு அப்பால், இன்றைய சூழ்நிலைக்கு வந்தால் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வரையிலான காலம் வரை தமிழ் மக்களின் தேவை என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அவ்வளவு அவசியமாக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னரான மனநிலை என்பது தமிழ் மக்களை அடக்கி வைத்துவிட்டு தனக்குச் சார்பான ஆட்சியாளரை தாங்கிப் பிடிக்க வைத்திருக்கின்றது. இப்போது, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு மிச்சமிருக்கும் தேவை, பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கிவிடுவது. அதற்கான ஒத்துழைப்பையும் தமிழ்த் தரப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.   பேரழிவுகளிலிருந்து மீட்சி குறித்து சிந்திக்கத் தலைப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் வேகமாக முன்னோக்கி நகர வேண்டிய கால கட்டம் இது. வரும் பொதுத் தேர்தல் களம் முதல் அதன் பின்னரான நிகழ்வு மாற்றத்தினையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும். அதற்கு பூகோள அரசியலின் போக்கினை முற்றுமாக உணர வேண்டும். தமிழ் மக்களிடம் காலம் காலமாக யதார்த்த சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றுவதற்கான கால அவகாசம் இருந்ததில்லை. ஏனெனில், அதனை முந்திக்கொண்டு உணர்ச்சி மேலிடுகை முடிவுகளை எடுத்துவிடும். இப்போது, உணர்ச்சி மேலிடுகைக்கு பதிலாக யதார்த்த களத்தினை முன்னிறுத்தி வெற்றிகரமாக இயங்க வேண்டும். அதுவே, வெற்றிகரமான புள்ளியை நோக்கி நகர்த்தும்! - See more at: http://www.tamilmirror.lk/146516#sthash.SQO46IQg.dpuf

No comments:

Post a Comment