இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Wednesday, May 20, 2015

மாணவி வித்தியா படுகொலை! வரலாற்றுத் துயரமா? - திருப்பமா?

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகள், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், கவலையாகவும் மாறியிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்தச் சம்பவம் புதியதொரு திருப்பமாக மாறியிருக்கிறது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு, தனது நண்பனுடன் திரைப்படம் பார்த்து விட்டுத் திரும்பிய ஜோதி சிங் பாண்டே என்ற, கல்லூரி மாணவி புதுடில்லியில் ஓடும் பேருந்துக்குள் வைத்து ஆறு பேர் கொண்ட கும்பலால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர், வீதியில் தூக்கி வீசப்பட்டார்.
பல நாட்கள் உயிருக்காகப் போராடிய – நிர்பயா என்று அறிவிக்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
இந்தியாவில் அதற்கு முன்னர் வல்லுறவுச் சம்பவங்களோ, கூட்டு வல்லுறவுச் சம்பவங்களோ நிகழ்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது. ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், ஜோதி சிங் பாண்டேக்கு நிகழ்ந்த கொடூரம் இந்தியாவையே உலுக்கியது, கொந்தளிக்க வைத்தது.
அவருக்கு நீதி கோரும் போராட்டங்கள், காஷ்மீர் தொடக்கம் கன்னியாகுமரி வரை நடந்தன. வெளிநாடுகளில் இருந்து கூட ஆதரவுக் குரல்கள் எழுந்தன. இதன் விளைவு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டன.
ஜோதி சிங் பாண்டேக்கு நிகழ்ந்த கொடூரம் தான், இந்தியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு கூடுதல் தண்டனையை உறுதி செய்யக் காரணமாகியது. அது இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனைக்கு வித்திட்டது.
அதுபோலத் தான், புங்குடுதீவு மாணவி பலரால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட கோரம், இலங்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும், திருப்பத்தையும் ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது. அதற்கும் அப்பால் தமிழ்மக்களுக்கு சில படிப்பினைகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், வழிமாறி, திசைமாறி சென்று கொண்டிருந்த இளைஞர் சமூகத்தை சரியான வழிக்குத் திசை திருப்புவதற்கான ஒரு திருப்புமுனையாக இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதற்காக, ஒரு மாணவி சிதைக்கப்பட்ட கொடூரத்தை, தமிழ்ச்சமூகம் விலையாக கொடுக்க நேரிட்டுள்ளது
துரதிர்ஷ்டம். போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர் சமூகத்தில் மது, உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்கள் மோசமாகப் பரவியுள்ளன. இது ஆபத்தான திசையில் சென்று கொண்டிருப்பதாக அண்மைக்காலங்களாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
பாடசாலை மாணவர்களைச் சீரழிக்கும் வகையில், போதைப்பொருட்கள் பரவி வருவதாக தமிழ் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
இளைய சமுதாயத்தை திட்டமிட்டுச் சீரழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதான சந்தேகம், தமிழ்ச்சமூகத்துக்கு இருந்து வந்த சூழலிலேயே, வித்தியா என்ற மாணவி அதற்குப் பலியாக நேரிட்டுள்ளது. வித்தியாவுக்கு நிகழ்ந்த கொடூரம், அவரது சுற்றத்தாராலேயே நிகழ்த்தப்பட்டது,
ஆனால் அனைவருமே, போதையில் இதனைச் செய்திருக்கின்றனர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஒருவகையில் இந்தக் குற்றம் திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும், இதனைப் போதைக்கு அடிமையான ஒரு கும்பலின் வெறிச்செயலாகவும் பார்க்க வேண்டியது அவசியம்.
போதையில்லாத ஒரு சூழலில், இவ்வளவு பேர் இந்தக் குற்றத்துக்குத் துணைபோயிருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது. இந்தச் சம்பவத்துக்கு ஆணாதிக்க வன்முறை மட்டும் காரணமில்லை. அவர்களிடம் இருந்த போதைப்பொருள் பழக்கமும் முக்கிய காரணம்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு கிழக்கிலுள்ள இளைஞர்களை திசை திருப்பி விடுவதற்காக, அவர்கள் திட்டமிட்டே போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இன அழிப்பு முறையாக இது கையாளப்பட்டு வருகிறது.
இதன் உண்மையையும், தார்ப்பரியத்தையும் புரிந்து கொண்டிருந்தாலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கட்டுப்படுத்தாமலோ அல்லது கட்டுப்படுத்த முடியாமலோ உள்ளனர் என்பதே யதார்த்தம். வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் பணம் அல்லது, திட்டமிட்டே சமூகத்துக்குள் ஊடுருவச் செய்யப்பட்டுள்ள புல்லுருவிகளால், பாய்ச்சப்படும் நிதி, இளைய சமூகத்தை, தவறான வழிக்கு இட்டுச் செல்லும் காரணமாகியுள்ளன.
பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகள் மீதான கட்டுப்பாட்டை பேண முடியாத நிலையில் இருப்பது துரதிர்ஷ்டம். போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகி விட்ட நிலையில் தான் பலரும் இப்போது விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியெல் லாம் நிகழ்ந்ததில்லையே என்று ஏங்குகின்ற போக்கு அதிகரித்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் கூட, தமிழ் உறுப்பினர்களால் இதுபற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இருந்த காலகட்டத்தில், கடுமையான தண்டனைகள் நடை முறையில் இருந்ததால், வடக்கில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்து போயிருந்தது.
ஆனால், இப்போது குற்றம் செய்தவர்கள் இலகுவாகத் தப்பிக்கும் பொறிமுறைகள் இருப்பதாலும், குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவோர் அதிகரித்திருப்பதாலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
புங்குடுதீவு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு சட்டம், ஒழுங்கு சீரழிவு மற்றொரு காரணம். மாணவி காணாமற்போனவுடன், காவல் நிலையத்துக்கு முறையிடச் சென்றிருந்த பெற்றோரை, உளவியல் ரீதியாக நோகடித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பி அனுப்பியிருந்தனர் பொலிஸார்.
சடலமாக மாணவி மீட்கப்பட்டு மூன்று மணிநேரம் கழித்தே பொலிஸார் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தனர். இதுபோன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகளில் உள்ள பெரும் ஓட்டைகள், குற்றங்களுக்கு ஏதுவாக மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் அமைந்து விடுகிறது.
புங்குடுதீவு சம்பவத்துக்கு பொலிஸாரின் அசமந்தப் போக்கு முக்கிய காரணம். பொலிஸாரின் பொறுப்பற்ற தனத்துக்கு தமிழ்ச் சமூகம் பெரிய விலைகளைக் கொடுக்க நேரிட்டுள்ளது. இதன் விளைவாக, மாணவி வித்தியா படுகொலைக்கு நீதி கோரி தமிழ்மக்கள் வீதிக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மாணவர்களும், பொது அமைப்புகளும் வீதியில் இறங்கி அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்தினர்.யாழ்ப்பாணத்தில் தொடங்கிய போராட்டங் கள், பின்னர் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் பரவலாக நடந்தேறியதுடன், மலையகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும், போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களில் முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து கொண்டது மற்றொரு திருப்பம்.
சவூதியில் அநியாயப் பலியெடுக்கப்பட்ட ரிஸானாவுக்கு ஆதரவாக தமிழ்ச் சமூகம் குரல் கொடுத்தது போன்று, புங்குடுதீவு வித்தியாவுக்கு நீதி கேட்டு முஸ்லிம்கள் பரவலாக நடத்திய போராட்டங்கள், நீடித்து நிற்கும் சகோதர இனப்பிணைப்புக்கு சாட்சியாகும்.
வடக்கு கிழக்கில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய வித்தியா படுகொலை, தமிழ்ச் சமூகத்தின் தன்னெழுச்சியை அடக்குவதில், காட்டப்படும் தீவிர அக்கறையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளே இதற்கு சாட்சி.
நீதிகோரும் போராட்டங்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்த போது, அவற்றைக் குழப்பும் வகையில், யாழ்.நீதிமன்றம் முன்பாக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தச் சம்பவம் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டதாகவே பெரும் சந்தேகம் தோன்றியிருக்கிறது. இந்த வன்முறைகளை அடுத்து, பாதுகாப்புக்காக இராணுவத்தை அழைக்கும் சதித்திட்டம் ஒன்று இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மைய அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர், வடக்கின் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இருந்து, இராணுவம் கணிசமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு சூழலில், அவர்களை மீண்டும் பாதுகாப்புக்காக அழைக்கும் முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை மீண்டும் இறக்குவதற்காக வன்முறைகள் தூண்டிவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய கேள்விகள் மக்களிடையே எழுந்திருக்கின்றன.
ஒரு பக்கத்தில் வித்தியாவுக்கு நீதி வேண்டிய போராட்டங்கள் அமைதி வழியில் நடந்து கொண்டிருக்க, அத்தகைய போராட்டங்களை சிதைக்கும் நோக்கிலேயே, அது வன்முறையாக மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த வன்முறைக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முற்றிலும் தொடர்பில்லை என்று கூற முடியாது. ஒரு பகுதி தமிழ் மக்கள் இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ துணைபோயிருக்கின்றனர். எங்கிருந்தோ இயக்கப்பட்ட ஒரு செயலுக்கு தமிழ்ச் சமூகமும் கருவியாக்கப்பட்டது.
அதன் விளைவாக, கடுமையான சட்டங்களின் ஊடாக அந்த வன்முறை அடக்கப்படும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, இந்த வன்முறைகளை, தெற்கிலுள்ள சிங்களப் பேரினவாத சக்திகள், இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான அடித்தளமாக பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளன. இது ஆபத்தான நிலைக்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் அபாயமும் உள்ளது.
முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை, வைத்துக் கொண்டு அங்கு புலிக்கொடி ஏற்றப்பட்டதாக கதை கட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வன்முறைகளை அடுத்து, இப்படித் தான் புலிகள் ஆரம்பத்தில் தாக்குதல்களைத் தொடங்கினர், எனவே பொலிஸார் கவனமாக இருக்க வேண்டும் என்று விஷம் கக்கத் தொடங்கியிருக்கிறார்.
இவையெல்லாம் இந்த வன்முறைச் சம்பவத்தின் அடிப்படை நோக்கத்தை விளங்க வைக்கின்றன. சிங்களப் பேரினவாத சக்திகளின் சதித்திட்டத்துக்கு தமிழ்ச் சமூகம் பலியாகவும் துணைபோகவும் நேரிட்டுள்ளது பரிதாபம். தமிழ் மக்களிடையே இயல்பான எழுச்சி ஏற்படுவதை தடுக்க துரித கதியில் எப்படிச் செயற்படுவதென்று தயாரிப்புகளுடன், அதிகாரச் சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை இது வெளிப்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, தமிழ்மக்களின் அமைதிவழிப் போராட்டங்கள் தீவிரம் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு வித்தியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே காரணமல்ல. வழிதவறும் தமிழ்ச் சமூகத்தை சரியான வழிக்குத் திருப்ப வேண்டும் என்ற ஆதங்கமும் தான் என்பதை மறுக்க முடியாது.
தமிழ் மக்களை சீரழிக்கும் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் தரப்பு உரிய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இதனால், சரியான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இல்லாமல் போயுள்ளது.
தமிழ் மக்களுக்கு சட்ட ரீதியாக சரியான நிவாரணங்கள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. இப்போதும், அந்த நிலை மாறவில்லை. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, சட்டம், ஒழுங்கைப் பேணும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.
அந்த வகையில், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் அவசியத்தையும், புங்குடுதீவுச் சம்பவம் வலியுறுத்தியிருக்கிறது.
வித்தியா படுகொலை என்பது ஒரு வரலாற்றுத் துயராகவே நிகழ்ந்திருந்தாலும் வரலாற்றுத் திருப்பம் ஒன்றுக்கான வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது போலவே தெரிகிறது.
என்.கண்ணன்

No comments:

Post a Comment