இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Monday, January 19, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில்; சுகாதார அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன தாம் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த நவம்பர் 21ஆம் திகதி அறிவித்த பின்னர் மறுநாள் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜபக்ஷ, அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர், வெளிநாட்டு
சதியொன்றின் விளைவாகவே மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினர். பின்னர் அவர்கள் எதிர்க் கட்சி வேட்பாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருப்பதாக கூறினர். வடக்கில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறுவதற்கும் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதற்கும் எதிர்க் கட்சியினர், தமிழ்த்; தேசியக் கூட்மைப்புடன்
உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாகவும் கூறினர். ஆனால், மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட உடன் அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அதே அமைச்சர்கள் மைத்திரிபாலவின் 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக கூறினர். இது எவ்வளவு கேவலமான அரசியல் என்பதை விளங்கிக் கொள்வது கடினமான விடயம் அல்ல. நேற்று மைத்திரிபால சதிகாரர், தமிழர்களுக்கு நாட்டை தாரைவார்த்து கொடுக்க முற்படுபவர், ஆனால், அடுத்த ஒரு நாளில் அவரது வேலைத் திட்டத்தை ஆதரிக்க இவர்கள் முன்வருகிறார்கள். மைத்திரிபால சதிகாரர் என்றால் அவர் தமிழர்களுக்கு நாட்டை தாரைவார்த்து கொடுப்பவராக இருந்தால் அவர் பதவிக்கு வந்தால் இந்த தேசபற்றாளர்கள் முன்னரை விட பலமாக போராட வேண்டும். ஆனால், இவர்கள் அவரது வேலைத் திட்டத்தை ஆதரிக்கிறார்கள். இது, தாம் இனவாதத்தை தூண்டியதாக அவர்களே ஏற்றுக் கொள்வதாகும். தேர்தலுக்குப் பின்னரும் மேலும் பலர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கைவிட்டுவிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து கொண்டனர். அவர்களுள் மைத்திரிபாலவை கடுமையாக சாடியவர்களும் உள்ளனர். மைத்திரிபால, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புடன் சதி செய்வதாக கூறியவர்களும் உள்ளனர். மைத்திரிபால ஜனாதிபதியானவுடன் அவர்கள்,  அவருடன் இணைந்து கொள்வதானது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, அவர்களிடம் அரசியல் நாகரிகம் மட்டுமன்றி வெட்கமும் இல்லாமையையே அது காட்டுகிறது. அவ்வாறு கட்சி தாவியவர்களுள் ஒரு முறை ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்குத் தாவிவிட்டு மீண்டும் பழைய கட்சிக்கே தாவியவர்களும் உள்ளனர். தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் அவ்வாறானவர்களாவர். அவர்களும் சில ஊடகங்களும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆரூடம் கூறிய சோதிடர்களும் இப்போது நகைப்புக்குள்ளாகியுள்ளனர். இது அரசியல்வாதிகளின் நிலைமை மட்டுமல்ல அரச ஊடகங்களின் நிலையும் இது தான்;. அந்த ஊடகங்களும் வெளிநாட்டு சதியைப் பற்றியும் தமிழர்களுடனான சதியைப் பற்றியும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. அதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களைப் பற்றி அச்சத்தை ஊட்டி அவ்விரு சாராரையும் மேலும் பிரித்தன. ஆனால், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட உடன் அவரை போற்றிப் புகழ ஆரம்பித்தன. இதைப் பற்றி அரச ஊடகங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களை குறை கூறிப் பயன் இல்லை. அது தான் அந்த நிறுவனங்களின் கலாசாரம். அவர்களுக்கு அந்த கலாசாரத்திலிருந்து வெளியேற முடியாமல் இருப்பதை புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்கள் நடந்து கொள்ளும் முறையை பார்த்தால் தெளிவாகிறது. தேர்தலுக்குப் பின்னரும் பழைய தலைவர்கள் தொடர்ந்தும் இனவாதத்தை தூண்டுவதை பார்த்தால் வெறுப்பாகவே இருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் தம்மை சந்திக்க தங்கல்லையில் உள்ள தமது 'கால்டன்' இல்லத்துக்கு வந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால 'ஈழத்தின்' வாக்குகளால் வெற்றி பெற்றதாக கூறுவதை சில ஊடகங்கள் காட்டிய வீடியோக்களில் காணக்ககூடியதாக இருந்தது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களில் மிகச் சிலரைத் தவிர அனைவரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்ததையே அவர் இதன் மூலம் குறிப்பிடுகிறார். ஆனால், தமக்கும் வட பகுதி மக்களில் ஒரு சாரார் வாக்களித்திருந்ததை அவர் மறந்து விட்டார் போலும். நீண்ட காலமாக அரச கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கணிசமான அளவில் வாக்குகள் கிடைத்திருந்தன. அவரது கருத்துப் படி அவையும் ஈழத்தின் வாக்குகளாகவே இருக்க வேண்டும். அம்மக்கள் அவருக்கு வாக்களித்தது மட்டுமல்லாது அவரும் வட பகுதிக்குச் சென்று மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தமிழ் மக்கள் 'ஈழத்தின்' மக்கள் என்று அவர்களை அந்நியப்படுத்தும் ராஜபக்ஷ அம்மக்களிடம் ஏன் வாக்குக் கேட்க வேண்டும்? சிங்களவர் ஒருவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காக தமிழ் மக்கள், சிங்கள மக்களுடன் இணையும் போது அந்த தமிழர்களை 'ஈழத்தின்' மக்களாக குறிப்பிட்டு அந்நியப்படுத்துவதாக இருந்தால் அதன் மூலம் அவர் எதனை எதிர்ப்பார்க்கிறார் என்பது கேள்விக்குறியாகும். அந்த தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைகிறார்கள், ராஜபக்ஷ, அவர்களை தமது நாட்டின் பிரஜைகளாக ஏற்றக் கொள்ள மறுக்கிறார். அது தான் பிரிவினைவாதம். மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல, மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜாதிக்க ஹெல உறுமயவில் இருந்து விலகி 'பிவிதுரு ஹெல உறுமய'வை உருவாக்கியவருமான உதய கம்மன்பிலவும் அவ்வாறே கருத்து வெளியிட்டு இருந்தார். மைத்திரிபால வெற்றி பெற்றவுடன் ராஜபக்ஷவின் தோல்வியைப் பற்றி தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். அதைப் பற்றிக் குறிப்பிட்ட கம்மன்பில, புலி ஆதரவாளர்கள் மைத்திரிபாலவின் வெற்றியை ஆதரிக்கிறார்கள் என்ற கருத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால,; அவர் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் போன்றோர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் மக்களை கேட்டுக் கொண்டதைப் பற்றி எதனையும் கூறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களை விட அனந்தி தீவிரப் போக்கு கொண்டவர் என்பது எல்வோரும் அறிந்த உண்மையாகும். அதேவேளை அனந்தியின் பகிஷ்கரிப்புக் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் 2005ஆம் ஆண்டு புலிகளின் ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் விளைவாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதைப் போலவே இம் முறையும் அவரே வெற்றி பெற்றிருப்பார் என்பதும் எல்வோரும் அறிந்த விடயமாகும். எனவே, வைகோ தேர்தல் முடிவுகளை பாராட்டுவதால் மைத்திரிபால புலிகளுக்கு சாதகமானவர் என்று வாதிட முடியும் என்றால் அனந்தியின் பகிஷ்கரிப்புக் கோரிக்கையை பாவித்து புலி ஆதரவாளரான அனந்தி, மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவாக செயற்பட்டார் என மற்றொருவரும் வாதிட முடியும். ஆனால், இவ்வாறு நடுநிலையாக பிரச்சினையை அணுகாமல் கம்மன்பில தமிழ் விரோதத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறார். வேறு விதமாக கூறுவதாக இருந்தால் அரசியல் இலாபம் தேடுவதற்காக தமிழ் விரோதத்தை தூண்டுகிறார். கம்மன்பில போன்றோர் இது போன்ற வாதங்களால் தமிழ், சிங்கள மக்களிடையே மனோநிலை ரீதியில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இவர்கள் போன்றோர் இவ்வாறு கருத்து வெளியிடும் போது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமாகிறது. ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர்கள் இந்தத் தேர்தலின் போது அவ்வாறு இனவாதம் பேசவில்லை. ஏனெனில், அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்ப்பார்த்தார்கள். அவர்களும் மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் இருந்திருந்தால் அவர்களும் இவ்வாறே இனவாதம் பேசியிருப்பார்கள். இது தான் இந்த நாட்டின் அரசியல்வாதிகளின் தேசப்பற்றும் இனப்பற்றும். மைத்திரிபால, தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்த இரண்டாவது ஜனாதிபதியாவார். அவ்வாறு பதவிக்கு வந்த முதலாவது ஜனாதிபதி 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க. புலிகள் பலமாக இருக்கும் போதே வடக்கு, கிழக்கு பகுதி வாழ் தமிழ் மக்கள் அவ்வாறு சந்திரிகாவுக்கு வாக்களித்தார்கள். புலிகள் அதனை தடுக்கவில்லை. இப்போது தமிழ் மக்களை அந்நியப்படுத்திப் பேசும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களும் சந்திரிகாவுக்கு தமிழ் மக்களிடம் இருந்து கிடைத்த அந்த ஆதரவை விமர்சிக்கவில்லை. ஏனெனில் அவர்களும் அப்போது சந்திரிகாவின் அணியிலேயே இருந்தார்கள். இந்தத் தேர்தல், வேறு முக்கிய இரண்டு விடயங்களையும் புலப்படுத்துகிறது. முதலாவதாக, போஸ்டர், கட்டவுட் போன்வையின்றி தேர்தலொன்றில் வெற்றி பெற முடியாது என்ற கருத்தை இந்தத் தேர்தல் முடிவு பொய்ப்பித்துள்ளது. ஒரு தேசிய மட்டத்திலான தேர்தலாக இருந்தும் மைத்திரிபால சார்பில் ஆங்காங்கே ஒரு சில சிறிய போஸ்டர்கள் மட்டுமே காணப்பட்டன. பதாகைகள் மற்றும் கட்டவுட்கள் இருக்கவேயில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவுக்காக நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்காகவும் போடப்பட்டு இருந்த கட்டவுட்களுக்காகவும் மில்லியன் ரூபாய்க்கள் அல்ல, பல பில்லியன் ரூபாய்க்கள் செலவாகியிருக்கும். ஆனால், அவை பயனளிக்கவில்லை. இரண்டாவதாக 'ரணில்ட பே' (ரணிலுக்கு முடியாது) என்று முன்னால் ஆளும் கட்சியினாலும் சில ஐ.தே.க.காரர்களாலும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு இருந்த கருத்தும் இந்தத் தேர்தல் முடிவுகள் பொய்ப்பித்துள்ளன. 2001ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐ.தே.க. பொதுத் தேர்தலொன்றில் வெற்றி பெற்று 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஏறத்தாழ அவர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தான் இந்த கருத்து பரபப்பப்பட்டு இருந்தது. (2005 ஆம் ஆண்டு புலிகளின் பகிஷ்கரிப்பு இல்லாதிருந்தால் விக்கிரமசிங்கவே வெற்றி பெற்றிருப்பார்.) ஆனால், இந்த முறை அவர் போட்டியிடாவிட்டாலும் அவரது திட்டத்தினால் பதவியில் இருந்த ஜனாதிபதி ஒருவரே வீழ்த்தப்பட்டுள்ளார். இறுதியில் பதவியை விட்டு போகும் போது தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்க வேண்டியிருந்ததும் விக்கிரமசிங்கவிடமே. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு முடியும் தருவாயில் தாம் தோல்வியடைந்து இருப்பதை அறிந்த மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி அம் முடிவுகளை இரத்துச் செய்து இராணுவத்தின் உதவியுடன் பலாத்காரமாக பதவியில் இருக்க முற்பட்டதாகவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அதற்கு இணக்கம் தெரிவிக்க, இராணுவத் தளபதியும் பொலிஸ் மா அதிபரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் அம் முயற்சியை அவர் கைவிட்டதாகவும் பின்னர் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதைப் போல் விக்கிரமசிங்கவை அழைத்து தாம் பதவியை விட்டு விலகுவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்திலேயே அவர் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பாதுபாப்பு வழங்குமாறு விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். அவரது நிலைமை எதேச்சாதிகார ஆட்சியாளர்களுக்கு சிறந்த பாடமாகும். தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யும் ராஜபக்ஷவின் அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இன்று நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும் நிலை ஏற்பட்டிருக்கும். அதேவேளை அவர் வெற்றி பெற்றிருந்தால் இன்று மைத்திரிபால சிறிசேன, ராஜித்த சேனாரத்ன, அத்துரலியே ரத்தன தேரர், போன்ற பலர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கவும் கூடும். தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலரும் இம்சிக்கப்பட்டு இருக்கக்கூடும். இப்போது புதியதோர் நிலைமை நாட்டில் உருவாகியிருக்கிறது. மைத்திரிபால, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அக் கட்சியைச்சேர்ந்த  சிலர் அவரது அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். அக் கட்சியின் பெரும்பாலானவர்கள் எதிர்க் கட்சியில் இருக்கிறார்கள். அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் எந்தப் பக்கத்தில் அமரப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மறுபுறத்தில் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டில் சகல கட்சிகளினதும் ஆதரவு இருப்பதால் அவர் விரும்பினால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்தல் உட்பட சகல தேர்தல் வாக்குறுத்களையும் நிறைவேற்ற முடியும். அல்லது நன்றி கெட்டவராக ஐ.தே.க.வை கைவிட்டு ஸ்ரீ.ல.சு.க., மு.கா, ஹெல உறுமய போன்ற கட்சிகளோடு சேர்ந்து கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்னர் இருந்த நிலைமையை உருவாக்கவும் முடியும். வாக்குறுதிகளை உதறித் தள்ளி விடவும் முடியும். எல்லாம் அவரது விருப்பத்திவேயே தங்கியிருக்கிறது. ஆனால், அதன் பிரதிபலனையும் அவர் அடுத்த பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.

எம்.எஸ்.எம்.ஐயூப்

No comments:

Post a Comment