இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Thursday, January 1, 2015

கூட்டமைப்பின் முடிவு!

ரகசியமாகவோ, பின்கதவு வழியாகச் சென்றோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அவ்வாறானதொரு தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இடம்பெறும் பேச்சுகளும் பெறப்போகும் தீர்வும் வெளிப்படையானவையாக இருக்கவேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.' இரா.சம்பந்தன் (டிசெம்பர் 30, 2014
கொழும்பு)பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வடக்கில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் அனைவரையும் கவனிக்க வைக்கும் ஊடக  மாநாடொன்றை நடத்தியது. இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.  அந்த ஊடக மாநாட்டிலேயே, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் நிலைப்பாடு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 18வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னணியில் நாடு எதிர்கொண்டிருக்கும் ஜனநாயக விரோத சூழல் பற்றிய தெளிவுபடுத்தல்களோடு கூடிய அறிக்கையை முன்வைத்துவிட்டே, பொது எதிரணியின் வேட்பாளரை ஆதரிக்கின்றோம் என்று இரா.சம்பந்தன் அறிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும் என்பது நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, சிங்கள மக்களுக்கும் கூட. ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னிறுத்தி தென்னிலங்கைச் சூழலில் அதிகம் பேசப்பட்டுவிட்டது. இரகசிய ஒப்பந்தங்கள், புலிக்கூட்டு என்கிற விடயங்களை எந்தவித அடிப்படைக் காரணங்களும் இன்றி தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்தது.   இதன் அடுத்த கட்டமாக தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சி நேர்காணலின் போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது எதிரணி ஒப்பந்தமொன்றை செய்திருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் என்கிற விடயம் தென்னிலங்கை அரசியலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுத்தரும் பிரம்மாஸ்திரம். ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்வதென்பது (வெளிநாட்டு) புலிகளுடனும் நாட்டில் பிரிவினையை எதிர்பார்க்கும் சக்திகளுடனும் ஒப்பந்தங்களைச் செய்வது என்ற கருத்தியல் தென்னிலங்கையில் பெருமளவில் விதைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், அந்தக் கருத்தியலைத் தோற்கடித்து தென்னிலங்கை மக்களை வெற்றிகொள்வது தான் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும். சிங்கள பௌத்த தேசியவாதம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் தமிழர் விரோத சிந்தனைகள் திரும்பவும் மேலெழுந்து நிற்கின்ற இப்போதைய தேர்தல் காலத்தில் அதனை எவ்வாறு சாதாரண சிங்கள மக்கள் எதிர்கொள்கின்றார்கள் என்று சிந்திக்க வேண்டியிருக்கின்றது.   சில மாதங்களுக்கு முன்னர் வரையிலும், பௌத்த அடிப்படைவாத பொது பல சேனா, சிங்கள மக்களிடம் வெற்றிருந்த அபிமானத்தை இப்போது காண முடியவில்லை. மாறாக, பொது பல சேனாவுக்கு எதிராக பெருமளவான சிங்கள இளைஞர்கள் பொதுத்தளத்தில் கருத்தியல் போரினை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது எவ்வாறானது என்றால், நாட்டில் மீண்டுமொரு வன்முறைச் சூழலை தோற்றுவிக்கும் சாத்தியப்பாடுகளை மறுதலிப்பதன் பிரகாரம் வெளிப்படுவது.   பொது பல சேனா தன்னுடைய வரவேற்பை தென்னிலங்கையில் இழந்துவரும் நிலையில், சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனைகளினால் மிகவும் தெளிவாக கட்டமைக்கப்பட்ட ஜாதிக ஹெல உறுமய தன்னுடைய அபிமானத்தை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இது, சிங்கள பௌத்த தேசியவாதத்தை சாதாரண சிங்கள மக்கள் இருவேறு கோணங்களில் அணுகுகின்றார்கள் என்று கொள்ள முடியும். ஆனால், மீண்டும் வன்முறைகள் ஆரம்பித்து அமைதியற்ற சூழல் உருவாகுவதை யாரும் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த சிறிய வேறுபாடுதான் தென்னிலங்கையில் இன்றைக்கு உள்ளது. இது, பொது எதிரணியை பெரும்பாலும் அடுத்த கட்டம் நோக்கித் தள்ளுவதற்கு உதவலாம்.   பொது எதிரணி புலிகளுடன் இரகசிய ஒப்பந்தத்தை செய்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தென்னிலங்கையில் அதிகமான முழங்கினாலும் அது அவ்வளவுக்கு எடுபடாமலிருப்பதற்கு காரணம், பொது எதிரணியிலுள்ள சிங்கள பௌத்த தேசியவாதிகளும், அவர்களின் பெரும் மூர்க்கமும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆளும் கட்சியிலிருந்து விலகி வந்த நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட தலைவர்களே சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பெரும் (பரம்பரைக்) குறியீடுகள். சிங்கள  அடிப்படைவாத இளைஞர்களிடமே அவர்களுக்கு அபிமானம் உண்டு. அது, அவர்களின் தந்தை வழியில் வந்தாலும், அவர்கள் தங்களுடைய அரசியல் காலத்திலும் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் பிரதிபலித்தும் முன்னிறுத்தியும் வந்திருக்கின்றார்கள். இன்னொருபுறம், ஜாதிக ஹெல உறுமய என்கிற கட்டமைக்கப்பட்ட பௌத்த தேசியக் குழு. (இது சின்ன உதாரணம் தான்) இப்படிப்பட்டவர்கள் ஆளுமை செலுத்தும் பொது எதிரணியை நோக்கி புலிக்கூட்டு, இரகசிய ஒப்பந்தங்கள் என்கிற விடயத்தை முன்னிறுத்தும் போது அது வலுவிழந்து போவது இயல்பானது. ஆக, ஆளும் கட்சியின் 'இரகசிய ஒப்பந்தங்கள்' கருத்தியல் தென்னிலங்கையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அதுபோக, மைத்திரிபால சிறிசேன, தான் யாருடனும் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்யவில்லை என்று ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் பேசிக் கொண்டிருக்கின்றார்.   இவ்வாறானதொரு நிலையில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மைத்திரிபால சிறிசேனவுக்கான தன்னுடைய ஆதரவினை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. இது, அரச ஊடகங்களினால் பெரும் முனைப்போடு சிங்கள மக்களை நோக்கி திருப்பத் திரும்ப பெரும் 'புலிப்பூதமாக' முன்னிறுத்தப்படலாம். ஆனாலும், இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை வெளியிட்டு ஆற்றிய உரையில் மிகவும் தெளிவாக விடயங்களை முன்னிறுத்தியிருக்கின்றார். அதனைத் தான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கின்றேன்.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து வெளியேறி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக  முடிவை வெளியிட்டு இரண்டு நாட்களிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னுடைய முடிவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் மைத்திரிபால சிறிசேனவுக்கான வெளிப்படையான ஆதரவினை ஆதரிக்கும் தமிழ் ஊடகச் சூழலும், இளைஞர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவினை அவ்வளவுக்கு ரசிக்கவில்லை. அது, தேர்தலில் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தின் பிரகாரம் எழுவது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது. அதனைப் பிரதிபலிக்க வேண்டிய தேவை அவர்களைப் பிரதிநிதித்துவப்படும் கட்சிகளுக்கும் உண்டு என்பதுவும் வெளிப்படையானது. ஆனால், மைத்திரியின் வருகையோடு மாறிய தேர்தல் களத்தில் சடுதியான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.   இந்த நிலையில், ஒரு கட்டம் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதி காக்க வேண்டிய தேவை இருந்தது என்பது உண்மை. ஆனால், அந்தக் கட்டம் ஒரு புள்ளியில் அற்றுப்போனது. அதுவும், சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்களின் வெளிப்படையான நிலைப்பாடு தெரிந்த பின்னர், அமைதி காப்பது அவசியமற்றது. அதுபோக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய முடிவினை வெளிப்படையாக அறிவிக்கும் ஊடக மாநாடு என்பது பொது எதிரணியின் தேவையாகவும் இருந்தது. அது எவ்வாறானது என்றால், 'இரகசிய ஒப்பந்தங்கள், திட்டங்கள், கூட்டுக்கள் ஏதும் யாருடனும் இல்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு  ஒருங்கிணைந்த நாட்டுக்குள் அனைத்து மக்களின் அபிமானத்துடனும் வெளிப்படையாகப் பெறப்பட வேண்டியது' என்பதுவும் ஆகும். இது, சிங்கள மக்களிடம் சில தெளிவூட்டல்களைச் செய்யும் என்பது பொது எதிரணியின் எதிர்பார்ப்பு.   இதில், குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் இருக்கின்றது. அது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதித் தேர்தல் களம் பேசுவதை விரும்பவில்லை என்கிற விடயத்தையும், அதனை அறிந்து கொண்டிருக்கின்ற தமிழ்ச் சூழல் அதைப் பெரும்பாலும் தன்னுள் உள்வாங்கி அமைதி காப்பதும் ஆகும். தென்னிலங்கை ஆட்சியாளர்களோடும், அரசாங்கங்களோடும் தொடர்ந்தும் மல்லுக்கட்ட வேண்டிய சூழல் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் என்றைக்குமே புறந்தள்ளவில்லை. அதை மறுதலித்துவிட்டு இந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்ளவில்லை. ஆக, தென்னிலங்கை தேர்தல் அரசியல் சூழல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக பேசுவதை எவ்வளவு விரும்பவில்லையோ, அதேயளவுக்கு அந்த விடயத்தை முன்னிறுத்தினால் தேர்தலில் தாம் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்காமல் போய்விடுமோ என்று தமிழ் பேசும் மக்களும் அஞ்சுகின்றார்கள். அதனை உணர்ந்துதான் உள்வாங்கி அமைதியாகிவிட்டார்கள். இனப்பிரச்சினை பற்றி வெளிப்படையாக பேச அனுமதிக்காத ஜனாதிபதித் தேர்தல் சூழல் படு மோசமானதுதான். ஆனாலும், சில எதிர்பார்ப்புக்களின் போக்கில் தவிர்க்க முடியாமல் தமிழ் பேசும் மக்கள் அமைதிகாக்கிறார்கள் என்பதுதான் உண்மையாது.   முன்னோக்கிச் செல்வதற்கான நல்மாற்றங்களை வழங்கும் என்ற நம்பிக்கையுடனேயே ஒவ்வொரு புது வருடத்தையும் நாம் எதிர்கொள்கின்றோம். அந்த நம்பிக்கை பொய்த்தாலும் அடுத்த வருடத்தையும் புதிய நம்பிக்கைகளுடன் எதிர்கொள்வது மனிதனின் இயல்பு. அப்படித்தான், இன்று பிறந்திருக்கின்ற 2015யும் எதிர்கொள்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கின்ற நிலையில் இரசனையான, ரணகளமான அரசியல் சூழல் நாட்டிலிருக்கிறது. இன்னல்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் இலங்கை, இணக்கமான சூழல் ஏற்பட்டு அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும் என்பதுவே நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பினை பிரதிபலிப்பதாக புதிய வருடம் அமைய வேண்டும். அதுதான், அனைவரினதும் வாழ்த்தாகவும் இருக்கின்றது!

- புருஷோத்தமன் தங்கமயில்

No comments:

Post a Comment