இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Friday, January 16, 2015

அமெரிக்கா பின்வாங்க...இந்தியா அமைதி காக்க... இனி என்ன ஆவான் ஈழத் தமிழன்?

லரி மாளிகையில் இருந்து அலறியடித்து ஓடிவிட்டார் மகிந்த ராஜபக்ஷே! அவர் 'பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்பாற்றவில்லை; ஊர் ஊராகப் போய் பிராயச்சித்தம் தேடிய கடவுளும் காப்பாற்றவில்லை.
'திருப்பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்பார்கள். திருப்பதி வந்து போனவருக்கு நேர்ந்த திருப்பமோ, திடுக்கிட வைத்தது.

ராஜபக்ஷேவின் வலது கையைப் பார்த்தால் தெரியும்... கலர் கலராகக் கயிறுகள் கட்டியிருப்பார். யார் மந்திரித்து கயிறு கொடுத்தாலும் கட்டிக்கொள்வார், யார் ஜோசியம் சொன்னாலும் கேட்டுக்கொள்வார்.
உடல் நலிவுற்ற நேரத்தில் 24 மணி நேரமும் குடும்ப மருத்துவரை தனது பார்வையிலேயே வைத்துக் கொள்வதைப் போல, ஆஸ்தான ஜோதிடர் தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை எப்போதும் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார்.
'இலங்கையில் 8-ம் தேதி தேர்தல் வை’ என்றதுகூட தேசபந்து குறித்துக் கொடுத்ததுதான். ஜனவரி 8-ல் தேர்தல் என்றால், டிசம்பர் 8-ல் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜபக்ஷே.
அவர் முதன்முதலாக (2005-ல்) ஜனாதிபதி ஆனது நவம்பர் 17... கூட்டுத்தொகை 8. இரண்டாவது முறை (2010-ல்) தேர்தல் நடந்த நாள் ஜனவரி 26... கூட்டுத்தொகை 8. அதற்கான வேட்புமனுவை டிசம்பர் 17 தாக்கல் செய்தார்...
கூட்டுத்தொகை 8. ராஜபக்ஷே முதன்முதலாக (2004-ல்) பிரதமரானது ஏப்ரல் 8. இதையெல்லாம் சுட்டிக்காட்டிய தேசபந்து, '8-ம் இலக்கம்தான் உங்களுக்கு ராசி. சிலருக்கு அதிர்ஷ்டம் எப்போதாவதுதான் வரும்.
ஆனால், உங்களை அதிர்ஷ்டம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. மூன்றாவது முறை மட்டும் அல்ல; நான்காவது முறையும் நீங்கள்தான் ஜனாதிபதி’ எனக் குறித்துக் கொடுத்தார். சரியாக 10:20 மணிக்கு வேட்புமனு கொடுக்கச் சொன்னார்கள்... கொடுத்தார். இடது கையால் தரச் சொன்னார்கள்... (இடது கையால் தரும்போது நிற்கும், பார்க்கும் திசை நல்லது! - தேசபந்து பாதை!) ராஜபக்ஷே தந்தார்.
உலக நாடுகள் ஆதரித்தாலும், மோடியே வாழ்த்துச் சொன்னாலும் 'நாங்கள் மூன்றாவது முறையும் ஏமாற மாட்டோம்’ என்பதை இலங்கை மக்கள் காட்டிவிட்டார்கள்.
வயிற்றில் குத்துவது போல வந்து முகத்தில் குத்த வேண்டும்’ என சிங்களவர்களுக்கு இனவெறிப் பாடத்தை நடத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனதான் சொன்னார்... 'எந்த மக்களையும் இரண்டு முறைக்கு மேல் நம்பக் கூடாது. மூன்றாவது முறை கவிழ்த்துவிடுவார்கள்.’
ஜே.ஆர்.ஜெ-விடம் இருந்து கொடூரத்தைப் படித்துக்கொண்ட ராஜபக்ஷே, அரசியல் பாடம் படிக்காததன் விளைவே, இந்தத் தோல்வி. இதை ராஜபக்ஷே எதிர்பார்க்கவில்லை. தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தனது அலரி மாளிகைக்கு ஊடகவியலாளர்களை அழைத்துப் பேசினார்.
'உங்களுக்குப் போட்டி கடுமையாக இருக்கிறதே?’ எனத் தைரியமாக ஒருவர் கேட்டார். 'உண்மையில் போட்டி என எதுவுமே கிடையாது. அப்படியான போட்டி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கொழும்பு வந்தால் மட்டுமே என்னைச் சுற்றி இருப்பவர்கள் போட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கிராமப் பகுதியில் அப்படி எதுவும் இல்லை’ என ராஜபக்ஷே சொன்னார். அவரும் அப்படித்தான் நம்பினார். தமிழர்கள் தனக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என ஒப்புக்கொண்டார்.
கடந்த தேர்தலில், 46 ஆயிரம் தமிழர்கள்தான் எனக்கு வாக்கு அளித்தார்கள். ஆனால், இப்போது அதிகமான வாக்குகள் கிடைக்கும்’ என எதிர்பார்த்தார். ஆம், அது நடந்துள்ளது.
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த தேர்தலைவிடக் கூடுதலாக தமிழர்கள் ராஜபக்ஷேவுக்கு வாக்கு அளித்துள்ளனர். அவரே சொன்னது மாதிரி, தெரியாத தேவதையைவிடத் தெரிந்த பிசாசே மேல் என நம்பியவர்களும் உண்டு.
ஆனால், வேட்டு முறையைவிட ஓட்டு முறையில் ராஜபக்ஷேவை முதலில் முடித்துவிடலாம் என தமிழர்கள் நினைத்ததுதான் இந்த முடிவுக்குக் காரணம் எனத் தேர்தல் முடிவுகளை அலசினால் புரிகிறது.
தமிழர்களில் 9,78,111 பேர் மைத்ரிபால சிறிசேனவுக்கு வாக்கு அளித்துள்ளனர். ராஜபக்ஷேவுக்குக் கிடைத்திருப்பதோ 3,23,600. சுமார் 6.54 லட்சம் தமிழர்களின் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறார் சிறிசேன.
மொத்த இலங்கைக்கும் சேர்த்துப் பார்த்தால், சிறிசேன 62,17,162 வாக்குகளும், ராஜபக்ஷே 57,68,090 வாக்குகளும் பெற்றுள்ளனர். சுமார் 4.49 லட்சம் வாக்குகள்தான் வெற்றி வித்தியாசம். ஆக, தமிழர்களின் வாக்கு சிறிசேனவுக்கு விழாமல் போயிருந்தால், ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.
ராஜபக்ஷேவும் சிறிசேனவும் ஒன்றுதான் (அது உண்மைதான் என்றாலும்கூட!) என நினைத்து 'தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்து, தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்களிடம் சொல்லி, அவர்களும் வாக்குச்சாவடிக்கு வராமல் போயிருந்தால், ராஜபக்ஷேவுக்கு மூன்றாவது முறையும் மகுடம் சூட்டப்பட்டிருக்கும்.
2005-ம் ஆண்டு தேர்தலில் புலிகளின் தலைவர் பிரபாகரன் எடுத்த நிலைப்பாடுதான் ராஜபக்ஷேவை அப்போது ஆட்சியில் அமர்த்தியது. ரணில் விக்கிரமசிங்கவா - ராஜபக்ஷேவா என இருந்தது அந்தத் தேர்தல்.
உலகின் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்ய முயற்சிகள் மேற்கொண்டு, கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்து அமைப்பைப் பலவீனப்படுத்தி... என பல காரியங்களை ரணில் பார்த்தாலும், அவர் பச்சைப் படுகொலைகளை நிகழ்த்தப் பயந்தவர்; புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்று, அதை நிரந்தரப் போர் நிறுத்தமாக மாற்ற உதவியவர்.
அவரை 2005-ம் ஆண்டு தேர்தலில் புலிகள் ஆதரித்திருந்தால், ராஜபக்ஷே என்ற பிம்பமே எழுந்திருக்காது; இத்தனை பிணங்களும் விழுந்திருக்காது. அந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார் பிரபாகரன்.
தமிழர்கள் பகுதியில் யாருமே வாக்குச்சாவடிப் பக்கமே போகவில்லை. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபக்ஷே வென்று ஜனாதிபதி ஆனார். முதல் தடவை தவறுதலாக வந்துவிட்டவருக்கு மூன்றாவது தடவையாவது முற்றுப்புள்ளி வைக்க தமிழர்கள் ஒன்று சேர்ந்தார்கள்!
மூன்றாவது முறையும் ராஜபக்ஷே வென்றால், அவர் இதுவரை நடத்திய பச்சைப் படுகொலைகளுக்கு ஒட்டுமொத்த இலங்கையும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகப் பொருள் ஆகிவிடும். உலக நாடுகளைத் திசைதிருப்ப இது ஒன்றே போதும். அதனால்தான் வெற்றிக்குத் துடித்தார் ராஜபக்ஷே.
கொலை செய்யப்பட்ட தமிழர்களது புகைப்படங்களை, வீடியோக்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா?! அதே போல இந்தப் போரில் மரணம் அடைந்த சிங்கள இராணுவத்தினரின் புகைப்படங்களை, வீடியோக்களைச் சேகரித்து சிங்களக் கிராமங்களில் நித்தமும் கொண்டுபோய்க் காட்டிச் சொன்னார் ராஜபக்ஷே.
 'பாருங்கள்... எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்களை புலிகள் கொன்றிருக்கிறார்கள். அவர்களைத்தான் நான் அழித்தேன். என்னை அழிக்க அமெரிக்காவும் இந்தியாவும் ஐரோப்பாவும் துடிக்கின்றன. நீங்கள்தான் என்னை ஆதரிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், என்னை ஆதரியுங்கள்’ என வெறி கிளப்பிவிட்டார்.
ஏழை சிங்கள மக்கள் வாழும் கிராமப்புறங்களில் இந்தப் பிரசாரம் நன்கு எடுபட்டது. களுத்துறை, மாத்தளை, மாத்துறை, காலி, அம்பாந்தட்டை, அநுராதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ராஜபக்ஷே அதிக வாக்குகளை அள்ளியது அதனால்தான்.
கொழும்பு, கண்டி, கம்பஹா, திருகோணமலை போன்ற மத்தியதர வர்க்கம் கூடுதலாக இருக்கும் மாவட்டங்கள் சிறிசேனவுக்குக் கைகொடுத்தன. ராஜபக்ஷே வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்தாரே தவிர, கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்குப் பொருளாதார ரீதியாக எந்த நன்மையும் இல்லை.
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமானது. புதிய திட்டங்கள் இல்லை என்பதை இந்தப் படித்த, மத்தியதர வர்க்க சிங்களர்கள் உணர்ந்தார்கள். நித்தமும் நிறம் மாற்றி மாற்றி சட்டையைப் போட்டுக்கொண்டு, கூட்ட முடியாத பூஜ்ஜியங்களில் முதலீடு வந்துவிட்டதாக அறிவித்து, குத்துவிளக்கு ஏற்றிவிட்டு ஹெலிகாப்டர் ஏறிப் போய்விட்டால், அதை ஓர் ஆண்டு நம்புவார்கள் மக்கள்.
10 ஆண்டுகளும் தொடர்ந்தால்..? சிங்களவர்கள் மத்தியில் வெறுப்பு வர, அதுதான் காரணம்.
அதற்காக சிறிசேனவை இரட்சகர் என சிங்கள - தமிழ் மக்கள், மதச் சிறுபான்மையினர், மலையகச் சொந்தங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என நினைக்கத் தேவை இல்லை.
கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவும், சோனியாவுக்கு மாற்றாக மோடியும் வந்துவிடுவதைப் போலத்தான் இதுவும். ஜெயலலிதாவும் மோடியும் சொர்க்கத்தைக் காட்டுவார்கள் என நினைத்து, யாரும் வாக்கு அளிப்பது இல்லை.
ஏற்கெனவே இருந்தவர் மீதான கோபத்தை, புதிதாக வருபவர் அறுவடை செய்துகொள்கிறார்... அவ்வளவுதான். அது இலங்கையில் சிறிசேனவுக்குக் கிடைத்துள்ளது.
அரசியல் இலக்கு அற்ற வன்முறைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 40 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்ததன் மூலமாக அரசியலுக்கு வந்தவர் சிறிசேன. அதன் பிறகு சந்திரிகாவின் சுதந்திரக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, அவரோடு இருந்தார். கட்சி சந்திரிகாவிடம் இருந்து கை நழுவி ராஜபக்ஷேவிடம் வந்தபோது, அவரோடு கைகோத்தார்.
கட்சிக்கு ராஜபக்ஷே தலைவர் என்றால், சிறிசேன பொதுச் செயலாளர். கடந்த 10 ஆண்டுகள் நிலைமை இதுதான். ராஜபக்ஷே அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சர். 2009-ம் ஆண்டு இறுதிப் போர் காலகட்டத்தில் ராணுவ அமைச்சராக இருந்த 'பெருமை’யும் இவருக்கு உண்டு.
ராஜபக்ஷேவின் சகோதரர் களைப் பிடிக்காமல் கடந்த நவம்பரில் அந்தக் கட்சிக்கு முழுக்குப் போட்டுவிட்டு வெளியில் வந்தார் சிறிசேன. தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்காகக்கூட, தமிழர்களுக்கு மறந்தும் எந்த வாக்குறுதியும் தந்துவிடாதவர். எவ்வளவு தரை டிக்கெட் அரசியல்வாதியாக இருந்தாலும், யாராவது தன்னை ஆதரித்தால் பதிலுக்கு ஒரு நன்றியாவது சொல்வார்.
ஆனால், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை ஆதரிப்பது அவர்கள் எடுத்த முடிவு. அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என இன்று வரை சர்வ ஜாக்கிரதையாக இருப்பவர்.
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நன்றி’ என சொன்னால்கூட சிங்களவர் சினந்து விடுவார்கள் என நினைக்கும் சூழ்நிலை அங்கே.
ஓர் உதாரணம் - கடந்த வாரத்தில் ஒரு பேட்டியில், பிரபாகரன் பெயரைச் சொல்லும் போது, 'மிஸ்டர் பிரபாகரன்’ எனச் சொல்லிவிட்டார் சந்திரிகா. இதைப் பிடித்துக் கொண்டனர் ராஜபக்ஷே ஆட்கள்.
'மிஸ்டர் பிரபாகரன் எனச் சொல்பவர்கள் இலங்கைக்கு எப்படி ஜனாதிபதி ஆக முடியும்?’ எனக் கிளம்பி விட்டார்கள். 'ராஜபக்ஷேவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஒருவர் ஆணா, பெண்ணா என்பதைச் சுட்டிக்காட்டச் சொல்லும் அடையாளம்தான் 'மிஸ்டர்’ என விளக்கம் சொல்லிக்கொண்டே இருந்தார் சந்திரிகா.
எனவேதான் சிறிசேன மையமாகவே பேசுகிறார். லாக்கப் டெத் நடத்திய இன்ஸ்பெக்டரை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டதால் கிடைக்கும் அற்ப சந்தோஷம்தான் இப்போது கிடைத்திருப்பது. இருந்தாலும் மாற்றியதே ஒரு வகையில் 'வெற்றி’தானே!
'எனது அரசு, குடும்ப அரசாக இருக்காது. மன்னர் ஆட்சி நடத்த மாட்டேன். இடிஅமீனைப் போல ராஜபக்ஷே நடந்துகொண்டார். முப்படைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நாடாளுமன்றத்துக்கான அதிகாரத்தைக் குறைத்து, தனக்கு அதிகாரத்தைக் கூட்டிக்கொண்டார்.
வர்த்தகத் துறையை தனது குடும்பச் சொத்தாக மாற்றினார். நாட்டு மக்களின் சொத்துக்களைக்கொண்டு மாட மாளிகைகள் எழுப்பினார். அவரது குடும்பம் இலங்கையின் மன்னர் குடும்பம்போல இருந்தது’ எனச் சொல்லியிருக்கும் சிறிசேன, 'இது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு. இங்கு இன, மத, மொழி வேறுபாடின்றி ஆள்வோம்’ எனச் சொல்லியிருக்கிறார்.
சரி... சிறிசேனவை ஆளவிடுவார்களா? ஏனென்றால், இன்று ஜனாதிபதியாக சிறிசேன ஆகியிருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இன்னமும் ராஜபக்ஷேவிடமே இருக்கிறது.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் எதையும் சிறிசேன செய்ய முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் வரை இவர் காத்திருக்க வேண்டும். அதிலும் இவர் வென்றுகாட்ட வேண்டும்.
இன்று பிரதமராக ரணில் பொறுப்பு ஏற்றுள்ளார். ஜனாதிபதி பதவிதான் அதிகாரம் பொருந்தியது என அவருக்குத் தெரியும். சிறிசேன இடத்தில் நாம்தானே இருக்க வேண்டும் எனப் பொறாமைப்படலாம். சுதந்திரக் கட்சி என்பது சந்திரிகாவின் அப்பா ஆரம்பித்தது. தன் குடும்பச் சொத்தை அடுத்தவர் அனுபவிப்பதா என, சந்திரிகா எரிச்சலடையலாம்.
சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிஹல உறுமயவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரே ஆற்றில் தண்ணீர் குடிக்கும் அளவுக்கு அகிம்சை தழைக்குமா? சீன ஆதரவாளர் என்பதால், இதுவரை ராஜபக்ஷேவை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரத் துடித்த அமெரிக்கா, இனி இலங்கை மீது கரிசனம் காட்டும் என்பது என்ன நிச்சயம்?
இப்படி ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது ஈழத் தமிழினம்!

No comments:

Post a Comment