இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Thursday, January 15, 2015

தீர்க்க தரிசனத்துடன் செயற்பட வேண்டிய தருணம்!

"கொடிது, கொடிது வறுமை கொடிது, அதினிலும் கொடுமை இளமையில் வறுமை' என்பது மூதறிஞர்களின் பட்டறிவு ஞானம். சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் தொடர்பாக இந்த வருடம் இடம்பெறவுள்ள முக்கியமான  இரு உச்சி மாநாடுகளின் போது உலகத் தலைவர்கள் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்காது போனால்  100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வறுமையால் வாடுவார்களென நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "நடவடிக்கை /2015' என்ற இயக்கம் எச்சரித்திருப்பதைக் காணமுடிகிறது.
ஆயிரத்திற்கும் அதிகமான அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச ரீதியான கூட்டணியே இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. எதிர்வரும் செப்டெம்பரில் நியூயோர்க்கில் ஐ.நா. மாநாடொன்று இடம்பெறவிருக்கிறது.  2000 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த புத்தாயிரமாமாண்டு ( மிலனியம் ) அபிவிருத்தி இலக்குகள் இந்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில் அதற்குப் பதிலாக புதிய நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடவே ஐ.நா. மாநாடு இடம்பெறவிருக்கிறது. 

இந்தப் புதிய நிகழ்ச்சி நிரலில் வறுமையையும் பசியையும் இல்லாதொழிப்பது பற்றியும் சுகாதாரம், கல்வித் துறையை மேம்படுத்துவது குறித்தும் மக்கள் வாழ்வதற்கு   அதிகளவுக்கு வசதிகளுடன் நகரங்களை உருவாக்குவது தொடர்பாகவும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை செயற்பாட்டுத் திறனுடன் முன்னெடுப்பது பற்றியும்  காடுகள் , சமுத்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து நிகழ்ச்சி நிரல் வகுக்கப்படவிருக்கிறது.

அதேவேளை காலநிலை மாற்றத்திற்கு மனிதர்களால் ஏற்படுத்தப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் "நடவடிக்கை /2015' போராட்ட அமைப்பு வலியுறுத்தல் விடுத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.  மேலும் நாளொன்றுக்கு  2 டொலரிலும் குறைவான வருமானத்துடன் பெருந்தொகையான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். உலகத் தலைவர்கள் சரியான பாதையில் சென்றால் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியுமென இந்தப் போராட்ட அமைப்பு திடமாக வலியுறுத்துகிறது.  
சர்வதேச நாடுகளின் தலைவர்கள் துரிதமாகச் செயற்பட்டால் தற்போது  100 கோடிக்கும் அதிகமாக இருக்கும்  வறியவர்களின் தொகையை  2030 இல்  36 கோடியாக குறைக்க முடியுமெனவும் அதன் பின்னர் மோசமான வறுமையில் உலகச் சனத்தொகையில்  4 சதவீதமானவர்களே இருப்பார்களெனவும் அதாவது தற்போதுள்ள வறியவர்களின் எண்ணிக்கையானது  2030 இல்  17 சதவீதமாக இருக்குமெனவும் இந்த இலக்கில் வெற்றி பெற்றால் வரலாற்றில் முதற் தடவையாக மோசமான வறுமையிலிருந்து மீட்சி பெற்ற சாதனையாக அமையுமெனவும் அந்த இயக்கம்  நம்புகின்றதை அவதானிக்க முடிகிறது. 

 அதேவேளை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கிய விடயமாக இருப்பது,  இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இரு முக்கியமான உச்சி மாநாடுகளும் சரியான விதத்தில் இலக்குகளை எட்டாதிருந்தால் அதாவது தீர்க்க தரிசனத்துடனான தீர்மானங்களை எடுத்து அவற்றை அமுல்படுத்துவதற்கான ஒத்துழைப்பைப் பெற முடியாதிருந்தால் ,  2030 இல் கடும் வறுமையால் வாடுவோரின் தொகை  120 கோடியைத் தாண்டிவிடும் என்பதாகும்.

 "நடவடிக்கை / 2015' இன் இலக்கானது சகல வடிவத்திலுமான வறுமையை இல்லாதொழிப்பதையும் உள்ளடக்கியதாகும். அத்துடன் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதும் சமத்துவமின்மையை அதாவது ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்குமிடையில் அதிகரித்து வரும் பாரிய இடைவெளியைக்  குறைப்பதும் பாரபட்சத்தை நீக்குவதும் முக்கிய இலக்குகளாக உள்ளன. 

அநீதியையும் வறுமையையும் கல்வி அறிவின்மையையும் நீக்க வேண்டுமெனவே உலகிலுள்ள   மக்கள் விரும்பும் நிலையில் இது தொடர்பான உண்மையான மாற்றத்தை உலகிலுள்ள இளைஞர் சமூகம் விரும்புவதுடன்  அதற்கு ஆதரவாக அணிதிரள்வதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் நோபல் சமாதானப் பரிசை வென்றெடுத்தவரும் பாகிஸ்தானில் தலிபான்களினால் சுடப்பட்டு உயிர் தப்பியவருமான  17 வயதுடைய மலாலா யூசவ்சாய் கூறியிருப்பதுடன்,  2015 இல் உலகத் தலைவர்கள் செயற்பட வேண்டுமென இளைஞர் சமுதாயம் வலியுறுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

"நடவடிக்கை  / 2015' இற்கு   ஜோர்டான் மகாராணி ராணியா, அமெரிக்க கோடீஸ்வரர் பில்கேற்ஸ் , அவரின் பாரியார் மெலின்டா கேற்ஸ், ரொக் நட்சத்திரம் போனோ  போன்ற பிரமுகர்கள்  மட்டுமன்றி பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் போன்ற அரசியல் தலைவர்களும் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். 120 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவாளர்கள் இந்த உன்னதமான இலக்கிற்கு உதவ முன்வந்திருக்கும் நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பாகவும்  "நடவடிக்கை/2015' தொடர்பாகவும்  சகல நாடுகளும் மனப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்குவது அவசியம்.

No comments:

Post a Comment