இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Monday, January 12, 2015

பாஞ்சாலி சபதம் ஜெயித்தது! மஹிந்த சாம்ராஜ்யம் சரிந்தது

லகின் ஒட்டு மொத்த கவனத்தையும் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நேரடிப் பார்வையின் கீழ் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியிலும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கும் மத்தியிலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
ஆனாலும் நாட்டில் ஆட்சி மாற்றமா? இராணுவ ஆட்சியா? போன்ற பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது.

அதை மெய்ப்பிப்பது போலவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 20 மாவட்டத் தபால் வாக்குகள் எண்ணிக்கை செய்யப்பட்டும் உடனடியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
அதனால் உடனடியாக மஹிந்தர் வெற்றியடைந்த மாவட்டங்களைத்தான் ஆணையம் முதன் முதலாக 6 மாவட்ட முடிவுகளை அறிவித்தது. காரணம் இராணுவ நகர்வு ஒன்றிற்கு மஹிந்தர் தயாரானார் என்ற தகவலும் கசிந்துள்ளது.
நள்ளிரவு இராணுவத்தின் மூலம் இந்தத் தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்வதற்கும் ஊரடங்கு உத்தரவு ஒன்றுக்கான முயற்சியும் செய்திருந்தார்.
மஹிந்தர் நாட்டில் ஒரு இராணுவ ஆட்சிக்கு முயல்வார் என்று நாங்கள் ஏற்கனவே கட்டியம் கூறியிருந்தோம். அதற்காக ஊரடங்கு உத்தரவு ஒன்றை அமுல்படுத்துவார் என்றும் சொல்லியிருந்தோம். மஹிந்தர் முயன்று பார்த்தார் முடியவில்லை. கடைசியாக அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தேர்தல் ஆணையாளரும் காவல்துறை மா அதிபரும் சாதூர்யமாக காய்நகர்த்தி நாட்டில் எவ்விதமான வன்முறைகளுமின்றி, மிகவும் அமைதியான முறையில் மஹிந்தர் அலரி மாளிகையை விட்டு வெளியேறச் செய்து விட்டார்கள்.
மிகவும் சுமூகமான முறையில் மஹிந்தர் விட்டுச் சென்றுள்ளார். அலரி மாளிகையை விட்டுச் செல்வதற்கு முன்னர் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்குச் சென்று மஹிந்தருக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்விதமான இடையூறுகளும் செய்யாது பழிவாங்காது பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரணிலும் மஹிந்தரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக அறிகின்றது. அதனால் ரணிலின் ஆட்சியில் மஹிந்தர் குடும்பம் பழிவாங்கப்படாது என்று நம்புவோம்.
ஆனால் பாஞ்சாலி சந்திரிக்கா அம்மையாருக்கும் மஹிந்த குடும்பத்திற்கும் செஞ்சோற்றுக் கடன் தீருமா மற்றும் முன்னாள் இராணுவ கமாண்டர் சரத் பொன்சேகா மஹிந்தர் குடும்பம் ஆகியவற்றுக்கான செஞ்சோற்றுக் கடன் தீருமா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
மைத்திரியின் வெற்றி
மைத்திரியின் வெற்றியானது, 51.28 வீதம் கொண்ட 62,17162 வாக்குகளே பெற்றிருக்கின்றார். சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலமாகவே வெற்றியடைந்துள்ளார்.
மஹிந்தரை விட 449,072 வாக்குகள் மட்டுமே மேலதிகமாகப் பெற்றுள்ளார். மைத்திரியின் வெற்றி என்பது தமிழ் மக்களின் குறிப்பாக வடபகுதி தமிழ் மக்களின் வாக்களிப்பு மூலமாகவே சாத்தியமாகும் என்று நாங்கள் எங்கள் பல கட்டுரைகளில் பதிவு செய்திருந்தோம்.
கிழக்கில் பெருமளவு தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்வதால் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்க முடியாது. ஆனால் வடக்கில் அப்படியெல்ல ஏதாவது ஒரு இராணுவ நகர்வு மூலமாக மக்களை வாக்களிக்காமல் தடுக்கலாம் என்றும் பதிவு செய்திருந்தோம். அதனால்தான் நாங்கள் வடக்கில் கூடிய கவனம் செலுத்தி எழுதியிருந்தோம்.
மைத்திரியின் வெற்றி என்பது ஆகக் குறைந்த தரத்தில்தான் உள்ளது. அதாவது 51 அரை கூட இல்லை. வடக்கு மாகாண மக்களின் வாக்குகள் இல்லை என்றால் 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் மைத்திரிக்கும் ஏற்பட்டிருக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இறைவன் ஒரு கொடிய ஆட்சியில் இருந்து இந்த மக்ளைக் காப்பாற்றியுள்ளான். காவல்துறை மா அதிபருக்கும் மிகவும் நேர்மையான தேர்தல் ஆணையாளருக்கும் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து சட்டத்தை நிலைநிறுத்திய சட்ட மா அதிபருக்கும் நல்லாட்சியை விரும்புகின்ற மக்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எமது பெருத்த உத்தம ஆச்சாரியவை சமர்ப்பிப்போம்.
வடக்கில் மக்களை வாக்களிக்காமல் தடுப்பதற்காக மஹிந்தர் அணியால் பலவகையான திட்டங்களை வடக்கில் அரங்கேற்றினார்கள்.
தமிழ் கூட்டமைப்பு தேர்தலை பகிஷ்கரிப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பெயரால் போலியான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் குரலில் பொய்யாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பதிவு ஒன்று வட மாகாண தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வடக்கில் மஹிந்தரை ஆதரிக்க வேண்டும் என்று குழப்பத்தை ஏற்படுத்தும் சிகப்பு மை அநாமேதைய போஸ்டர் இப்படியாக வடக்கில் முடிந்த வரை மக்களை வாக்களிக்காமல் தடுப்பதில் மிகவும் குறியாக இருந்தார்கள். ஆனால் அவைகளைக் கடந்து வடக்கில் நாங்கள் எதிர்பார்த்த 3 இலட்சம் வாக்குகளையும் தாண்டி 373.061 வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது 73 ஆயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளது. வடக்கு மக்களுக்குப் பாராட்டுக்கள்.
வடக்கில் மைத்திரிக்கான தொகுதிவாரி வாக்களிப்பு
முல்லைத்தீவில்-35441, வவுனியாவில்-55683, மன்னார்-45543, கிளிநொச்சி-38856, சாவகச்சேரி-23520, யாழ்ப்பாணம்-17994, காங்கேசன்துறை-18725, ஊர்காவத்துறை-8141, வட்டுக்கோட்டை-20873, உடுப்பிட்டி-18137, கோப்பாய்-20873, பருத்தித்தறை-17388, நல்லூர்-24929, மானிப்பாய்-26958 ஆகிய 373061 வாக்குகள் கிடைத்துள்ளது.
வடக்கின் இந்த வாக்குகள் கிடைக்கிவில்லையென்றால் மைத்திரி எந்தவகையிலும் வெற்றியடைய முடியாது. இந்தத் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நாங்கள் பல தடவை பதிவு செய்திருந்தோம்.
சிங்கள வாக்குகள் மைத்திரிக்கும் மஹிந்தருக்கும் ஓரளவு சரிசமமாக வாக்களித்தால் வடக்கின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று எழுதியிருந்தோம்.
கிழக்கில் மைத்திரிக்கான வாக்களிப்பு தொகுதிவாரியாக
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் பொத்துவில்-81547, சம்மாந்துறை-46827, கல்முனை-45411, அம்பாறை-76409, மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு-44485, மட்டக்களப்பு தொகுதி-97779, கல்குடா-60342, திருகோணமலை மாவட்டத்தில் சேருவல-26216, மூதூர்-57532, திருகோணமலை-49650 ஆகினவாக ,586698 ஆகிய வாக்குகள் கிடைத்துள்ளது.
வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் மொத்தமாக 959759 ஆகிய வாக்குகள் கிடைத்துள்ளது. வடகிழக்கில் மட்டக்களப்பில்தான் மைத்திரிக்கு மிக அதிகமாக மட்டக்களப்பு தொகுதியில் இருந்து 97779 வாக்குகளும் பொத்துவில் தொகுதியில் இருந்து 81547 வாக்குகளும் கிடைத்துள்ளது.
ஆனால் விதாசாரத்தில் பார்த்தோமானால் 84 சதவீதமான வாக்குகள் மைத்திரிக்கு மூதூர் தொகுதியில் இருந்து கிடைத்துள்ளது.
மஹிந்தரின் தோல்வியும் வடகிழக்கு வாக்குகளும்
மஹிந்தர் 47.58 வீதம் கொண்ட 57,68090 வாக்குகளும் பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் என்ற பட்டத்துடன் மஹிந்த சாம்ராஜ்யம் சரிந்துள்ளது.
சர்வாதிகள் தோற்கும் நிலையிலும் எப்போதும் வெற்றியின் மிதப்பில்தான் இருப்பார்கள். இது சர்வாதிகார ஆட்சியாளர்கள் மத்தியில் நடந்துள்ள வரலாற்று உண்மைகள்.
இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம் காலம் உள்ளது என்று மஹிந்தரின் சகோதரர்களான சபாநாயகர் சமல், கோத்தபாய, பசில் மற்றும் புதல்வரான நாமல் ஆகியோர்கள் மஹிந்தரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மஹிந்தர் கேட்ட பாடில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே உள்ளது. இதனால் மஹிந்தரின் குடும்பத்திற்குள் ஒரு உரசல். மஹிந்தர் இந்தத் தேர்தலில் வெற்றிக் கணக்குத்தான் பார்த்தார்.
தோல்விக் கணக்கு பார்க்கவே இல்லை.காரணம் தமிழர்களை அழித்து புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதை தலைக்கு ஏறிவிட்டது. வெற்றியின் மமதையின் போக்கினால் என்னை வெல்ல யார் இருக்கின்றார்கள் எதிர்க்கட்சியில் யாருமே இல்லை என்றுதான் மஹிந்தர் கொக்கரித்து வந்தார்.
அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தனக்குத் தேவையில்லை என்றும் தான் இரண்டு தேர்தல்களிலும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றியே வெற்றியடைந்தேன் என்றும் தேர்தல் மேடைகளில் பேசி வந்தார். மஹிந்தர் முடியுமானவரை பின்கதவு வழிகளைக் கையாண்டார்.
கடந்த வெள்ளி நள்ளிரவு முப்படைகள் மூலமாக இந்தத் தேர்தலை வெற்றியடைவதற்கு பல வகையான ஜில்மார்ட் வேலைகளிலும் முயன்று பார்த்தார். எல்லாமே தோல்வியில் முடிந்து விட்டது.
குறிப்பாக கடந்த வெள்ளி நள்ளிரவு படைபலத்தைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு ஒரு குழப்பம் கலவரத்தை உருவாக்கி ஊரடங்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ய முனைந்தார். ஆனால் தேர்தல் ஆணையாளரும் காவல்துறை மாஅதிபரும் நீதி நியாயமாக நடந்து கொண்டு நாட்டுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வடகிழக்கில் மஹிந்தருக்கான வாக்களிப்பு
வடக்கில் மஹிந்தருக்கு முல்லைத்தீவு-7935, வவுனியா-16678, மன்னார்-6824, கிளிநொச்சி-13300, சாவகச்சேரி-5599, யாழ்பாணம்,4502, காங்கேசன்துறை-5705, ஊர்காவத்துறை-5959, வட்டுக்கோட்டை-7791, உடுப்பிட்டி-18137, கோப்பாய்-7799, பருத்தித்துறை-4213, நல்லூர்-5405, மானிப்பாய்-7225 ஆகியனவாக-102872 வாக்குகளும்,
கிழக்கில் தருகோணமலை மாவட்டம் திருமலை-12056, மூதூர்-7132, சேருவல-24833, மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா-10337, பட்டிருப்பு-8216, மட்டக்களப்பு-21473 வாக்குகளும், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை-4683, சம்மாந்துறை-7797, அம்பாரை-4683, பொத்துவில்-22425 ஆகியனவாக கிழக்கில்- 166610 வாக்குகளும் கிடைத்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் மஹிந்தருக்கு 2,67,662 வாக்குகள் பெற்றுள்ளார். ஆக மஹிந்தர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட வட கிழக்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் மூலமாகத்தான் வென்றிருக்க வேண்டும்.
ஆனால் வடகிழக்கில் மட்டும் 9 இலட்சத்து 59 ஆயிரத்து 759 வாக்குகள் மைத்திரிக்கு கிடைத்திருக்கின்றது. மற்றும் வடகிழக்கு மாகாணத்திற்கு வெளியில் சுமார் 10 இலட்சம் தமிழ் முஸ்லிம் வாக்குகள் மைத்திரிக்கு கிடைத்துள்ளது.
மைத்திரியின் வெற்றி என்பது இலங்கை வாழ் சிறுபான்மை மக்களால் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தது போன்று சிங்கள மக்களின் வாக்களிப்பு என்பது இருவருக்கும் ஓரளவு சரிசமமாக கிடைக்கின்ற போது சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலமாகத்தான் வெற்றியடைய முடியும் என்பது எங்களது கணிப்பீடு. மலையக மக்களும் இந்தத் தேர்தலில் நாட்டுக்கு நல்லது செய்திருக்கின்றார்கள்.
மஹிந்தரின் பேராசை
2016 ஆம் ஆண்டு நவம்பர் அதாவது இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற போது இந்தத் தேர்தல் நடத்த வேண்டாம் என்று மஹிந்தரின் கட்சிக்குள்ளும் சொல்லப்பட்டது.
மற்றும் பங்காளிக் கட்சிகளாலும் சொல்லப்பட்டது. மஹிந்தர் தன்னால் சிங்கள மக்களின் வாக்குகள் மூலமாக வெல்ல முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினால் தான் இந்தத் தோல்வியை தழுவியுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் ஆட்சியில் பேராசை கொண்டு இன்று இந்த தோல்வியைத் தழுவியுள்ளார். கடைசி வரையும் இந்தத் தோல்வியை மஹிந்தர் எதிர்பார்க்கவில்லை.
யாருக்குமே கிடைக்காத ஒரு பொன்னான ஆட்சி அதிகாரம் கொண்ட ஆட்சியைத் தக்க வைக்கத் தெரியாமல் ஒரு நாட்டின் முழு அதிகாரத்தையும் தனது குடும்பத்தின் கீழ் வைத்துக் கொண்டு போட்ட ஆட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் என்றால் மிகையாகாது. ஆணவத்துடன் வெற்றி மமதையில் சிபான்மை மக்களை படாத பாடுபடுத்திய மஹிந்தர் இருந்த இடம் தெரியாமல் மெதமுலனவுக்குப் பறந்து விட்டார்.
ஆனால் மஹிந்தர் தோல்வியில் துவண்டு போகக் கூடியவரல்ல. சுதந்திரக் கட்சியை விடமாட்டேன் என்று சொல்லியுள்ளார் என்பது சந்திரிகா அம்மையாருக்கும் மஹிந்தருக்குமான போராட்டத்திற்கு வலுச் சேர்த்துள்ளது. ஆனால் மஹிந்தர் தன்னிடம் 136 எம்பிக்கள் இருக்கின்றார்கள் என்ற மீண்டுமொரு அசட்டுத் தைரியத்தில்தான் கட்சியை விடமாட்டேன் என்று மஹிந்தர் தெரிவிக்கின்றார்.
ஆனால் சுதந்திரக் கட்சியின் உரிமையை சந்திரிகா பெறுவதற்காக சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அறிய வருகின்றது.
எந்தச் சந்திரிகாவால் மஹிந்த கொண்டு வரப்பட்டாரோ, எந்தச் சந்திரிகாவால் மஹிந்தர் பிரமதராகக் கொண்டு வரப்பட்டாரோ, அந்தச் சந்திரிகாவினால் மஹிந்தர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
சந்திரிகாவின் பாஞ்சாலி சபதம் நிறைவேறி விட்டது. மஹிந்த என்ற சாம்ராஜ்யம் சரிந்து விட்டது. அம்மணிக்கு வாழ்த்துக்கள். நன்கு திட்டமிட்டு காய்நகர்த்தி அம்மணி ஜெயித்து விட்டார்.
சந்திகா எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற எம்பிக்களை தனது கட்டுப்பாட்டில்  கொண்டு வந்து விடுவார். அதன் பின்பு சுதந்திரக் கட்சியின் தலைமையில் தொங்கிக் கொண்டிருக்கின்ற மஹிந்தர் கட்சியின் பெரும்பான்மைப் பலத்தால் ஏகமனதாக நீக்கப்படுவார்.
அல்லது புதிய ஜனாதிபதி மைத்திரியினால் எதிர்வரும் வாரத்தில் மீண்டும் நிமயனம் செய்யப்படப் போகின்ற மஹிந்தரால் பலாத்காரமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயகாவினால் சட்டப்படி சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மீண்டும் சந்திரிகாவுக்கு கிடைக்கும் அல்லது அதற்கும் கட்டுப்படா விட்டால் பிரதம நீதியரசர் ஷராணி முன்பாக மஹிந்தர் கைகட்டி நிற்க வேண்டி வரும். இப்படியாக மஹிந்தர் தனிமைப்படுத்தப்படுவார்.
அதன்பின்பு எங்கிருந்து எழும்ப முடியும். சந்திரிகாவின் அதிகாரத்தின் கீழ் சுதந்திரக் கட்சி வந்து விட்டால் எதிர்வரும் தேர்தலில் மஹிந்தரின் குடும்பத்தில் யாருக்கும் சுதந்திரக் கட்சி சார்பாக சீட் கொடுக்க மாட்டார்.அதன் மூலமாக மஹிந்தரின் குடும்பம் அரசியலில் எங்கிருந்து எழும்ப முடியும்.
10 வருடங்களுக்கு முன்னர் சந்திரிகா அம்மையார் விரும்பாமலே மஹிந்தரைக் கொண்டு வந்தார். தன்னையும் மதிக்காமல் தனது தாய் தந்தையரின் கட்சியையும் மதிக்காமல், சிறுபான்மை மக்களையும் மதிக்காமல் இன்று அவரை அகற்றியிருக்கின்றார்.
கடந்த தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காமல் மஹிந்தர் பதவிக்கு  வந்தார். இன்று தமிழர்கள் வாக்களிப்புச் செய்து மஹிந்தரை நீக்கியுள்ளார்கள். இன்றைய புதிய அதிபரின் தெரிவு என்பது சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. முன்னாள் அதிபர் மஹிந்தர் தெளிவாகச் செல்கின்றார் வடக்கும் கிழக்கும் மலையகமும் அளித்த வாக்கால்தான் தமக்கு தோல்வி ஏற்பட்டதாகச் சொல்கின்றார்.
சிறுபான்மையினம் மஹிந்தவை பழிவாங்கி விட்டனர். ஆனால் புதிய அதிபரை சிறுபான்மையினம் அரவணைத்து வாக்களித்து வெற்றியடைந்துள்ளார்கள். இப்போதாவதாவது அல்லது இனிமேலாவது சிறுபான்மையினத்தை மனித நேயத்தை, மனித உரிமைகளை மதிக்க இந்த முன்னாள் அதிபர் கற்றுக் கொள்ளட்டும்.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை
இந்த ஒற்றுமை நடந்து முடிந்த தேர்தலில் படம் போட்டுக் காட்டுகின்றது. இன்றைய தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என்பது இந்த இரண்டு இனங்களும் ஒரு கோட்டில் பயணம் செய்த அறுவடைதான் புதிய ஆட்சி மாற்றம் கிடைத்துள்ளது.
தமிழ் மக்கள் மஹிந்தருக்கு எதிராக வாக்களித்தார்கள் என்று சொன்னாலும் முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் மஹிந்தருக்கு எதிரான அலையேதான். தமிழ் முஸ்லிம் மக்களை யாரும் இணைக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு இனங்களும் ஒரு பொதுக் கொள்கைக்காக ஒரு பொது எதிரியை வீழ்த்தும் நோக்கில் இணைந்து வெற்றியும் அடைந்துள்ளார்கள்.
இந்த ஒற்றுமை தொடருமானால் நாட்டில் சிறுபான்மையினம் சாதிக்கலாம். சிறுபான்மையினத்தை அரவணைத்துச் செல்லக் கூடிய அரசும் அமைந்துள்ளதாலும் நல்ல புறச் சூழலும் ஏற்பட்டுள்ளதாலும் இந்த ஒற்றுமையை தொடரவைக்க ஏதாவது வழி பிறக்க வேண்டும். நல்ல காலம் பிறந்துள்ளது. நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளது.
எம்.எம்.நிலாம்டீன்

No comments:

Post a Comment