இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Friday, January 2, 2015

ஆப்கானிஸ்தான் தயாரா?

ப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் "சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் படை' தனது 13 ஆண்டு காலப் பணியை முறைப்படி நிறைவு செய்துள்ளதன் மூலம், ஆப்கானிஸ்தான் இனி சுயமாகவே தலிபான்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பைத் தனியாக உறுதி செய்யும் அளவுக்கு ஆப்கன் ராணுவம் தயாராகியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2001, செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், தலிபான்
பயங்கரவாதிகளையும் ஒழிப்பதற்காக ஆப்கனுக்குள் நுழைந்தது நேட்டோ படை. போன வேகத்தில் தலிபான் ஆதரவு அரசை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டாலும், இந்த 13 ஆண்டுகாலப் போரில் நேட்டோ படைக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அதிகம்.
இதுவரை 2,200 அமெரிக்க வீரர்கள் உள்பட நேட்டோ படையைச் சேர்ந்த 3,500 வீரர்கள் ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான போரில் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையிலான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் அதிக உயிரிழப்பைச் சந்தித்தது இந்த ஆண்டுதான்.
2014-ஆம் ஆண்டில் மட்டும் 3,200 குடிமக்கள், 4,600 உள்நாட்டு ராணுவத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் தலிபான் தொடர்பான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் நேட்டோ படை வெளியேறுவதுதான் ஆப்கன் ஆட்சியாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்களை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் முழு அளவில் தயாராகவில்லை; தலிபான்களின் ஆதிக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை; அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்ட நாட்டின் பொருளாதாரம் என இதற்குப் பல காரணங்கள்.
நேட்டோ படை வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்பதிலும் அங்கு இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
3,42,000 ராணுவ வீரர்கள், காவல் துறையினர் கொண்ட ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படைக்கு நேட்டோ படை பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளது.
பெண்களையும் ராணுவத்தில் சேர்த்தது, சுயமாகவே விமானத் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஆப்கன் ராணுவத்தினருக்குப் பயிற்சி அளித்தது என நேட்டோ படை செய்து முடித்துள்ள பணிகள் பல.
மேலும், ஆப்கனிலிருந்து நேட்டோ படை முற்றிலுமாக வெளியேறிவிடவில்லை. ஆப்கன் ராணுவத்துக்கான தொடர் பயிற்சி உள்ளிட்ட உதவிகளுக்காக 10,800 அமெரிக்க வீரர்களும், இவர்களுடன் 2,000 நேட்டோ வீரர்களும் இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பார்கள். "உறுதியான ஆதரவு' என இந்த இரண்டு ஆண்டு திட்டத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படையினர் தலிபான்களுக்கு எதிராக நேரடித் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள் என்றாலும், இவர்களின் இருப்பு ஆப்கன் ராணுவத்துக்கு மனதளவில் பெரிய பலமாக இருக்கும்.
பின்னணியில் இருந்து தேவையான உதவிகளை அளித்து, ஆப்கன் ராணுவத்தைச் சுயமாகச் செயல்படவைப்பதே 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நேட்டோ படைக்கு காத்திருக்கும் முக்கியப் பணி. இதற்கான பயிற்சிக்கு ஆண்டுக்கு 500 கோடி டாலர் தேவைப்படும்.
இதுவரையிலான நிதி உதவி வேறு; இனியும் அதே அளவு நிதி உதவி அளிக்க ஒபாமா அரசை அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே.
மேலும், இராக்கைப் போன்ற சூழ்நிலை ஆப்கனிலும் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
இராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர், அங்கு புதிய ஆட்சியை ஏற்படுத்திவிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கப் படை வெளியேறியது.
ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் இராக் ராணுவம் முற்றிலும் சீர்குலைந்து, இஸ்லாமிய தேச இயக்கம் எழுச்சி பெற்று, இராக்கின் முக்கியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
சிரியாவிலும் இஸ்லாமிய தேசம் வலுப்பெற்று, அல் காய்தா, தலிபான்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்துக்குமே புதிய அபாயமாக உருவெடுத்துள்ளது.
இராக்கில் போரை முடித்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்கா, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வளர்ச்சியைப் பார்த்து, மத்திய கிழக்கு முழுவதும் அந்த இயக்கம் வலுவடையாமல் தவிர்க்கும் பொருட்டு, இராக்கில் மீண்டும் விமானத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளையில், இராக்கைப் போன்று இனக் குழுக்களுக்கிடையிலான மோதல் ஆப்கானிஸ்தானில் இல்லை என்பதால், பொதுமக்கள் அனைவரும் அரசுக்கும், அரசுப் படைகளுக்குமே ஆதரவாக இருக்கிறார்கள்.
ஆதலால், ஐ.எஸ். போன்று தலிபான்கள் வலிமை பெறுவது கடினம் என அமெரிக்கா நம்புகிறது. ஆப்கானிஸ்தான் இராக்கைப் போல வீழுமா, சொந்தக்காலில் நிற்குமா என்ற கேள்விக்கு விரைவிலேயே விடை கிடைக்கும்.

No comments:

Post a Comment