
அதுவும் தமிழர் கூட்டமைப்பு தங்கள் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு தெற்கில் சிங்களக் கட்சிகளின் பார்வை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பக்கமே திரும்பியிருக்கிறது.
புலிகள் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது, மீண்டும் பிரிவினை கோரிக்கையையே முன்வைக்கிறார்கள் என்ற குரல் அனேகமாக எல்லா மேடைகளிலும் எதிரொலிக்கிறது எனலாம்.
புலிகள் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது, மீண்டும் பிரிவினை கோரிக்கையையே முன்வைக்கிறார்கள் என்ற குரல் அனேகமாக எல்லா மேடைகளிலும் எதிரொலிக்கிறது எனலாம்.
தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி ஐ.தே கட்சியின் கருத்தானது, தமிழ்தேசிய கூட்டமைப்பு சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலை வலியுறுத்தலாம்.
ஆனால், எமது கட்சி ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலையே வளங்கும் என்று தெரிவித்திருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுனில் பிரேம்ஜெயந்த கருத்துத் தெரிவிக்கையில், தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வுக்கு செல்ல முடியாது. அதன் மூலம் நாட்டை பிளவுபடுத்தும் செயல்பாட்டை நாம் செய்ய மாட்டோம் என்று ஒரு படி மேலே சென்று தெரிவித்திருந்தார்.
முன்னாள் இராஜதந்திரியும், மகிந்தாவின் இந்நாள் ஆதரவாளருமான தயான் ஜயத்திலக்க வெளியிட்ட ஒரு கருத்தில். ‘பிரபாகரன் மீண்டும் அவதாரம் எடுத்தது போலவும், தமிழர் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்கள் ‘பொங்குதமிழ்’ நிகழ்வுபோலவும் இருப்பதாக கூறியுள்ளார்.
இனவாதியான சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்தில், ‘நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகளும், பிரிவினைவாதமும் தலைதூக்க விடமாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மகிந்தாவின் விசுவாசியான உதய கம்மன்பில தெரிவித்த ஒரு கருத்தில், வடக்கில் இருப்பவை நாய் குட்டிகள் அல்ல, அவை புலிக்குட்டிகள் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்துக்களையே ஜே.வி.பியும், ஏனைய இனவாதக் கட்சிகளும் வெளியிட்டிருந்தன. தமிழர் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்படி, நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான அதிஉச்ச அதிகாரப் பகிர்வே தீர்வாக அமையும் என்பதே கோரிக்கையாக முன்வைக்கப் பட்டிருந்தது.
பல விடயங்கள் அதில் உள்ளடக்கப் பட்டிருந்தாலும், சமஷ்டி என்ற பதம் அங்கே புகுத்தப்பட்டிருப்பதால் அதை மட்டும் பிடித்துக்கொண்டு, நாட்டுக்குத் தேவை என கருதப்படும் ஏனைய கருத்துக்களை சிங்களத் தலைமைகள் உள்வாங்கத் தவறியுள்ளன என்றே எண்ணத்தோன்றுகிறது.
தமிழீழம், விடுதலைப் புலிகள், மனித உரிமைகள் , போர் குற்றம் போன்ற வார்த்தைகள் சிங்கள இனத்துக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் எவ்வளவு சிம்ம சொற்பனமோ, அதேயளவுக்கு சமஷ்டி என்பதும் தந்தை செல்வா காலத்திலிருந்தே சிங்களவர்களால் ஜீரணிக்க முடியாத ஒரு வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது.
எந்த ஒரு சிங்களக் கட்சியும் தமிழரின் இனப்பிரச்சனைக்கு தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது எப்போதோ தமிழ் மக்களால் உணரப்பட்ட விடயம். அதிஉச்ச ஆயுத பலத்தின் மூலமாகவே பெறமுடியாமல் போன உரிமையை, பலமிழந்த நிலையில் போச்சுவார்த்தை மூலம் சிங்கள பெரும்பான்மை இனத்திடம் கேட்டுப் பெறமுடியும் என்று எதிர்பார்ப்பது ஏமாளித்தனம்.
சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே தமிழருக்கு பாதகமான கருத்துக்களை சிங்கள கட்சிகள் வெளியிடுகின்றன என்று சொல்வதற்கில்லை.
அவர்களது சிந்தனையும் செயலும், என்றுமே தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதிலேயே குறியாக இருக்கும் என்பது சிங்கள கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளிலிருந்தே உறுதியாகிறது.
தமிழருக்கு எதிரான கருத்துக்களை தேர்தல் மேடைகளில் வெளிப்படுத்துவதால் தமிழ் மக்கள் கொதிப்படைவார்களே! தமக்கு வாக்களிக்க மாட்டார்களே...! என்றெல்லாம் சிங்கள அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை.
வாக்குகளையும் கடந்து, தமிழர்களை தலையெடுக்க விடாமல் அடக்கி வைத்திருக்க வேண்டும் என்பதிலேயே சிங்கள இனம் குறியாக இருக்கிறது. தமிழர்களின் எழுச்சியை தடுப்பதற்கு அவர்கள் தமது அரசியல் எதிரிகளுடன் மட்டுமல்ல, எந்தப் பிசாசுடனும் சேரத் தயாராக இருக்கிறார்கள்.
ஐ.தே.கட்சியோ, மகிந்தாவின் கூட்டமைப்போ, எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தமிழரின் உரிமை சார்ந்த விடயத்தை பொறுத்தவரை சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே எச்சரிக்கையோடு இருப்பார்கள் என்பதும்,
தமிழரின் ஒற்றுமையை சிதைத்து அவர்களை ஏமாற்றி தம் இனம் சார்ந்த அரசியலை முன்நகர்த்திச் செல்வார்கள் என்பதும், அரச படைகளின் கண்காணிப்பில் எப்போதும் தமிழரை ஆயுத முனையில் வைத்திருப்பார்கள் என்பதும் சிங்கள மக்கள் பெரிதும் நம்பும் ஒரு விடயமாகும்.
அத்தகைய அடக்குமுறையை உறுதியோடு நடைமுறைப்படுத்தும் தரப்புக்கே அவர்களது வாக்குகள் தாராளமாக விழும் என்பதும் கடந்தகால வரலாறாகும். அந்த வகையில் இம்முறையும் தமிழரையும், புலிகளையும் மையப்படுத்திய இனவாதப் பிரச்சாரம் தென்னிலங்கையில் விரிவடைந்துள்ளது.
அதற்கு தலைமை தாங்கும் உந்துசக்தியாக மகிந்தா விளங்குகிறார். அவரது இனவாதக் கருத்துக்களையும் மேவி, சிங்கள வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில் ஏனைய சிங்கள அரசியல்வாதிகளும் இனவாதத்தை கக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஊழல்வாதிகளை தோற்கடித்து, மாற்றத்தை கொண்டுவந்தவர்களால் நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தையோ, இன ஒற்றுமையையோ கொண்டுவர முடியவில்லை என்பதுதான் கடந்த எட்டு மாதங்களில் கண்ட மிச்சம். நாட்டுக்கு அத்தியாவசியமானவற்றை விடுத்து,
தமது அரசியல் அதிகார இருப்புக்கான நகர்வுகளை மேற்கொள்வதிலேயே காலம் கடத்தப்பட்டுள்ளது. மாற்றத்துக்கு உதவினார்கள் என்பதால் தமிழர்கள் முகம்கொடுத்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒருசிலவற்றை கிள்ளித் தெளித்துள்ளார்கள்.
ஆனால் தமிழரின் அடிப்படையான பிரச்சினைகள் முன்னைய காலங்களைப்போலவே பின்னோக்கி தள்ளப்பட்டள்ளன. இவர்களை நம்பி இணக்க அரசியலுக்குள் நுளைவது எந்தப்பலனையும் தரப்போவதில்லை.
புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போர் குற்றம், மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கையை உட்பட வைப்பதே ஓரளவுக்கேனும் தமிழருக்கான பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரும். தேர்தல் மூலம் தெரிவாகும் தமிழ் அங்கத்தவர்கள் அதற்கே முன்னுரிமை கொடுத்து உறுதியோடு செயற்படவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும்.
க.ரவீந்திரநாதன்
kana-ravi@hotmail.com
kana-ravi@hotmail.com
No comments:
Post a Comment