இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, September 12, 2015

யாருக்கு விசாரணை....! எதற்காக தயக்கம்....!

ஏதிர்பார்ப்புக்களோடு நடைபெற்ற எட்டாவது பாராளுமன்றத் தேர்தலும் கோலாகலமாக நிறைவடைந்து விட்டது. மூன்று தசாப்தத்திற்குப் பின்னர் தேசிய அரசியலில் அதியுச்ச பதவிகளில் ஒன்றான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பல்வேறு இழுபறிகளின் மத்தியில் தமிழினத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுவிட்டார்.
தென்னிலங்கையில் வரவேற்பும் கடுமையான இனவாத விமர்சனமும் மேலெழுந்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வட கிழக்கில் கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

புதிதாக அமைந்துள்ள அரசாங்கம் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்குமா என்ற வினா தற்போதைக்கு தொக்கி நிற்கையில், வடகிழக்கில் தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துடன் மென்போக்கிலான அணுகுமுறைகளை மேற்கொண்டு தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான அடுத்தகட்ட ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கான சமிக்ஞைகளே தென்படுகின்றன. அது சாத்தியமாகுமா என்பது ஆய்விற்குரியதாகவும் விவாதத்துக்குரியதாகவும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியதாகவும் இருக்கின்றது.
இவ்வாறான நிலைமையில் பாராளுமன்ற தேர்தல் காலத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறுதிப்பெரும்பான்மையைக் கொண்ட வட மாகாணசபையின் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மக்களிடம் தீர்மானிக்கும் பொறுப்பைக் கையளித்து விட்டு மௌனவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியவாறு களமிறங்கிய போதும் மக்கள் ஆணை கூட்டமைப்புக்கே கிட்டியிருந்தது. அதன் பின்னணி தொடர்பாக ஆராய்வதற்கு அப்பால் குறித்த இரு தரப்பினரும் ஒரு விடயத்தில் ஒத்தகருத்தையே கொண்டிருந்தார்கள்.
அதாவது, வன்னிப்பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உறுதியாகத் தெரிவித்தது மட்டுமன்றி அதனை வலியுறுத்தியே அனைத்து பிரசார மேடைகளும் அமைந்திருந்தன என்பது மறுதலிக்க முடியாத வெளிப்படை உண்மை.
அவ்வாறிருக்கையில், 21ஆம் திகதி பெப்ரவரி 2002 ஆம் ஆண்டு முதல் 15 ஆம் திகதி நவம்பர் 2011 வரையில் தாயகத்தில் தமிழினம் எதிர்கொண்ட அதியுச்ச அவலத்திற்கு நீதிகோரும் செயற்பாடுகளை இலங்கைத்தீவிலுள்ள பாதிக்கப்பட்ட தரப்புக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன பிரதானமாக முன்னின்று முன்னெடுத்திருந்தன. மேலும் நீதிகோரும் செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்கள், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் கிடுக்கிப்பிடிப்பால் 2010 ஜூனில் ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மூவர் அடங்கிய குழுவை நியமித்தார்.
அக்குழு மார்ச் 2011இல் தயாரித்த 214 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 2011இல் அதிகாரபூர்வமாக ஐ.நா.சபை வெளியிட்டது. அதனையடுத்து 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை நிறைவேற்றியது. அதனையடுத்து 2013, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் அரசாங்கத்திற்கு தலையிடியளிப்பதாகவே இருந்தது.
இறுதியாக இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் எனும் தலைப்பில் 28ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டதோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் சாட்சியங்கள் பெறப்பட்டு விசாரணை அறிக்கை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கிணங்க 12நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் உள்ளிட்ட மனிதாபிமான மீறல்கள் தொடர்பாக பல்வேறு சாட்சியங்கள் பெறப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதேவேளை, நடைபெற்ற அவலங்களைப் புடம்போட்டுக் காட்டும் வகையில் இங்கு இடம்பெற்றது ஒரு இனப்படுகொலையே என 2013ஆம் ஆண்டு அமையப்பெற்ற வட மாகாண சபையும் இந்த ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானமும் சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 29ஆவது கூட்டத்தொடரில் விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. தயாராகவிருந்தபோதும் இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அதனைப் பிற்போடுவதற்கு வழியமைத்தது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 30ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து உள்ளகப் பொறிமுறையிலான விசாரணையொன்றே முன்னெடுக்கப்படவுள்ளதான ஐயப்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. குறிப்பாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி கொழும்பில் ஆற்றிய உரையும், தமிழினத்தின் மீது அதீத அக்கறை கொண்ட பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கெலும் மெக்ரே வெளியிட்ட ஐ.நா.வின் கசிந்த ஆவணமும் அந்த ஐயப்பாட்டிற்கான வலுவான அடித்தளத்தை இட்டிருக்கின்றன.
அதேநேரம் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கைக்கு போதிய கால அவகாசத்தினை வழங்குவதற்கு ஆதரவாக ஜெனிவா கூட்டத்தொடரில் பிரேரணையொன்றை கொண்டுவரவிருப்பதாக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மறுபக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான கட்சியாக அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சர்வதேச விசாரணை நிறைவுற்றுவிட்டது என கன்னி பாராளுமன்ற குழுக் கூட்டத்திலும், சில வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச விசாரணையொன்று நிறைவுற்றால் தொடர்ந்து ஏன் உள்ளக பொறிமுறையிலான விசாரணை என்பது ஒரு புறமிருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், ரெலோ ஆகியன பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து கலந்துரையாட ஆரம்பித்து இறுதியில், சென்ற பஸ்ஸுக்கு கைகாட்டி பயனில்லை என்பதை உணர்ந்தன.
ஆனால் பங்காளிகளின் ஒன்று கூடலின்போது கூட்டமைப்பு பதிவு, முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையிலான விடயங்களில் ஏகோபித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக முழுமையான சர்வதேச விசாரணையை அவை வலியுறுத்தியதோடு மட்டுமன்றி அக்கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனுப்பியுள்ளன. அது மட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் மீதும் பங்காளிக்கட்சிகள் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளன. அதேநேரம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பங்காளிக்கட்சிகளின் கடிதத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து கொள்ளவில்லை என்பதோடு அவ்விடயம் குறித்து எவ்விதமான கருத்துக்களையும் அக்கட்சி வெளியிடவுமில்லை.
இவ்வாறு நிலைமையிருக்கையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பை நடத்தியிருந்தார்.
இச்சந்திப்பில் பங்கெடுத்திருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிய சிவாஜிலிங்கம் அதனை வழிமொழிந்து கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 34ஆவது அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் தீர்மான நிறைவேற்றத்தின் பின்னர் உரையாற்றிய வடக்கு முதல்வர் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளருடனான சந்திப்பின் பின்னரே இத்தீர்மானத்தை நிறைவேற்றும் முடிவை எடுக்கவேண்டியேற்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளை தொடர்ச்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சார்ந்த சிலர் சர்வதேச விசாரணையை மலினப்படுத்துகின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமது பூகோள அரசியலை முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றன. ஆட்சி மாற்றம் நீதி நியாயத்தை பெற்றுத்தராது என கூறிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரை உள்ளீர்த்த மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டக்குழுவினால் யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துவேட்டைப் போராட்டம் வடக்கைத் தாண்டி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டிருக்கின்றமை விசேட அம்சமாகும்.
இவ்வாறிருக்கையில், இங்கு மிக முக்கிமான விடயமொன்றை கோடிட்டுக்காட்டவேண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் முதல் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறும் காலப்பகுதியில் உள்நாட்டில் வெகுஜன போராட்டங்கள், கோரிக்கைகள், கவனயீர்ப்பு என்பன முன்னெடுக்கப்படுவது கடந்த ஆறுவருடங்களில் வழமையானதொன்றாகி விட்டது. ஆனால், தற்போது முழுமையான சர்வதேச விசாரணையின் ஊடாக நீதியை எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு, உள்ளகப் பொறிமுறையின் ஊடாக பதில் வழங்குவதற்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியும், அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலரும் முயற்சிப்பதாக குற்றம்சாட்டும் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளும், வடக்கு மாகாண சபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரிக்கை கடிதம் மூலமாகவோ அல்லது தீர்மானம் நிறைவேற்றுவதன் ஊடாகவோ அல்லது கையெழுத்து போராட்டத்தின் ஊடாகவோ மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுக்க முடியும் என்றொரு வினா இயல்பாகவே எழுகின்றது.
இம்மூன்று தரப்பினரும் கூறுவதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தரப்புக்கள் அவ்வாறு செயற்படுகின்றதா இல்லையா என்பதை ஆராய்ந்து அதனை பகிரங்கப்படுத்துவது, கடுமையாக விமர்சிப்பது என்பதற்கு அப்பால் அத்தரப்புக்கள் என்ன செய்கின்றன? அவை ஆக்கபூர்வமானவையா? என்பதைப் பார்க்கையில் அத்தரப்புக்களின் மீது பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
முழுமையான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற விடயத்தில் ஒருமித்த கருத்திலிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வடக்கு மாகாணசபை மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அதிர்வுள்ள வகையிலான அல்லது சர்வதேசமே திரும்பிப்பார்க்கும் வகையிலான ஜனநாயக ரீதியான அதிர்வுள்ள அறவழிப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏன் தயாரில்லாதிருக்கின்றன?

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகியன தமிழ் மக்களுக்கு எம்மால் தலைமையை வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே ஆயுதமேந்தி தனித்தனியாகப் போராடியிருந்தன என்பது வரலாறு. இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கின்ற நிலையில் ஒரு இலக்குக்காக முன்வரமுடியாதிருக்கின்றமைக்கான காரணம் தான் என்ன?

அதேநேரம் வட மாகாண சபை சர்வதேச விசாரணை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமையை அதன் பிரேரணைகள் காட்டுகின்றன. வெறுமனே பிரேரணைகள் ரணங்களுக்கு மருந்தாகுமா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தனித்து நின்றே சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மக்கள் ஆணை கிடைக்காத நிலையில் சாதாரண தரப்பாக தனித்து நின்று எத்துணை தூரம் செல்லமுடியும்?

அதேநேரம் வெகுஜன அமைப்புக்களும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி மகஜரைக் கையளிப்பதன் ஊடாக வெற்றுடம்பில் சுமக்கும் துகள்களுக்கு பதில் கிடைக்குமா?

இத்தரப்புக்களிடையே கொள்கைகள், நடைமுறை ரீதியான செயற்பாடுகள், தீர்வுத்திட்டங்கள் ஆகியவற்றில் முரண்பாடான நிலைமைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் நீதிக்காக ஏங்கும் அப்பாவி நெஞ்சங்களுக்கு முழுமையான சர்வதேச விசாரணையூடாகவே நியாயம் கிடைக்கும் என்ற கருப்பொருளில் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லையே.

இத்தரப்புக்கள் யாருக்காக விசாரணையைக் கோருகின்றன? தம் இனத்திற்காக, அப்பாவி மக்களுக்காக. ஆகவே தமது பூரணத்துவமான செயற்பாட்டின் ஊடாக கணிசமான அழுத்தமொன்றை அளிப்பதற்காக ஒன்றுபடுவதற்கு இத்தரப்புக்கள் ஏன் மறுக்கின்றன? இவ்வாறு தனித்தனியாக வெவ்வேறுபட்ட கோணங்களில் முடிவுகளற்ற செயற்பாடுகளை இத்தரப்புக்கள் முன்னெடுப்பதானது மக்களிடத்தில் தமக்கு மட்டும் தனியாக விளம்பரம் தேட முனைகின்றார்களோ என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே உள்ளது.

ஆட்சிமாற்றம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணைகள், தீர்மானங்கள் என்பவற்றுக்கு அப்பால், அவலத்திற்குள்ளான தமிழினத்தின் மனிதம், நீதி, நியாயம், பொறுப்புக்கூறல், சகவாழ்வு, எதிர்காலம் ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டே அணுக வேண்டும். ஆகவே மேலும் மேலும் தாமதமடைந்து கொண்டு குறைகூறிக்கொண்டும், புறஞ்சொல்லிக்கொண்டும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காலம் கடந்து விட்டது.

காத்திருக்கவேண்டியதில்லை. இந்த விடயத்தில் நீ பெரிதா? இல்லை நான் பெரிதா? யாருக்கு மக்கள் செல்வாக்கு? என கணக்குப் போட்டு பார்த்து அரசியல் காய்நகர்த்துவதல்ல விடயம்.

எத்தரப்பாவது தயங்காது முன்நிற்க வேண்டும். மக்களுக்காக விட்டுக்கொடுப்பதில் எதற்குத் தயக்கம்? ஏக்கத்திலிருக்கும் மானிட வர்க்கத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டும். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எத்தகைய சக்திகளாலும் அடக்கிவிட முடியாது என்பதை இத்தரப்புக்கள் இன்னும் அறியாதிருக்கின்றவா?

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களது கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் என்பதை தமிழ் மக்கள் ஆணை பெற்றவர்களும், தலைவர்களாக வலம்வந்தவர்களும், வந்து கொண்டிருப்பவர்களும் உணர்ந்திருக்கின்றார்களா?

காலம் கடந்த பின்னர் எதற்காக ஞானம்? எதற்காக நீதி?..!


- பிரம்மாஸ்திரன் -

No comments:

Post a Comment