இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Tuesday, November 25, 2014

சரித்திர ரீதியாக, 3ஆவது தவணை என்பது ஆயுட்காலம்!




லகில் பலவிதப்பட்ட ஆட்சிமுறைகள் பாவனையில் உள்ளன. இவற்றில்  ஜனநாயகம், சர்வாதிகாரம், குடியாட்சி, முடியாட்சி, கம்யூனிஸம், சோஷலிஸம் என்பவை குறிப்பிடக்தக்கவை.
ஜனநாயக ஆட்சி என்னுமிடத்தில், அங்கு ஒழுங்கு தவறாத நீதித்துறை, யாவரும் நீதியின் முன் சமன், அரசாங்கம் மீதான மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு, சமத்துவம், பலரும் ஏற்றுக்கொள்ளும் சமூக பொருளாதார கட்டமைப்பு, மக்கள் ஆட்சி, பேச்சு சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் போன்றவை காணப்படும். மோசடி நிறைந்த தேர்தலை நடத்தும் பல அரசாங்கங்கள் தங்களையும் ஜனநாயக அரசாக கருதுகின்றன. தேர்தல் நடத்துவது மட்டும் ஜனநாயகம் அல்ல. தேர்தல்கள் மோசடியற்று சுதந்திரமான வாக்கெடுப்பு, வாக்குக்கள் சுதந்திரமாக எண்ணப்பட வேண்டும்.

சர்வாதிகார ஆட்சியில் அரசியல் முடிவுகள் யாவும் ஓர் தனிநபரினால் எடுக்கப்படுகிறது. இம்முடிவுகள் தமது ஆயுதப்படைகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும். இவை ஏறக்குறைய முடியாட்சி, எதேச்சை அரசாட்சிகளை ஒத்தவையே.
குடியாட்சியில், மக்களே அரசியல் முடிவுகளின் மூலகர்தாக்கள். ஆனால் இன்று மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி கேட்கும் குடியாட்சிகளும் உண்டு.
முடியாட்சியில் அரசியல் முடிவுகள் யாவும் எதேச்சையாக நியமிக்கப்பட்ட ஒருவரிடமே காணப்படும். தற்பொழுது ஐரோப்பாவில் காணப்படும் சம்பிரதாய முடியாட்சிக்கும், மத்திய கிழக்கு மற்றும் வேறு நாடுகளில் காணப்படும் முடியாட்சிக்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் உண்டு.
கம்யூனிஸ ஆட்சியின் கீழ் ஓர் சர்வகட்சி முறை காணப்படுவதில்லை என்றும் ஒரு கட்சி ஆட்சிமுறை, மாவோ, மாக்ஸ், லேனின் ஆகிய சித்தாந்தங்களின் அடிப்படையாக கொண்டதாக காணப்படும்.
மிக அண்மைக் காலங்களில், சோஷலிஸ நாடுகள், பழைய சித்தாந்தங்களின் புதிய அடிப்படையில், ஏகாதிபத்திய எதிர்ப்பின் நவ தாராளவாத கொள்கைகளை கொண்டு காணப்படுகின்றனா. இதற்கு வெனிசுலாவும், பொலிவியாவும் நல்ல உதாரணங்கள்.
இவ் ஆட்சிமுறைகளின் சித்தாந்தங்களை ஆராய்ந்து கலந்துரையாடுவதனால், நீண்ட நாட்கள் உரையாட முடியும். இவற்றின் வரவிலக்கணங்கள், அம்சங்கள் யாவும் மிகவும் சிக்கலானவை மட்டுமல்லாது, ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன.
இவற்றில் முக்கியமான விடயம் என்னவெனில், பல நாடுகள் எந்தவித அரசியல் வியாக்கியானமோ விளக்கமோ இன்றி, தமது நாடுகளின் பெயர்களுக்குள்  குடியரசு, ஜனநாயம், சோஷலிஸம் போன்ற பதங்களை இணைத்துக் கொள்கின்றன.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா
இவற்றுக்கு ஓர் நல்ல உதாரணமாக சிறிலங்கா நிலவுகிறது. 1978ஆம் ஆண்டு, இலங்கைக்கு சோஷலிஸ ஜனநாயக குடியரசு என பெயரிட்ட முன்னாள் ஜனதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அதே ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் அறிமுகம் செய்து வைத்தார். இவர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்யும் பொழுது கூறியதாவது, இதன் அதிகாரம் என்பது ஓர் ஆணை பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மற்ற முடியாதே ஒழிய, மற்றைய யாவற்றையும் செய்ய முடியுமெனக் கூறினார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் தனி நபரிடம் அதிகாரங்கள் நிறைந்திருப்பதனாலோ என்னவோ, இலங்கையில் என்றோ ஒரு நாளைக்கு சோஷலிஸம், ஜனநாயகம், குடியரசு ஆகியவை அர்த்தமுமின்றி காணப்படும் என்ற காரணத்தினாலோ என்னவோ, பெயர் வடிவத்தில் தன்னும் இவை சிறிலங்காவிற்கு இருக்க வேண்டுமென்றே இப் பதங்களை இலங்கைக்கு 1978ஆம் ஆண்டில் சூட்டியிருந்தார்.

கறையான் புத்தெடுக்க பாம்பு குடியேறியுள்ளது என்ற தமிழ்ப் பழமொழிக்கு அமைய, நிறைவேற்று ஜனாதிபதி முறை இன்று இலங்கையில் முடிந்துள்ளது.
1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில், எந்த ஜனாதிபதியும் மூன்றாவது தடவை தேர்தலில் போட்டியிட முடியாதென திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இச்சாரத்தை, ஜனாதிபதி ராஜபக்ஷ தனக்கு பாராளுமன்றத்தில் உள்ள மூற்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை பாவித்து, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திருத்தியமைத்தார். இதன் பிரகாரம், ராஜபக்ஷ மூன்றாவது தடவை மட்டுமல்ல, எதிர்காலத்தில் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

இனப்பிரச்சினை
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இரத்தக் களரியுடனான இனப்பிரச்சினை வடக்கு கிழக்கில் தொடருகிறது. இலங்கையில் முன்னைய அரசுகள், தாம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தம்மிடம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லையென சர்வதேச சமுதாயத்திற்கு சாட்டுப் போக்கு கூறிவந்துள்ளனர். 

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவுங்கள், யுத்தம் முடிந்ததும், உடனடியாக இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் முன் வைக்கப்படுமென சர்வதேச சமுதாயத்திற்கு கூறிவந்த ராஜபக்ஷவோ, தனக்கு பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை  தனது ஆட்சியை நீடிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் மட்டுமே பாவித்துள்ளார். இனப்பிரச்சினை பற்றிய இவரது கருத்து, தற்பொழுது மாறிவிட்டது. இவர் கூறுவதாவது, இலங்கையில் சிறுபான்மை இனம் என்றோ, இனப்பிரச்சினை என்றோ ஒன்றில்லை என்கிறார்.
உலகின் சர்வாதிகாரிகளும், முடியாட்சியினரும் இராணுவ சதி மூலமும், ஆட்சியாளர்களை கொல்வதன் மூலமே ஆட்சியை கைப்பற்றி, ஒன்றில் தாம் இறக்கும் வரை அல்லது மக்களால் விரட்டி அனுப்பும் வரை ஆட்சியில் இருந்துள்ளனர். சிலர் தமக்கு பின்னர், தமது வாரிசுகளுக்கு ஆட்சியை தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர்.
முடியாட்சிக்கு, ஈரானின் மன்னர் சா ஓர் நல்ல உதாரணமாக காணப்படுகிறார். இதேபோல் இந்தோனேசியாவின் சுகாட்டோ, ஈராக்கின் சதாம் ஹுசைனின், லிபியாவின் கேணல் கடாபி, எகிப்தின் முபாரக், துனிசியாவின் அவிடின் பின் அலி ஆகியோர் சர்வாதிகார ஆட்சியின் உதாரணங்களாக உள்ளனர்.
தடுமாற்று நாடுகளில் ஆட்சி வெறி கொண்ட பல தலைவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் வாக்கு மூலம் ஆட்சிக்கு வந்த பின்னர், தமது ஆட்சியை நீடிப்பதற்கு சகல திருகுதாளங்களையும் செய்து, மக்களை பீதியில் வைத்து ஆட்சி நடத்தியுள்ளனர். இதற்கு நல்ல உதாரணமாக  கெயிற்றியின் பிரான்வாஸ் டுவலர், பிலிப்பைன்ஸின் பேடினன் மார்கோஸ், பெருவின் அல்பேர்ட் புஜிமொறி, பெலரூஸின் அலக்ஸ்சான்டர் லுக்கா சென்கோ, சிம்பாப்பேயின் றோபேட் முகாபே ஆகியோரை கூறலாம்.

ஆட்சி வெறி
இவற்றை நாம் விரிவாக பார்க்குமிடத்தில், இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின் போக்கிற்கு நல்ல உதாரணங்களாக பிலிப்பைன்ஸின் பேடினன் மார்கோஸும், சிம்பாப்பேயின் றொபேட் முகாபேயும் காணப்படுகின்றனர்.

பிலிப்பைன்ஸின் பேடினன் மார்கோஸ் முதல் தடவையாக, 1965ஆம் ஆண்டு வாக்கு மூலம் ஜனாதிபதிப் பதவியை அடைந்தவர். இவர் தனது இரண்டாவது தடவையை 1969ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பெற்றிருந்தார். 1970ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இடதுசாரிகளின் கலவரம் காரணமாக, 1972ஆம் ஆண்டு இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, தான் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டி போடுவதற்காக, அரசியல் யாப்பில் திருத்தங்களை ஏற்படுத்திக் கொண்டார். நடைமுறைப்படுத்தப்பட்ட இராணுவச் சட்டத்தை 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தளர்த்திய பின்னர், சரியாக பன்னிரண்டு வருடங்களின் பின்னர் தேர்தலை நடத்தி, மூன்றாவது தடவையாக ஜனாதிபதியானார்.
துரதிர்ஷ்டவசமாக 1986ஆம் ஆண்டு இவர் ஓர் தேர்தலை நடத்திய வேளையில், இவருக்கு  போட்டியாக, இவரது அரசினால் 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மணிலா விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட செனட்டர் பேனினிங்கோ அக்கினோவின் மனைவியார், திருமதி கோரிசன அக்கினோ போட்டியிட்டார். பேடினன் மார்கோஸ் தான் இத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்த பொழுதும், பிலிப்பைன்ஸின் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம், திருமதி கோரிசன அக்கினோவே தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தது. இவ் அறிவித்தலை தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் புரட்சியினால், பேடினன் மார்கோஸ் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இலங்கையில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு, ஒரு திருமதி கோரிசன அக்கினோ என்று உருவாகுவர்?
றொபேட் முகாபே தேர்தலில் வெற்றிபெற்று, 1980ஆம் ஆண்டு முதல் 1987வரை சிம்பாப்பேயின் பிரதமராக பதவிவகித்தவர், 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னை சிம்பாப்பேயின் நிறைவேற்று ஜனாதிபதியாக பாராளுமன்றம் மூலம் அறிவித்தார். 
வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து விடுபட்ட சிம்பாப்பேயில் 1980ஆம் ஆண்டு முதல், ஆறு பாராளுமன்ற தேர்தல்களும், 1990ஆம் ஆண்டு முதல் நான்கு ஜனாதிபதித் தேர்தல்களும் நடைபெற்றன. இவை யாவற்றிலும் றொபேட் முகாபேயும், இவரது அரசியல் கட்சியுமே இன்றுவரை வாக்கு மோசடிகள், மிரட்டல்கள் மூலம் வெற்றி பெற்று வந்துள்ளது. றொபேட் முகாபே தொடர்ந்து இன்னும் எத்தனை வருடங்கள் வாக்கு மோசடிகள், மிரட்டல்கள் மூலம் ஆட்சியில் இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது.
இலங்கையின் எதிர்காலம் சிம்பாப்பேயின் றொபேட் முகாபேயின் ஆட்சி போல் அமையுமா?

உலக நிலை
பெலரூஸின் அலக்ஸ்சன்டர் லுக்காசென்கோ 1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்றுவரை பல தில்லு முல்லு தேர்தல்களை நடத்தி ஆட்சியிலிருந்து வருகிறார்.

பெரு நாட்டில்  அல்பேர்ட் புஜிமொறி, 1990ஆம் ஆண்டிலிருந்து பல தில்லு முல்லு தேர்தல் முறை மூலம் 2000ஆம் ஆண்டுவரை ஆட்சியிலிருந்தார். இவர் ஓர் மாநாட்டிற்காக வெளிநாடு சென்றிருந்தபொழுது, இவர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இதன் காரணமாக, புஜிமொறி ஜப்பானில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டார்.
உலக நிலையை சுருக்கமாக பார்ப்போமானால், தமது ஆட்சிக் காலம் சட்ட ரீதியாக முடிந்த பின்னரும், தாம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக அரசியல் யாப்பை மாற்றி, தில்லுமுல்லு தேர்தல்களை நடத்தி தமது ஆயுட்காலம் வரை ஆட்சியில் இருக்க திட்டமிட்ட, ஆட்சி வெறி கொண்ட பல தலைவர்கள், மக்கள் எழுச்சியினால் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தனர்.
இதேபோல் சர்வாதிகார நாடுகளான  வடகொரிய, சிரியா, கொங்கோ ஜனநாய குடியாரசு, கெயிட்டி, கியூபா போன்ற நாடுகளில், ஆட்சி பிள்ளைகளின் கைகளுக்கோ அல்லது குடும்ப அங்கத்தவரின் கைகளுக்கு மாறியுள்ளதை காண்கிறோம்.
எதிர்காலத்தில் இந்நிலைமை இலங்கையில் ஏற்படுவதற்கான சாத்வீகங்கள் நிறைந்து  காணப்படுகின்றன!

ச.வி.கிருபாகரன்,
பிரான்ஸ்

No comments:

Post a Comment