
இதைப் பற்றி யாராவது பேசினால்கூட, அரசு எப்போதும் பொய்தான் சொல்கிறது, வரும்போதுதான் நிச்சயம் என்று பேச்சை வெட்டிவிடுகிறார்கள்.
பள்ளியிறுதித் தேர்வை எழுதுவதற்காகப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 16 வயது முதல் 18 வயதுவரையுள்ள பெண்கள்தான் அங்கே தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள். நைஜீரியாவில் நல்லதே நடப்பதில்லை என்பதற்கு அடையாளமாகி விட்டார்கள் அந்தப் பெண்கள். போகோ ஹரம் ஆட்கள் அங்கு வரக்கூடும் என்ற உளவுத் தகவல் கிடைத்த பிறகும் பாதுகாப்பைப் பலப்படுத்த அரசும் இராணுவமும் தவறியது. கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவிட்டும் நைஜீரிய இராணுவத்திடம் போதிய சாதனங்களும் ஆயுதங்களும் பயிற்சியும் போர்க் குணமும் இல்லை. அரசின் அலட்சியத்தாலும் அரசின் பேராசையாலும் அரசின் அக்கறையற்ற செயல்பாட்டாலும் தாங்கள் அனுபவித்துவரும் துயரங்களை நாட்டு மக்கள் அனைவருமே பட்டியலிடக்கூடும்.
சிபோக் மாணவிகளின் நிலைமை நம்முடைய துயரங்களின் சிகரம். விதியின் விளையாட்டு. நாளை நமக்கும் அவர்களுடைய கதி ஏற்படலாம். அவர்களை நாம் தொலைத்ததுதான் நம்முடைய கையறுநிலையின் ஆழம். அவர்களை மீட்பது நல்ல நம்பிக்கைக்குத் தொடக்கமாக இருக்கும். ஆனால், சிபோக் மாணவிகளை மீட்பதால் மட்டுமே, போகோ ஹரமால் விரட்டப்பட்டு வட நகரமான யோலா உள்ளிட்ட பகுதிகளில் அகதிகளாக வாழும் ஆயிரக் கணக்கானவர்களுடைய பிரச்சினை தீரப் போவதில்லை.
இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை
நைஜீரிய இராணுவத்துக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பியதற்காக 12 வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களுடைய தளபதியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகக் குரலெழுப்பவில்லை. போரிடுவதற்கு ஆயுதங்களும் குண்டுகளும் இல்லை என்பதால் எதிர்த்தனர். கடந்த வாரம் முபி நகரை போகோ ஹரம் பயங்கரவாதிகள் கைப்பற்றினார்கள். அங்கிருந்த இராணுவ வீரர்கள் ஆயுத சாலையைக்கூடத் திறந்து போட்டு விட்டு ஓடி ஒளிந்தனர். சிபோக் பெண்கள் கடத்தப்பட்ட 10 நாட்களுக்கு அதைப்பற்றி எழுதிய பத்திரிகைகளும் இப்போது வேறு பரபரப்பு செய்திகளுக்குப் போய்விட்டன. மேலை நாடுகளும் இதை ஒரு போராகவும், மாணவிகளைப் போரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் தான் பார்க்கின்றன. இளம் பெண்கள் , பையன்கள், முதியவர்கள் , நடுத்தர வயதுப் பெண்கள் , குழந்தைகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் , பாதிரியார்கள், இமாம்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள் , பத்திரிகையாளர்கள் என்று எல்லா தரப்பினரும்தான் எந்தவிதக் காரணமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
மேலை நாடுகளின் சதி!
மேலை நாடுகளின் சதி!
சிபோக் சம்பவம் குறித்து உலக நாடுகள் ஏன் அக்கறை காட்டுகின்றன? நைஜீரியாவில் காலூன்றி நாட்டையே கைப்பற்றச் சில ஆதிக்க சக்திகள் முயல்கின்றன என்று மனிதாபிமானத்தைக்கூட சதியாகப் பார்க்கிறார்கள். 2013 இல் அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் நைஜீரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான என்கவுன்டர்கள் , பாலியல் பலாத்காரங்கள், சித்திரவதை, காவல் நிலையத்தில் அடிப்பது என்று அதில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அப்பாவிகளும் இணை பலியாகின்றனர். இதனாலேயே நைஜீரிய அரசுக்கு ஆயுதங்களைத் தர அமெரிக்கா மறுத்துவிட்டது.
பெயரளவில் ஜனநாயகம்
என்னுடைய தென்னாபிரிக்க நண்பர்கள் அவர்கள் நாட்டில் இதைப் போல நடந்தால், இதற்காகவா முன்னோர்கள் உயிரைக் கொடுத்து நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டனர் என்று கேட்பார்கள். நைஜீரியாவுக்கும் எளிதாகச் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. நிச்சயம் 276 பெண்கள் இப்படிக் காடுகளுக்குக் கடத்திச் செல்லப்படுவதற்காக அவர்கள் போராடவில்லை என்று சொல்ல முடியும். அந்த மாணவிகள் திரும்ப அழைத்து வரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், எந்த மாதிரியான நைஜீரியாவுக்கு?
ஹர்கோர்ட் துறைமுக நகரில் ஒரு கலாசார நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அழுக்குப் படிந்து, கந்தலான தேசிய உடையில் நைஜீரியாவாகச் சித்திரிக்கப்பட்ட ஒரு சிறுமி தரையில் விழுந்து கிடந்தாள். நைஜீரியாவின் இன்றைய நிலைக்குக் காரணங்களை மற்ற சிறுமிகள் அவளைச் சூழ்ந்து நின்று பாடலாகப் பாடினார்கள். அரசின் ஊழல், முரட்டுத்தன்மை, அலட்சியம் எல்லாம் பட்டியலிடப்பட்டது. நாடகம் அத்தோடு முடியவில்லை. அந்தச் சிறுவர்கள் இளைஞர்களாகி வலுவடைந்து நாட்டையே மாற்றுகிறார்கள். அழுக்கு படிந்து கந்தலாக இருந்த ஆடை பட்டாடையாகப் புதிதாகப் பளபளக்கிறது. தரையில் கிடந்த சிறுமி அழகிய, வலுவுள்ள யுவதியாக எழுந்து உற்சாகமாக, நளினமாக நடனமாடுகிறாள். ஆம் இதுதான் சரி, அந்தப் பெண்கள் அத்தகைய நைஜீரியாவுக்குத்தான் திரும்ப வேண்டும். திரும்பி நைஜீரியாவை மீண்டும் மகிழ்ச்சியுடன் நடனமாட வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment