சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிகள், கொழும்புத் துறைமுகத்துக்கு அடிக்கடி வரத்தொடங்கியுள்ள விவகாரம், இராஜதந்திர மட்டங்களில் சர்ச்சையாக உருவெடுத்துவருகிறது.
சீன நீர்மூழ்கிகள் அடிக்கடி கொழும்புத் துறைமுகத்துக்கு வரத் தொடங்கியுள்ளதை, இந்தியா கவலையுடனும் கலக்கத்துடனும் பார்க்கத்தொடங்கியுள்ளது.
இதை வழக்கத்துக்கு மாறானதொரு செயற்பாடாகவே இந்தியா
கருதுகின்றபோதிலும், இலங்கை கடற்படையும் சீனப் பாதுகாப்பு அமைச்சும் இது வழக்கமான நடைமுறையே என்று தட்டிக்கழிக்க முனைகின்றன. இந்நிலையிலேயே, சீன நீர்மூழ்கிகளின் அடுத்தடுத்த கொழும்புப் பயணங்கள், வழக்கத்துக்கு மாறானதொன்றா என்ற கேள்விக்கு விடை தேடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், கொழும்புக்கு வருகைதருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே, சீனாவின் நீர்மூழ்கியொன்றும் பாரிய விநியோக போர்க்கப்பலொன்றும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தன. சீன நீர்மூழ்கிக்கப்பலொன்று இந்துசமுத்திர பிராந்திய நாடொன்றின் துறைமுகத்துக்கு மேற்கொண்ட முதலாவது, வெளிப்படையான பயணம் இதுவாகும். அதுவும், இந்தியாவுக்கு மிக நெருக்கமாகவுள்ள கொழும்புத் துறைமுகத்தில், கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் சீன நீர்மூழ்கி தரித்துநின்ற விவகாரத்தை இந்தியா அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விவகாரம்.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னதாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறிப்பாக, இலங்கை கடற்பரப்பில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை இந்தியக் கடற்படையின் சோனார் கருவிகள் கண்டுபிடித்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அவ்வாறு எந்த நடமாட்டத்தையும் தாம் அவதானிக்கவில்லை என்று ஒரே வார்த்தையில் கூறி முடிந்திருந்தது இலங்கை கடற்படை.
என்றாலும், கடந்த செப்டெம்பர் மாதம் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கியொன்று தரித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானபோது, அதை இலங்கை கடற்படை நிராகரிக்கவில்லை. அதேவேளை, அந்தச் செய்தியை இலங்கை கடற்படை ஏற்றுக்கொள்ளவுமில்லை. எந்தக்கருத்தும் கூறாமல் அமைதி காத்துவந்தது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த அமைதி, கடந்த மாத இறுதியில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் வாய் திறக்கும்வரையில் – சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்திருந்தது.
கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த சீனாவின் நீர்மூழ்கி தொடர்பான தகவல் வெளியானதுமே உசாரடைந்த இந்தியா, இது குறித்து இலங்கையிடம் கவலையை வெளிப்படுத்தியது. இதற்கு பின்னர், இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாத்தூர் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியது. அதையடுத்து, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 20ஆம் திகதி புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டு பேச்சு நடத்தப்பட்டது.
இதன்போது, எந்தவொரு சீன நீர்மூழ்கியும் இலங்கையில் தரித்துநிற்பதை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்திருந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. அதையடுத்து, கடந்த மாத இறுதியில், 5 நாள் பயணமாக புதுடெல்லிக்குச் சென்றிருந்த இலங்கை கடற்படைத் தளபதியிடமும் இது குறித்த இந்தியாவின் நிலைப்பாடு எடுத்துக்கூறப்பட்டிருந்தது.
முதலாவது சீன நீர்மூழ்கி கடந்த செப்டெம்பர் மாத முற்பகுதியில் கொழும்புக்கு வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, அது பற்றிய இந்தியாவின் அதிருப்தியும் கருத்தும் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, தமது நீர்மூழ்கிகளின் அடுத்தடுத்த வருகைகளுக்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுவிட்டது சீனா.
ஒக்டோபரிலும் நவம்பரிலும் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிகள் தரித்துநிற்பதற்கு, இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதமே அனுமதி கொடுத்துவிட்டது. இதற்கு பின்னரே, இந்தியாவின் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியா எதிர்த்தாலும், சீனாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யும் தைரியம் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. ஏனென்றால், சீனாவிடம் இலங்கை மிகப்பெரியளவில் கடனை வாங்கிக் குவித்திருக்கிறது. எல்லா விடயங்களிலும் சீனாவிடமே தங்கியிருக்கப் பழகிக்கொண்டுள்ளது. அந்த நாட்டுடன் நெருக்கமான உறவையும் பேணிவருகிறது.
இந்தியாவின் அதிருப்தியை பொருட்படுத்தி, சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வருவதற்கு வழங்கிய அனுமதியை இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்தால், சீனாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, இரண்டாவது சீன நீர்மூழ்கியின் வருகைக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷவிடம் புதுடெல்லியின் அதிருப்தி வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் கடற்படைத்தளபதி புதுடெல்லியிலிருந்து திரும்பிய 24 மணி நேரத்துக்குள்ளாகவே, கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்திருந்தது அடுத்த சீன நீர்மூழ்கியான சங்சென்-2. இது இராஜதந்திர வட்டாரங்களில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்தியாவின் கருத்தையும் கவலையையும் புறக்கணித்துவிட்டு, முதல் நீர்மூழ்கி விவகாரத்தின் சூடு ஆறுவதற்குள்ளாகவே, அடுத்த நீர்மூழ்கி வந்திருக்கிறதே என்று அவர்கள் குழப்பமடைந்தனர்.
இந்தியாவின் கவலையையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சீன நீர்மூழ்கிக்கு இலங்கை அனுமதி அளித்தது, இந்தியாவை அவமானப்படுத்துமொரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவிடம், சீன நீர்மூழ்கி பற்றி கேள்வியெழுப்பியபோது, அவர் வந்தது அணுசக்தி நீர்மூழ்கியல்ல என்றும் அது டீசல் மற்றும் பற்றரியில் இயங்கும் நீர்மூழ்கியே என்றும் கூறி சமாளிக்கப் பார்த்தார். அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு எமது பாதுகாப்பு என்றும் இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் சமரசத்துக்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அந்த உறுதிமொழி ஒரு சில நாட்களுக்குள் மீறப்பட்டு விடுமென்று இந்தியத் தரப்பில் கொஞ்சமும் எதிர்பார்க்கப்பட்டிருக்கவில்லை. இப்போது இரண்டாவது சீன நீர்மூழ்கியும் கொழும்பில் தரித்துநின்றுவிட்டுத் திரும்பியிருக்கிறது.
முதல் முறை, சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்துநின்ற விவகாரம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சீன பாதுகாப்பு அமைச்சு அதை ஒப்புக்கொண்டது. அதுவும், சீன பாதுகாப்பு அமைச்சில் நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதிலின்போதே, சீனா அதை ஒப்புக்கொண்டது.
சோமாலிய கடற்கொள்ளையருக்கு எதிராக ஏடன் வளைகுடாவில், நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கச் செல்லும் வழியிலேயே, சொங் என்ற நீர்மூழ்கி கொழும்பில் தரித்துச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார் சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர்.
சீன நீர்மூழ்கி கொழும்பு வந்த விவகாரத்தை கடந்த 26ஆம் திகதி புதுடெல்லியில், முதன்முறையாக இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஒப்புக்கொண்ட பின்னர், கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் அது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கடற்படைப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் 238 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்துசென்றிருப்பதாக தெரிவித்திருந்தார். நல்லெண்ணப் பயணமாகவும் எரிபொருள் நிரப்பவும் மாலுமிகள் ஓய்வெடுக்கவுமே இவை இலங்கைத் துறைமுகங்களுக்கு வருவதாகவும் இது சர்வதேச அளவில் நடக்கின்ற வழக்கமானதொரு செயற்பாடே என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம், சீன நீர்மூழ்கியின் கொழும்புப் பயணத்தை, வழக்கமானதொன்றே என்றும் அதில் பாதுகாப்பு உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். மீண்டும், இரண்டாவது நீர்மூழ்கி கொழும்புத் துறைமுகத்தில் தரித்துநின்றபோதும், அவர் அவ்வாறே கூறியிருந்தார்.
ஆனால், இந்தியாவோ இதை வழக்கமானதொரு நடைமுறையாக எடுத்துக்கொள்ளத் தயாராகவில்லை.
ஏடன் வளைகுடாவில், கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையில், நீர்மூழ்கிகளை பயன்படுத்துவது என்பதும் அங்கு செல்வதாக கூறிக்கொண்டு, அவை கொழும்புத் துறைமுகத்தில் அடிக்கடி தரித்துநிற்கத் தொடங்கியுள்ளதும் வழக்கத்துக்கு மாறானதென்று குறிப்பிட்டுள்ளார் இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன்.
புதுடெல்லியிலுள்ள இந்திய உயர்மட்டத்தில், இரண்டாவது நீர்மூழ்கியும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தமை குழப்பத்தையும் விசனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. அதுவும், வியட்நாம் ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட சில நாட்களின் பின்னரே, சீன நீர்மூழ்கி கொழும்பு வந்திருந்தது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வியட்நாம் சென்றபோதே, முதலாவது சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்துநின்றது. இந்தப் பயணங்கள் குறுகிய நாட்களுக்குள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல. இந்திய - வியட்நாம் உறவுகளுக்கு பதிலடி கொடுக்குமொரு நகர்வாகவே தமது நீர்மூழ்கிகளை கொழும்புக்கு சீனா அனுப்புகிறதா என்ற சந்தேகத்தையும் இந்திய அதிகார மட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இரண்டாவது நீர்மூழ்கி கொழும்பில் தரித்திருந்தபோது, இந்தியா கடும் கோபத்தில் இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து, சீன பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தியாவின் கவலை தேவையற்றது என்றும் தமது நீர்மூழ்கிகள் எரிபொருள் நிரப்பவும் ஓய்வெடுக்கவுமே கொழும்பில் தரித்துநிற்பதாகவும் அது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு வழக்கமான நடைமுறையே என்றும் சீன பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கூறியிருந்தார்.
ஆக, நீர்மூழ்கிகளின் வருகை விடயத்தில் இலங்கையும் சீனாவும் ஒத்த கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.
முதலாவது, இரண்டு நாடுகளுமே, நீர்மூழ்கிகளின் கொழும்புத் துறைமுகத்துக்கான பயணம் குறித்த தகவலை தாமாக வெளியிடவில்லை. முடிந்தளவுக்கு மறைப்பதற்கே முயன்றன.
இலங்கை கடற்படை, வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், அது பற்றிய செய்திகளை படங்களுடன் வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், சீன நீர்மூழ்கிகளின் வருகை பற்றிய தகவலை மட்டும், ஒன்றுக்கு இரண்டு தடவைகளும் வெளியிடவேயில்லை.
இரண்டாவது, இரு நாடுகளுமே நீண்ட மௌனத்துக்கு பின்னர், செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய சந்தர்ப்பத்தில் மாத்திரம், அதனை ஒப்புக்கொண்டன. மூன்றாவது, எரிபொருள் நிரப்பவும் ஓய்வெடுக்கவும் வெளிநாட்டுத் துறைமுகங்களை நாடுவது வழக்கமான நடைமுறையே என்று இரு நாடுகளுமே கூறியுள்ளன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்த விடயத்தில் இரு நாடுகளும் ஏற்கெனவே பேசித் தீர்மானித்துவிட்டே கருத்துக் கூற முனைந்துள்ளதாக தோன்றுகிறது.
இந்த விடயத்தில், அயல் நாடான இந்தியாவிடம் இலங்கை வெளிப்படைத்தன்மையுடன் நடக்கத் தவறியுள்ளது. இதன் விளைவாகவே, இது வழக்கமானதொரு பயணமா, வழக்கத்துக்கு மாறான பயணமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, இந்தியாவை அலட்சியம் செய்யும் இலங்கையின் போக்கு அண்மைக்காலமாகவே அதிகரித்துவிட்டது.
அதனாலேயே, கடந்த சில வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் உச்சநிலை இன்னமும் ஏற்படவில்லை.
இந்நிலையை சீர்செய்ய புதுடெல்லி அண்மையில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, நீர்மூழ்கி விவகாரத்தின் மூலம் இலங்கை பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய நிலையில், என்னதான் இது வழக்கமானதொன்று என்று சீனாவும் இலங்கையும் கூறிக்கொண்டாலும், இந்தியாவின் பார்வையில் இது வழக்கத்துக்கு மாறானதொன்றாகவே தென்படும். ஏனென்றால், இது இந்தியாவை அதிகம் ஆத்திரத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
கே.சஞ்சயன்

No comments:
Post a Comment