இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Friday, November 14, 2014

இந்தியாவின் கடமை!

இலங்கைத் தமிழர்களுக்கு  உதவ இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்று தமிழக தினசரிப் பத்திரிகையான"தினகரன்' நேற்று முன்தினம் வலியுறுத்தியுள்ளது. 
"இந்தியாவின் கடமை ' என்று மகுடமிட்டு அப் பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது ;

சென்னைக்கு வந்திருந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கருத்தரங்கு  ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவருடைய பேச்சில் இருந்த அதிர்ச்சியும் வேதனையும் ஆதங்கமும் இயலாமையும்  இலங்கையில் நடைபெறும் யதார்த்த நிகழ்வுகளை பிரதிபலித்துள்ளன. இலங்கையில் நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போரின் உச்சக் கட்டத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அப்பட்டமாக நடந்தன.
அந் நாட்டு இராணுவம் போர்க் குற்றம் புரிந்தது. ஒரு சமுதாயத்தையே  வேரோடு அழிக்கும் முயற்சிகள் நடந்தன. சொந்தங்களையும் வீடுகளையும் இழந்து இலட்சக்கணக்கில் தமிழர்கள் நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். உள்நாட்டுப் போர் முடிந்ததும் எஞ்சிய தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களில் தங்க வைக்கவும் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உதவி செய்தன.
தமிழர்களுக்குப் பாதுகாப்பும் உரிமைகளும் வழங்க ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறின. போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குட்பட இலங்கை இதுவரையில் மறுத்து வருகிறது. 

 இந்த நிலையில் உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது என்பது வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பேச்சில் இருந்து வெளிப்பட்டுள்ளது. போருக்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவ  வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனராம். தமிழக மக்களின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம்  நசுக்கப்படுகிறது.

உள்நாட்டுப்  போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா சார்பில்  கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளைக் கூட உரியவர்களுக்கு கொடுக்காமல் அரசின் ஆதரவு பெற்ற கைக் கூலிகளுக்கே வழங்கப்பட்டுள்ளனவாம். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கெ õடுக்கப்படும் ஆவேச குரல்களால் அங்குள்ள ஆட்சியாளர்கள் ஆத்திரமடைந்து அதை அங்குள்ள தமிழர்களிடம் காட்டும் அளவுக்கு இரக்கமற்றவர்களாக உள்ளனர் என்பது விக்னேஸ்வரனின் குற்றச்
சாட்டு. ஒற்றையாட்சியில் இருந்து மாற்றம்  கொண்டு வந்து மாகாணங்களுக்கான உரிமையைப் பகிர்ந்தளிக்க இலங்கை அரசு சட்டம் இயற்ற வேண்டும். 


இந்தியா கட்டிக் கொடுத்துள்ள வீடுகளை தமிழர்களுக்கே வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். இவற்றுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் காலதாமதம் செய்யாமலும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் போக்கில் அலட்சியம் காட்டாமலும் கடமையில் இருந்து தவறாமலும் இந்தியா உடனடியாக தலையிட்டு தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment