இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Tuesday, November 11, 2014

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இன்றைய நிலையினைப் பற்றி மீளச் சிந்திப்பவர்கள் யார்?

நாட்டில் ஏற்படக் கூடிய ஏனைய விளைவுகளைக் கருத்திற் கொள்ளாத வகையில் அடுத்த வருட ஆரம்பத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறலாம் என்பது மென்மேலும் உறுதியாகிக் கொண்டு வருகிறது. அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய  ரம்புக் வெல ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க விருப்பதாக அறிவித்துள்ளார்.  அதுமாத்திரமன்றி  தேர்தல் நடைபெற உள்ள திகதி பற்றி தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அதனை வெளியிடப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். கள நிலையில்
இடம்பெறுவனவற்றைக் கவனித்துப் பார்க்கையிலும் கூட அது தேர்தல் அண்மையில் இடம்பெறலாம் என்ற அனுமானத்திற்கு இடமளிப்பதாகவே காணப்படுகிறது. தேர்தல் ஆணையாளரும் வழக்கம் போல் டிசம்பர் மாதத்திலல்லாது இவ்வருடம் சற்று விரைவாக அக்டோபர் மாதத்திலேயே வாக்காளர் அட்டவணையை தயார் செய்தும் விட்டார். அதுமாத்திரமன்றி இவ் வருடத்திற்கான  வருடாந்த வரவு   செலவுத் திட்டமும் கூட இவ்வருடம் வழக்கத்திற்கு மாறாக  அக்டோபர், நவம்பர் மாத முற்பகுதியிலேயே வெளியாகி விட்டது.   வரவு செலவுத் திட்டத்தில்  வழங்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கான சலுகைகள் பற்றிப் பார்க்கையில் அது ஒரு தேர்தலுக்கான கவர்ச்சி காட்டும் வரவு  செலவுத் திட்டமாயிருக்கிறது.  ஆனால்,  வழங்கப்படப் பிரேரிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கான நிதி வரவு எப்படியிருக்கும், எப்படி பெற்றுக் கொள்ளப்படும் என்பது வெளியிடப்படாத (இரகசியம் ) ஒன்றாகும். வரவு  செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பதாகவே நாட்டிற்கு ஏற்படப் போகும்  ஒளிமயமான எதிர்காலம் வரவிருக்கும் வரவு  செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்படவுள்ளதாக பெருமளவு ஊடக விளம்பரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவற்றோடு அரசாங்கத்தின் வளங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கான சுவரொட்டிகளும் பிரசாரக் கூட்ட மேடைகளையும் ஏற்படுத்தி வருவதாகவும் ஊடகங்கள்  செய்திகளை வெளியிட்டுள்ளன. அரசாங்கம் இவ்வாறாக தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருவதற்கு சான்று கூறும் ஆதாரங்கள் பற்றி தெளிவான விபரங்கள் கிடைக்கவுள்ளன என்பது ஒரு புறமிருக்க ,  தனது திட்டத்தைக் கைவிடாது அரசாங்கம் குறித்த காலத்திற்கு முன்னர் நடத்தும் தேர்தல் திட்டங்கள் தொடருமானால்  அதனால் விளையக் கூடிய எதிர்மறை பாதக விளைவுகளையும் எதிர்நோக்க அது தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.   ஜனவரி மாத மத்திய பகுதியில் போப்பாண்டவரது இலங்கைக்கான விஜயம் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு அவர் வருகின்ற காலப் பகுதியில் தான் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகின்றதா என்பது பற்றிய தகவலை அரசாங்கம்  இன்னும் கூறாது தாமதப்படுத்துவதால் குறிப்பாக கத்தோலிக்க ஆலயத்தினர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகலாம் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. அதி வண. மேற்றிராணியார் மல்கம் ரஞ்ஜித்  ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வத்திக்கானிலிருந்து ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் திகதியை கிறிஸ்தவ ஆலயத்திற்கு அறிவிக்கும் படி கேட்டிருக்கின்றார். ஆனால் அக் கடிதத்திற்கு  ஜனாதிபதி தரப்பிலிருந்து இன்னும் பதில் அனுப்பப்படவில்லை. இதனால் இலங்கை கத்தோலிக்க ஆலயத்தினர் ஒரு இரண்டக நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால் இது பற்றி தெரிந்து கொள்வதில் பெரிதும் கரிசனத்துடன் இருக்கும் வத்திக்கானுக்கு தேர்தல் திகதி பற்றிய செய்தியை அறிவுறுத்த முடியாத இக் கட்டான நிலையிலுள்ளனர். போப்பாண்டவரது பயணம் உள்ளூர் கட்சி அரசியல், தேர்தல் முரண்பாடுகளிலிருந்து விடுபட்டதாக அமைதியான சூழலில்  இடம்பெறுவதனை உறுதி செய்வதில் வத்திக்கான் பெரிதும் அக்கறை கொண்டது. அதற்கான வழக்கமாக எங்கொரு நாட்டிலும் தேர்தல்கள் நடக்குமானால் அதற்கு ஒரு மாத காலப் பகுதிக்குள் போப்பாண்டவர் அங்கு பயணம் செய்வதில்லை என்பது வத்திக்கானின் ஒரு மரபு ஒழுங்கு முறையாகும். 

போப்பாண்டவரது  வருகை


ஆர்ச் பிஷப் மாளிகைப் பேச்சாளர் வண. அருட்தந்தை சிறில் காமினி அவர்கள் இதுபற்றிக் கூறுகையில் ; தேர்தல்  ஆணையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உறுதியான திகதியை உத்தியோக பூர்வமாக வெளியிட்டதன் பின்னர் தான் போப்பாண்டவரது இலங்கைக்கான வருகை பற்றி உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ; இன்னும் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. அத்துடன் ஜனவரி 2015 இல் தேர்தல் நடக்குமானால் நாட்டிற்கு போப்பாண்டவரது வருகை பற்றி கத்தோலிக்க  ஆலயம் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரலாம் என்றும் கூறியுள்ளார்.  வத்திக்கான் நிர்வாகம் போப்பாண்டவரது இலங்கைப் பயணத்திற்கான திகதியையும் தீர்மானித்ததன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ நேரில்  சென்று அழைப்பு விடுத்தமை என்பது முழு இலங்கைக்குமே ஆச்சரியமான ஒன்றாகும். இவ்வாறான  ஒரு நடவடிக்கை ஜனாதிபதியின் ஒரு அரசியல் தந்திர நுட்பமாக அதாவது போப்பாண்டவரது இலங்கை விஜயத்தினை தான் நேர்மையாக  விரும்புவதாக இலங்கை வாழ் கத்தோலிக்கப் பெரு மக்களிடம் காட்டிக் கொண்டு அவர்களை நம்ப வைப்பது மாத்திரமன்றி எதுவித ஏனைய நிலைவரங்களுக்காகவும் இலங்கைப் பயணத்தை தாமதிக்காது போப்பாண்டவரை வர வைப்பதற்கான ஒரு திட்டமுமாகும் என்று தான் நம்பப்படுகிறது. போப்பாண்டவர் பிரான்சிஸ் அவருடைய முறைப்படி அல்லாத அல்லது கட்டுப்பாடற்ற அணுகு முறைக்குப் பிரசித்தமானவர். அதனால் அவர் வழக்கமான மரபு ஒழுங்குகளைத் தவிர்த்து நடந்து கொள்வதும் முற்றாக இருக்காது என்றும் கூறுவதற்கில்லை. அவருடைய கள்ளம் கபடமற்ற  இயல்புகளும் சம்பிரதாயங்களை  தகர்த்துச் செல்லும் பண்பும் காரணமாக ஏற்கனவே "மக்கள் பாப்பாண்டவர்' என்ற பெயரைச்  சம்பாதித்துக் கொண்டவர். அத்துடன் அவரே சில விடயங்கள் பொறுத்து வரலாற்றில் முதன்மையான போப்பாண்டவராகவும் கருதப்படுபவர். அவரே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது  போப்பாண்டவர். அதேபோன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் முதலாவது போப்பாண்டவர்.  1300 வருடங்களில் முதன் முதலாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐரோப்பியரல்லாதவர். கத்தோலிக்க குழு (ஜேசுய்ட்) உறுப்பினர்களில்  பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுக் கொண்ட முதல் உறுப்பினரும் இவரேயாவார். மேற்கத்தைய நாடுகளில் பயன்படுத்தப்படாது உள்ள பெண் துறவியர் மடம் ( கொண்வென்ட் ) மற்றும்  துறவி மடங்களை  வெளிநாடுகளிலிருந்து குடிவந்துள்ளவர்கள் (Migrants) மற்றும் அகதிகளின் வீட்டு வசதிக்காக பயன்படுத்தலாம் என்ற கருத்தை பிரேரித்தவரும் கூட.  போப்பாண்டவர் தனது வழக்கத்திற்கு மாறான சிந்தனையைக்  கொண்டுள்ளதோடு வத்திக்கானுக்கு அறிமுகம் செய்துள்ளமைக்கும் இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமேயாகும். எனவே போப்பாண்டவரது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பிலும் கூட வழக்கமான மரபு ஒழுங்குகளை இவர் தவிர்க்கலாம் என்றும் கூட நம்ப இடமுண்டு . அதுமட்டுமன்றி இலங்கையின் கத்தோலிக்க மக்கள் போப்பாண்டவரது வருகையை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். ஜனாதிபதி  வத்திக்கான் சென்று போப்பாண்டவர் பிரான்சிஸைச் சந்தித்துவிட்டு வந்ததன் பின்னர் வத்திக்கானிலிருந்து ஒரு சிறப்புக் குழு அவரது இலங்கை விஜயம்  தொடர்பான பயண ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதனைக் கண்காணிக்க நவம்பர் ஆரம்பப் பகுதிகளில் இலங்கைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து இலங்கைக்கு போப்பாண்டவர் விஜயம் செய்வதனைத் தவிர்க்க எதுவித தீர்மானங்களும்  வத்திக்கானில்  இதுவரை எடுக்கப்படவில்லை என்பதனையே காட்டுவதாகவும் நம்பலாம்.   எவ்வாறாயினும் இன்னுமோர் அரசியல் அம்சம் தேங்கிய நிலையிலிருக்கிறது. அதாவது தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிப் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, ஜனாதிபதி மூன்றாவது  முறையாக போட்டியிடல் மற்றும் தேர்தலுக்கு முன்னதாக செய்ய வேண்டியதெனக் கூறப்படும்  யாப்பு சீர்திருத்தங்கள் பற்றிய ஒரு  காலக் கெடுவைக் கொடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என எச்சரித்துள்ளது. அக்கட்சி தனது தேசிய மகா நாட்டின் போது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு  உயர் நீதிமன்றம் மற்றும் மீள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கக் கொண்டுள்ள  அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும்  எனக் கோரியுள்ளது. அத்துடன் ஜனாதிபதி வைத்திருக்கக் கூடிய அமைச்சுகள்  எவையென்பது யாப்பில் இடம்பெற வேண்டும்  என்றும் அவர் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறுபவராக பதில் கூறுபவராக இருக்க வேண்டும் என்றும்   மாற்றங்கள் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது. ஜனாதிபதியை  அக் கட்சியினர் சந்தித்த போதும் இவற்றை மீள வற்புறுத்திக் கூறியுள்ளனர்.  அதற்குப் பதிலளித்த போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இவற்றை செய்து முடிக்க கால அவகாசம் போதியளவில் இல்லை என்று ஜனாதிபதி கூறியதாக  தகவல்கள் வெளிவந்துள்ளன.  

 தாமதமாகிய தேர்தல்கள்.

மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதி பதவிக்கு ஒரே நபர் போட்டியிடுகையில் அத்தேர்தல் அரசாங்கத் தரப்பிற்கு ஏற்றதாயிருக்காது என்பது அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கும். இவ்வாறான சூழலில் அரசாங்கம்  தேர்தலில் வென்று வர நல்லாட்சி எண்ணங்களை துறந்து விட்டு பழைய உபாயங்களான பொது மக்களது கவனத்தை இனத்துவ தேசியத்துவம்  மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கு மீண்டும் திசை திருப்புவதாயிருக்கும். எந்தவொரு தேர்தலிலும் ஜாதிக ஹெல உறுமய பெருமளவுக்கு வாக்குகளைப் பெற்றிராத போதிலும் பெரும்பான்மை சிங்கள  இன   மக்களது அரசியல்  சிந்தனைகளுக்கு உருவம் தந்து வடிவமைப்பதால் அதன் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சி இப்போது நல்லாட்சி தொடர்பான சிந்தனைகளில் தனது அக்கறையினைக் காட்டி வருவதால் தொடர்ந்தும் கடந்த காலங்களில் இப்போதைய அரசாங்கம் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு உடந்தையாக இருந்த இனத்துவ தேசிய  கூட்டுறவில் ஒரு விரிசலை ஏற்படுத்த முடியும்.   ஆனால், அக் கட்சிக்கே கூட   சாதகமற்றதாகவுமிருக்கும் . இக் கட்சியின் தலைமைத்துவம் அதே நேரத்தில் தான் இப்போதைய  எதிர்க்கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவதை விரும்பவில்லை என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.    இத் தேர்தலுக்கும்  நாட்டின் இறைமையினை முன்நிறுத்தியே பிரசாரம் இடம்பெறத் தொடங்கி விட்டது. இலங்கையின் யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தின் போது மனித உரிமைகள் மீறப் பட்டு யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பதனை உறுதி செய்வதற்கான ஐ.நா. சபையின் விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த மார்ச் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள   கூட்டத்தினை அரசாங்கம் வழக்கமாகக் கூறிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கம் வென்று விட்டதற்கு அரசாங்க தலைவர்களைப் பழிவாங்குவதற்கான சர்வதேச  சதி என அதனை முத்திரை குத்தி நடைபெறவுள்ள தேர்தலுக்காக மக்களிடம் அவ்வாறு  எடுத்துக் கூறி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்வதாக கடந்த தேர்தல்களின் போது செயற்பட்டதனைப் போன்றே அரசாங்கம் இப்போதும் செயற்பட ஏற்றதாக ஒரு வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டுள்ளது. வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது பெருமளவான எண்ணிக்கையிலானவர்களாவது அரசாங்கம் விரும்பி வேண்டுவது போன்று  சிந்திப்பதனை மீண்டும் உறுதி செய்ய இலகுவாக ஐரோப்பிய ஜூனியன் நாடுகளது  நீதிமன்றம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான சர்வதேச தடையை வழக்கின் சட்ட நுட்பங்களின் காரணமாக  நீக்கியுள்ளமையும் இத் தருணத்தில் நினைவு கூரத்தக்கதாகும். எனவே,  ஜெனீவாவில்  வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் இலங்கையில்  தேர்தல் நடக்குமானால் இலங்கை மக்களிடம் தேசியத்தினை உசுப்பி விட்டு வாக்குகளைச் சேகரிக்க இலங்கை அரசாங்கத்திற்கு அனுகூலமான நிலைவரம் ஏற்பட்டிருக்கின்றது.   இலங்கையில் எப்போதும் ஊழல்கள் மற்றும் நல்லாட்சி தொடர்பில் பெரும் குறைபாடுகள் இருந்து வருவதால் இப்போது இலங்கையின் பெரும்பாலான  மக்கள் வாழ்க்கைச் செலவு பற்றிய பிரச்சினைகளிலேயே பெரிதும் வேதனையடைந்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரவு  செலவுத் திட்டம் மக்களுக்கு வாழ்க்கைச் செலவினை பெரியளவுக்கு குறைக்க சலுகைகளை தந்துள்ளதாக காணப்படுகின்றமையிலிருந்து மக்களது வாழ்க்கைச் செலவு பிரச்சினை மோசமாகியுள்ளமையினை அரசாங்கமும் அங்கீகரித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதிலும் அரசாங்கத்தின் பிரதான சலுகைகள் பொதுத்துறைப் பணியாளர்களை மையமாகக் கொண்டதே என்பதும் இலங்கையின் மொத்த தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினரும் அவர்கள் இல்லை என்பதனையும் மக்கள் புரிந்து கொள்வரா ? தெரியவில்லை. ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ள நிபந்தனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய வகையில் நாட்டை ஆள பழகி விட்ட இவ்வரசாங்கம் ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை குறித்த காலத்தில் செய்யுமா என்பன தொடர்பில் ஐயமே நிலவுகிறது. இப்போதுள்ள பிரதான வினா தேர்தலைப் பற்றி எத் தரப்பு தனது தீர்மானம் தொடர்பில் மீள சிந்திக்கப் போகிறது என்பது தான். அது அரசாங்கமாக இருக்காது என்பது தான் அறிகுறிகளாக உள்ளன. அரசாங்கம் பிரதான பிரச்சினையாக தூக்கிப் பிடிக்கப் போவது தேசிய இறைமை தான். ஏனெனில்  அப்போது தான் மக்கள் வாக்களிக்க செல்லும் போது யாருடைய கையில் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கப் போகிறது என அவர்கள் ( வாக்காளர்கள் ) தம்மைத் தாமே கேட்டுக் கொள்வார்கள் என்ற  ஒரு விடயத்தையே அரசாங்கமும் தனது எதிர்காலத்திற்கு நப்பாசையுடன் நம்பியுள்ளது என்பது தான் இன்றைய யதார்த்தம்.

கலாநிதி
ஜெஹான் பெரேரா

No comments:

Post a Comment