இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Wednesday, November 5, 2014

துறவறம் போகும் மு.கா.!

தவி அரசியலைக் கைவிடப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான அம்பாறை, பொத்துவில் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய போதே அந்தக் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்ட முடிவை வெளியிட்டிருக்கின்றார். 

எமது கட்சியின் தயவை நாடியிருக்கிற எந்த தரப்பாக இருந்தாலும், எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த சரியான அறிவித்தலில்லாமல், கட்சியை மீண்டும் ஒரு முறை போடுகாயாகப் பாவிக்கலாம் என நினைத்தால் அது நடக்காது என்றும் அவர் பேசியிருக்கின்றார்.  
ஜனாதிபதித் தேர்தல் என்ற மாபெரும் அரசியல்- அதிகார சூதாட்ட களத்துக்கு நாடு தயாராகி வருகின்ற தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பதவி அரசியலைத் துறக்கும் அறிவிப்பு கவனத்தில் கொள்ளப்படக் கூடியது தான்.

ஆனால், அந்த அறிவிப்புக்குப் பின்னாலுள்ள உண்மைத் தன்மை தொடர்பில் அவ்வளவு நம்பிக்கை கொள்ள முடியாது. ஏனெனில், இப்படியான அறிவித்தல்களை இலங்கையின் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் கடந்த காலங்களில் வெளியிட்டு அதை இலகுவாக மீறியிருக்கின்றன.

ஆக, அதுவொரு தேர்தல் கால கருத்தாக மட்டுமே கொள்ளப்படக் கூடியதாக இருந்துவிடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்த அடையாளமும் தேசியமும் இருக்கின்றது என்பதை அரசியல் ரீதியாக நிறுவியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் ஆளுமைமிக்க தலைமைத்துவம் முஸ்லிம் காங்கிரஸை, இலங்கையை ஆளும் அரசாங்கங்களைத் தீர்மானித்து வந்த பெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.

ஆனால், அஷ்ரப்பின் மறைவுக்குப் பின் அந்த அரசியல் சக்தி பல திசைகளில் சிதறுண்டு செல்லரித்துக் கிடக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் என்கிற தாய்க் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களும், புதுக் கட்சிகளை ஆரம்பித்தவர்களும் கூட அரசியலரங்கில் அதிகார அரவணைப்போடு இருக்கின்றார்கள்.

பல நேரங்களில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பலத்தைக் காட்டிலும் அதிலிருந்து பிரிந்து சென்றவர்களின் அதிகார பலம் என்பது பெருவாரியாக இருக்கின்றது. அப்படித்தான் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இப்படியானதொரு நிலையில் தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸும் பங்காளியாக இருக்கின்றது. முஸ்லிம் மக்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்ற விடயங்களை முன்னிறுத்தியே முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்றன. அதைத் தான் அரசாங்கத்தோடு இணைந்தமைக்கான காரணமாக முஸ்லிம் காங்கிரஸும் முன்வைத்தது.

ஆனால், அதன் உண்மைத் தன்மை என்ன என்பது முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் நன்றாகவே தெரியும்.

இன்றைய திகதியில் முஸ்லிம் காங்கிரஸ் என்பது அரசாங்கத்தின் வேண்டா விருந்தாளி. அரசாங்கத்தின் சிங்களப் பெரும்பான்மை கூட்டணிக் கட்சிகளினாலும், அதன் தலைவராலும் பல தருணங்களிலும் அவமானப்படுத்தப்பட்ட காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

ஆனாலும், இன்னமும் அரசாங்கத்தோடு இணைந்திருக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிம் காங்கிரஸுக்கு இருப்பதாக அதன் தலைமை கருதுகின்றது. அது, கட்சியைக் காப்பாற்றும் கடப்பாடு.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்தால், கட்சியிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் கட்சியின் முடிவை எதிர்த்துக் கொண்டு அரசாங்கத்தோடு இணைந்திருப்பார்கள்.

ஏனெனில், நிறைவேற்று அதிகாரத்தையும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் கொண்டுள்ள அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளுக்குள் நுழைந்து எல்லா வகை அடிப்படை கட்டுமானங்களையும் கலைத்து வைத்திருக்கிறது.

அதனால், அதிகம் பாதிக்கப்பட்ட சிறுபான்மைக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தான். அதன் காட்சிகள் பஷீர் சேகுதாவுத்துக்கு ஜனாதிபதியினால் அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுப் பதவி (முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு முறைப்படி தெரிவிக்காமல்) வழங்கப்பட்ட போதும் வெளிப்பட்டது.  இதுதான், ரவூப் ஹக்கீமை அரசாங்கத்தை விட்டு வெளியேற விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் எவ்வளவு எதிர்பார்ப்போடு இருக்கின்றார்களோ, அதேயளவு எதிர்பார்ப்போடு முஸ்லிம் மக்களும் இருக்கின்றார்கள். ஏனெனில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெரும்பான்மை வாதத்தின் மனநிலை வளர்க்கப்பட்டே வந்திருக்கிறது.

நாட்டில் ஆயுத மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தமிழ் மக்களின் மீது நீண்டிருந்த பெரும்பான்மை வாதம், மோதல்களின் முடிவுக்குப் பின் முஸ்லிம்களை நோக்கி கூர்மைப்படுத்தப்பட்டு செலுத்தப்படுகின்றது.

அது, எல்லாமும் திட்டமிடப்பட்டே முன்னெடுக்கப்படுகின்றது. அதுவும், அதிகாரத்திலுள்ளவர்களினாலேயே திட்டமிடப்படுகின்றது என்பதுதான் இன்னமும் அச்சம் கொள்ள வைக்கின்றது.

இங்கு, முஸ்லிம் மக்களின் பாதுகாப்பும் தமிழ் மக்களைப் போன்றே கேள்விக்குள்ளாகியுள்ளது. சிறுபான்மை மக்களை ஒரே தாய் பிள்ளையைப் போலவே கொள்வதாக அறிவிக்கும் அரசாங்கம் அதனை தன்னுடைய அரசியல் கருத்துக்களாக மட்டுமே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. மற்றப்படி, அதனை என்றைக்கும் மனப்பூர்வமாக வெளியிட்டதில்லை. இதுதான் யதார்த்தம்.

சிங்கள பெரும்பான்மை வாதத்தை எப்படி எதிர்கொள்வது என்ற தெளிவும், தெரிவும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு என்றைக்குமே இருந்ததில்லை. அதற்கு முஸ்லிம் காங்கிரஸும் விதிவிலக்காது அல்ல.

இலங்கையை என்றைக்கும் சிங்களப் பெரும்பான்மை வாதமே ஆட்சி செய்யப் போகின்றது என்பது வெளிப்படை. அப்படியிருக்க, அந்த பெரும்பான்மை வாதத்திடம் இருந்து தம்மை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளது என்ற யுக்தியை கண்டுபிடிக்க வேண்டி பொறுப்பு சிறுபான்மைக் கட்சிகளுக்கு உண்டு.

தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான மனநிலை என்பது குறிப்பிட்டளவு தமிழ் மக்களின் மனங்களின் பிரதிபலிப்;பாகக் கொள்ளக் கூடியது. (ஆனால், கூட்டமைப்பின் சர்வதேச – இராஜதந்திர அரசியல் நிலைப்பாடுகளிலும், அதிலுள்ள குறைப்பாடுகள் மீதும் தமிழ் மக்களுக்கு பெரிய எரிச்சல் உண்டு) சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்தின் மீதான அதிருப்தி என்பது தமிழ் மக்களுக்கு இன்று நேற்று வந்தது அல்ல.

அது, அரைநூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு. அப்படியிருக்க அதை மாற்றுவதற்கான விடயங்கள் தொடர்பில் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் அக்கறை கொள்ள வேண்டும்.  ஆனால், அது சாத்தியமாவதில்லை.

இப்படியானதொரு நிலை என்றைக்கும் நீண்டு செல்ல சிறுபான்மைக் கட்சிகள் அனுமதிக்கக் கூடாது. ஏதாவது ஒரு வடிவில் சிங்களப் பெரும்பான்மை வாதத்தை கையாள்வதற்கான விடயங்கள் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும்.

அது, தொடர்பில் சிந்திக்காமல் தேர்தல்களை மாத்திரம் கருத்தில் கொண்டால் தொடர்ந்தும் அரசியல் அனாதைகள் ஆகும் சூழல் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும்.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அஷாத் ஸாலியின் கட்சி தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டன. அதை, மனதளவில் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாடு தொடர்பில் இரட்டை மனநிலையோடு காத்திருக்கிறது.

அரசாங்கத்துக்கு எதிரான முஸ்லிம் மக்களின் அதிருப்தியை எப்படியாவது பிரதிபலிக்க வேண்டும் என்பது ஒன்று. மற்றையது, சிங்கள மக்களின் மனங்களை வென்ற வெற்றி வேட்பாளர் யார் என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவிப்பது. இந்த இரண்டு விடயங்களும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் விடயங்கள்.

ஒப்பீட்டளவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வேட்பாளர் என்று கருதப்படுகின்ற ரணில் விக்ரமசிங்க மீது சிங்கள பெரும்பான்மை வாதத்துக்கும்- மக்களுக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை.

அதனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம். அப்படியிருக்க வெற்றியின் பக்கத்தில் இல்லாமல் தோல்வியின் பக்கத்தில் இருப்பதால் என்ன பயன்? என்ற யோசனை முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கின்றது.

அப்படியானால், முஸ்லிம் மக்களின் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை எவ்வாறு பிரதிபலிப்பது என்ற சிக்கலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.

இந்த விடயம் தான் பதவி அரசியலைத் துறப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட வைத்திருக்கின்றது. அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய வகிபாகம் என்பது ரொம்பவும் பெரிதாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

உண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெருமளவான வகிபாகத்தை கொண்டிருக்கப் போகின்றன.
ஆனால், அதை எவ்வாறு கையாண்டு அதிகாரத்தின் அளவைத் தக்க வைப்பது என்பதைத் தான் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கைக்கொள்ள வேண்டும்.

அந்த அதிகாரம் என்பது தாம் சார்ந்த மக்களின் பாதுகாப்பை அதிகமாக உறுதிப்படுத்துவதற்கு உதவ வேண்டும். அதைவிடுத்து, ஊடகங்களுக்கு முன்னால் அழுது வடித்துவிட்டு, பின்பக்கமாக அரசாங்கத்தோடு ஒட்டுறவாடுவது அல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் சிலவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தால், அதனை வைத்துக் கொண்டு இன்னும் இன்னும் பெரும்பான்மைவாத அரசியல் முன்னெடுக்கப்படும்.

அப்போது, பொது பல சேனா போன்ற அடிப்படைவாத அமைப்புக்கள் தேர்தல் பிரச்சார காலத்தில் பெரும் சக்தியாக உருவாகி சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக  இன்னும் இன்னும் திசை திருப்ப வைக்கும். அது, மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை பெருவாரியாக உறுதிப்படுத்தும் சூழலை உருவாக்கும்.

ஆனால், உண்மையிலேயே பதவி அரசியலைத் துறக்கும் அரசியலில் உறுதியாக இருந்து, கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அக்கறையை முஸ்லிம் காங்கிரஸ் கொள்ளுமானால் அது, பெரும் மாற்றத்தினைக் கொண்டுவரும்.
ஆனால், அதற்கான உறுதி என்பது முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் ஏற்பட வேண்டும். ஏனெனில், மக்கள் அந்த உறுதியோடு இருக்கின்றார்கள்.

அதைவிடுத்து, தேர்தல் கால அறிவிப்பாக மட்டும் பதவி அரசியல் துறக்கும் அறிவிப்பினை வெளியிட்டு மக்களை ஏமாற்றிவிட்டு பின்னர் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொள்ளலாம் என்று நினைப்பது, பேரியக்கமாக அஷ்ரப்பினால் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெருவிருட்சம் தொடர்ந்தும் கிளைகளையும், விழுதுகளையும் இழந்து காய்ந்த மரமாக மாறுவதற்கான சூழலை ஏற்படுத்தி விடும்.
அப்படியான சூழல் இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பாதகமானது.

ஏனெனில், சிங்களப் பெரும்பான்மை வாதம் கோலொச்சும் நாட்டில், சிறுபான்மை சக்திகள் தங்களுக்கான அதிகார பலத்தினை குறிப்பிட்டளவில் தக்க வைப்பதே கொஞ்சப் பாதுகாப்பையாவது உறுதிப்படுத்தும். அதை, முஸ்லிம் காங்கிரஸும் உணர்ந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும்!
-புருஜோத்தமன் தங்கமயில்

No comments:

Post a Comment