ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த நாட்களில் பரவலாக முன்வைக்கப்பட்டன. இன்னமும் அந்தக் கோரிக்கைக் கோசங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, தமிழ் சமூக- இணைய ஊடகப் பரப்பில், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் குறிப்பிட்டளவில் இடம்பெற்றுவருகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்புக் கோசம் தமிழ் மக்களிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிவிப்பு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அந்தக் கட்சி கடந்த வாரம் வெளிப்படையாகவே ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையை தமிழ் மக்களை நோக்கி முன்வைத்தது.
சுதந்திர(!) இலங்கையின் 66 ஆண்டுகால வரலாற்றில், தமிழ் பேசும்(தமிழ், முஸ்லிம்) சிறுபான்மை மக்கள் சிங்கள பௌத்த தேசியவாதத் தலைவர்களினாலும் அரசாங்கங்களினாலும் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற வரலாற்றுப் பக்கங்கள் புரட்டப்படுகின்றன. தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்டங்களும் ஆயுத வழிப் போராட்டங்களும் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்களால் எவ்வாறெல்லாம் அடக்கப்பட்டன என்பதற்கு எம்மிடையே படுகோரமான வலிகளோடு உதாரணங்கள் உண்டு. அதனை மறுப்பதற்கில்லை.
ஆனால், இப்போது எம் முன்னாலுள்ள வழி என்ன?, என்ற அடிப்படைக் கேள்வி மிகவும் அவசியமானது. அது, எம்மை தக்க வைப்பதோடு, எதிர்கால சந்ததிக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது என்ற கோட்பாட்டியலின் பிரகாரம் தோற்றம் பெறுவது. இந்தக் கோட்பாடு தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்த தருணம் முதல் இருப்பது. ஆக, எம் முன்னாலுள்ள வழி பற்றிய தெளிவான சிந்தனையோடு அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ சிங்கள பௌத்த தேசியவாத அடிப்படைகளிலிருந்து விலகி வந்து இனநல்லிணக்கம், இணக்கமான தீர்வு என்ற விடயங்களில் கவனம் செலுத்தப் போகிறவர்கள் இல்லை. சிலவேளை, அவர்கள் அதற்கு முயன்றாலும் சிங்கள பௌத்த அடிப்படைவாதம் அதை அனுமதிக்காது. இந்தப் புரிதல் தமிழ் பேசும் (தமிழ், முஸ்லிம்) சிறுபான்மை மக்களிடம் உண்டு. இவற்றை எதிர்கொண்டு இலக்குகள் நோக்கிச் செல்வதே சிறுபான்மை மக்களின் அவசியமான அரசியல்.
தமிழ் மக்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது வெளிப்படையாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலகுவாக வெற்றிபெற வைக்கும் விடயம். ஏனெனில், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், மஹிந்த ராஜக்ஷவுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். இது, வெளிப்படையானது. அவ்வாறான நிலையில், தேர்தல் புறக்கணிப்பு என்பது படு மோசமான எதிரியைத் தக்க வைக்கும். அது, எம்மை இன்னும் இன்னும் சிக்கலுக்குள் சிக்க வைக்கலாம். ஏனெனில், தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்கள் புதிய வடிவம் எடுக்க வேண்டிய தருணம் இது.
முள்ளிவாய்க்காலுக்குள் எமது ஆயுதப் போராட்டத்தை உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை அரசு தோற்கடித்த பின் அதிலிருந்து மீண்டு எமது போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டிய அவசியமும், அவசரமும் உரிமைக்காக போராடுபவர்களிடம் இருக்கின்றது. அதற்கான தருணமோ- சரியான ஜனநாயக இடைவெளியோ எமக்கு வழங்கப்படவில்லை.
அப்படியிருக்க அப்படியான குறுகிய கால சூழலொன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு வருகின்ற போது அதனைக் கையாள்வது சாணாக்கியமான போராட்ட வடிவங்களில் ஒன்றுதான். அதுதான், இந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முழு எழுச்சியோடு எதிர்கொள்ள வேண்டும். அது, எப்படியென்றால் வட மாகாண சபைத் தேர்தலை வெற்றி கொண்டது போன்றதாக இருக்க வேண்டும்.
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 'நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களைக் கையளிப்பேன்' என்ற கோசத்தோடு தேர்தலில் குதித்திருக்கின்றார். இந்தக் கோசம் 'ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தோடு வாழுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்புதலின் பிரகாரம் முக்கியத்துவம் பெறுகின்றது.
யதார்த்த நிலைமைகளை உணர்ந்து தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் கைவிட்ட நிலையில், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சர்வாதிகாரத்துக்கு இணையான நிறைவேற்று அதிகாரத்தை தோற்கடிப்பதற்கான அர்ப்பணிப்பை வழங்குவதும் அவசியம். நிறைவேற்று அதிகாரத்தால் இன்றைக்கு சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைவிட தமிழ் மக்கள் பெற்ற வலிகளும் வடுக்களும் அதிகமானவை. அவ்வாறான நிலையில் அதனைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்புக்களைக் கையாள்வது புத்திசாலித்தனமானது.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திடம் அதிகாரங்கள் கையளிக்கப்படும் பட்சத்தில், தவிர்க்க முடியாமல் சிங்கள பௌத்த தேசியவாதக் கட்சிகள் சிறுபான்மைக் கட்சிகளிடம் ஆட்சியமைப்பதற்காக தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஏனெனில், போர் வெற்றிக் கோசம் போன்றதொரு நிகழ்வு பெற்றுக்கொடுக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மைச் சூழலுள்ள அரசாங்கங்கள், எதிர்காலத்தில் அமைவது அவ்வளவுக்கு சாத்தியமற்றது. அப்படியான சூழ்நிலையில், சிறுபான்மைக் கட்சிகள் ஓரளவுக்கு தம்முடைய ஆளுமையைத் தக்க வைப்பதற்கான சூழல் ஏற்படும்.
அது, தவிர்க்க முடியாமல், வடக்கு- கிழக்கிலும் குறிப்பிட்டளவு ஜனநாயக இடைவெளியை உருவாக்கும். அந்த ஜனநாயக இடைவெளி, மூச்சுமுட்டி மரணிக்கும் நிலையில் இருக்கும் தமிழ் சிறுபான்மைச் சமூகத்தை காப்பாற்றி அடுத்த கட்டம் நோக்கி கொண்டு செல்வதற்கு மிகவும் முக்கியமானது.
அதை மறுத்து, படுமோசமான எதிரியைத் தக்க வைப்பதே எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை என்ற வாதத்தின் போக்கில் செல்வது எம்மை மீண்டும் மீண்டும் பேரழிவுக்குள் தள்ளிவிடும். ஏனெனில், கடந்த 10 வருடங்களில் அதற்கான விலையை நாம் அதிகளவில் கொடுத்திருக்கின்றோம்.
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த தீர்மானம் அவர்களையும் அவர்களை முழுமையாக நம்பிய வடக்கு- கிழக்கு தமிழ் மக்களையும் படுகுழிக்குள் தள்ளியது. இந்தக் சுட்டிக்காட்டல் விடுதலைப் புலிகளின் தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பை புறந்தள்ளுவது அல்ல. மாறாக, பெற்றுக் கொண்ட அனுபவங்களைப் புரட்டுவதன் பிரகாரம் வருவது.
இதில் இன்னொரு விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் படுமோசமான எதிரியைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியது ஆயுதப் போராட்ட முறையில் இராணுவ பொறிமுறைகளின் போக்கில் அணுகப்பட்டிருக்கலாம்.
அதாவது, அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் நீண்ட காலத்துக்கு இழுத்தடிப்புக்கள் செய்யப்படலாம் என்பதும், அது, இராணுவ ரீதியிலான போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவாக அமையும் என்பதுவும். அதன்பிரகாரம், விரைவாக மோதல்களை தோற்றுவிக்கும் அரசாங்கமொன்று தென்னிலங்கையில் அமைவதை விடுதலைப் புலிகள் விரும்பியிருக்கலாம்.
அதன்போக்கிலேயே, அந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் விடுத்ததாக சு.ப.தமிழ்ச்செல்வனை மேற்கொள்காட்டி தமிழ் ஊடகச் சூழல் அப்போது பேசியது.
ஆனால், அந்த முடிவு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழ் மக்களின் ஆதாரமாக இருந்த விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் உரிமைப் போராட்டக் களத்திலிருந்து நீக்கிவிட்டது. அத்தோடு, இலட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கிவிட்டது.
அதுதான், இன்னமும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இறுமாப்பின் அடுத்த கட்டத்துக்கும் வழி வகுத்தது.
2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருந்தால், சிலவேளை தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.
சர்வதேச நிகழ்ச்சி நிரலின் போக்கில் விடுதலைப் புலிகள் அழிக்க வேண்டும் என்ற விடயம் அப்போது கையாளப்பட்டிருந்தாலும் இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுவதிலிருந்து குறிப்பிட்டளவு தவிர்த்திருக்கும் என்று கருத முடியும். ஆக, அப்போது எங்களின் முன்னால் மஹிந்த ராஜபக்ஷ என்கிற 'படுமோசமான எதிரி'யும், ரணில் விக்ரமசிங்க என்கிற 'மோசமான எதிரி'யும் முன்னிறுத்தப்பட்டார்கள். நாங்கள் மோசமான எதிரியைப் புறக்கணித்து படுமோசமான எதிரியைத் தேர்வு செய்தோம்.
இப்போதும், நிறைவேற்று அதிகாரத்தோடு மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன் என்ற போர்வையில் மோசமான எதிரியாக மைத்திரிபால சிறிசேனவும் எம்முன்னால் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். (இது, ஒப்பீட்டளவான வாதம் மட்டுமே.) இவ்வாறான நிலையில், எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் மக்கள் படுமோசமான எதிரியை மீண்டும் தெரிவு செய்வதைக் காட்டிலும் மோசமான எதிரியை தெரிவு செய்வது புத்திசாலித்தனமானது. ஏனெனில், இப்போது தமிழ் மக்களிடம் இராணுவ ரீதியிலான ஆயுதப் போராட்ட அமைப்பொன்று இல்லை. ஜனநாயக வழியிலேயே எப்படியும் போராட வேண்டியிருக்கும்.
மாறாக, மஹிந்த ராஜபக்ஷவை தக்க வைத்தல் சர்வதேச ரீதியில் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் அழுத்தங்களைக் கொடுப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பது கருதுவது எவ்வளவு வெற்றிகரமான வாதம் என்று தெரியவில்லை. ஏனெனில், விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்க வேண்டும் என்பது சர்வதேச நாடுகளின் பொறிமுறைகளின் பிரகாரமே இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் இந்தியாவும் அதற்கு எவ்வளவு ஒத்துழைப்பை வழங்கின என்பதை நாம் அறிவோம். அவ்வாறான நிலையில், எமக்கான தீர்வை மேற்கு நாடுகளிடமும் ஐக்கிய நாடுகளிடம் வேண்டி நிற்பது அவ்வளவு புத்திசாலித்தனமானது அல்ல.
தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்து விலகி சீனாவின் மேலாதிக்கத்துக்குள் சென்ற இலங்கையை கையாள்வதற்காகவே, இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற விடயத்தை மேற்கு நாடுகள் கையிலெடுத்தன.
அப்படியான சூழ்நிலையில், தன்னுடைய கையாள்கைக்குள் இலங்கை வந்தால் அந்த விடயத்தை அப்படியே கிடக்கில் போட்டுவிடும் என்பதும் உண்மை. பொது எதிரணி வெற்றி பெற்றாலும் அது அப்படியே கிடப்பில் போடப்படலாம். ஆனால், மஹிந்தவை கையாள்வதற்காக போர்க்குற்றங்கள் விடயத்தைக் கையாள்வது என்பது எம்மை தொடர்ந்தும் மற்றவர்கள் பகடையாக கையாளும் விடயம்.
இறுதி மோதல்களின் நிகழ்த்தப்பட்ட மனித விரோதக் குற்றங்களுக்கு எதிராக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுவும் மறுக்க முடியாதது. அது, மிகவும் அவசியமானது. ஆனால், அதனை தன்னுடைய தேவைகளுக்கான மேற்கு நாடுகள் கையாள்வது என்பது படுமோசமானது. அது, எங்களை இன்னமும் மோசமான நிலைக்குள் தள்ளிவிடும். மாறாக, அது எமக்கான உரிமையையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்கும் என்பது மிகவும் சிரிப்புக்குரிய வாதம்.
எங்களுடைய அரசியல் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்;காகவும் நாமே போராட வேண்டியிருக்கின்றது. அதற்காக யாரையும் நாம் நம்பியிருக்க முடியாது. பெரும் அழிவுகளுக்குள் இருக்கும் எம்மை அதிலிருந்து மீட்டு அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச் செல்வதற்கும், சரியான போராட்ட வடிவத்தையும் ஜனநாயக ரீதியிலான அரசியல் எழுச்சியையும் தமிழ் மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கும் ஜனநாயக இடைவெளியொன்று அவசியமானது.
அதற்கான வாய்ப்பு இப்போது குறிப்பிட்டளவில் அமைந்திருக்கின்றது என்று கருத முடியும். அப்படியான சூழலை முஸ்லிம் மக்களில் 80 சதவீதமானவர்கள் கையாள்வார்கள். ஆனால், தமிழ் மக்கள் எழுச்சியோடு வாக்களிப்பதினூடு அதனை சாத்தியமாக்கலாம். மாறாக, படுமோசமான எதிரியைத் தக்க வைப்பதற்கான 'தேர்தல் புறக்கணிப்புக் கோசம்', படு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம்!
புருசோத்தமன் தங்கமயில்
No comments:
Post a Comment