ஹாஷ்டேக் என்பது எத்தனை அருமையான ஆயுதம் என்பதும், அமைதிக்காக குரல் கொடுக்கவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும் அது எத்தனை அழகாக பயன்படும் என்பது, இந்த வாரம் இரண்டாவது முறையாக நிருபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளிக்குழந்தைகள் மீது நடந்த கோர தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் #இந்தியாவித்பாகிஸ்தான் ஹாஷ்டேக் (#IndiawithPakistan ) டிவிட்டரில் தொடர்ந்து முன்னிலை வகித்து மனிதநேயத்தை உரத்த குரலில் வலியுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகர முற்றுகையின் போது டிவிட்டர் பயனாளிகள் சார்பில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக வெளியான #ஐவில்ரைடுவித்யூ ஹாஷ்டேக்கை போலவே இந்த ஹாஷ்டேக் அமைந்திருப்பது மட்டும் அல்ல, ஆஸ்திரேலிய ஹாஷ்டேக்தான் இதற்கும் உந்துதலாக இருந்திருக்கிறது.
கடந்த 15 ம் தேதி சிட்னி நகரில் கஃபே ஒன்றில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதி முற்றுகையிட்டு பினைக்கைதிகளை பிடித்து வைத்து மிரட்டிய நேரத்தில் , இந்த சம்பவம் காரணமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு தலைதூக்கி விடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான டிவிட்டர் பயனாளிகள், உங்களுடன் பாதுகாப்பிற்காக வரத்தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கும் வகையில் 'ஐவில்ரைடுவித்யூ' எனும் ஹாஷ்டேகை பிரபலமாக்கினர். உலக அளவிலும் முன்னிலை பெற்ற இந்த ஹாஷ்டேக், தீவிரவாத தாக்குதலின் பாதிப்புக்கு நடுவே மனிதநேயத்தை வலியுறுத்தியதுவதாக அமைந்தது.
இதே போலவே பாகிஸ்தானின் பெஷாவரில், தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தி 132 பள்ளிக்குழந்தைகளை பலி வாங்கிய சம்பவம் அனைவர் நெஞ்சையும் உலுக்கிய நிலையில், இந்தியர்கள் பலர் டிவிட்டரில் , இந்தியாவித்பாகிஸ்தான் எனும் ஹாஷ்டேக் மூலம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தங்கள் உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஹாஷ்டேக் டிவிட்டரில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
தீவிரவாதத்தின் பாதிப்பை நேரடியாக உணர்ந்தவர்கள், பெஷாவர் தாக்குதலால் திகைத்து போயிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அமைதியை வலியுறுத்தும் வகையிலும் குறும்பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment