
பாதிக்கப்பட்டிருந்தனர். இலங்கையின் 13 மாவட்டங்களில் ஊழித்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலையின் அகோரப்பசிக்கு அன்று நாடு முழுவதும் 38,195 உயிர்களை பலிகொண்டிருந்தது. 5,637 பேர் காணாமல்போயிருந்தனர். 15,686 பேர் காயமடைந்திருந்தனர். கடல்கோளின் சீற்றம் காரணமாக 523,000 பேர் இடம்பெயர்ந்தனர். இவர்கள் 320 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவை தவிர 78,387 வீடுகள் முழுமையாகவும், 60197 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக விரைந்து வந்த மனிதாபிமானிகளின் சேவைகள் அன்று பாராட்டத்தக்கதாக இருந்தன. இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது போல் பாசாங்கு செய்து அந்த அவலத்திலும் மக்களின் சொத்துக்களை திருடிக் குளிர்காய்ந்த கயவர்களையும் நம்மால் மறக்க முடியாது. அன்று ஆழிப்பேரலை அடித்தபோது தேசமே அழிவதாகத்தான் பலர் நினைத்தார்கள். இதனால் கருத்து வேறுபட்டு நின்ற உறவுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கட்டியழுதார்கள். நிலையில்லா இவ்வாழ்க்கையைப் பற்றிச் சந்திக்குச் சந்தி நின்று புராணம் படித்தவர்கள் இருந்தும் என்ன பயன்? நான்காம் நாள் வந்த நிவாரணத்தைப் பகிர்ந்து கொள்வதில் தமக்குள் அடிபட்டுப் பிரிந்து நின்றார்கள். இதுவெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாக இருந்தது. இன்று சுனாமிக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த அன்பு, கருணை, ஈகைக் குணம் போன்ற வாழ்க்கை முறையை எவரிடத்திலும் காணவில்லை. பொது நலத்தைவிட சுயநலமே கூடிவிட்டது. தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும். மற்றவர் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன? என்ற நிலையே காணப்படுகின்றது. அந்தளவிற்கு மனித மனங்கள் மாறிவிட்டன. இதனைப் பார்த்தால் மீண்டும் ஒரு சுனாமி வரக்கூடாதா என நினைக்கத் தோன்றுகின்றது. இறைவன் இப்பூமிக்கு நேரடியாக வருவதில்லை. மனிதர்கள் தவறு செய்யும்போது அவ்வப்போது இவ்வாறான இயற்கை வடிவங்களிலும் மக்களுக்குப் பாடம் கற்பிப்பதற்கு அழிவுகளைக் காட்டி வருகின்றார். ஆனால் மனிதர்கள் மனிதர்களாக இல்லாமல் மிருகங்களைவிடக் கேவலமாகவல்லவா நடந்து கொள்கின்றார்கள்? தர்மத்தைக் காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் அவ்வப்போது தான் அவதரிப்பதாக பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார். இன்று இப்பூமியில் நடக்கும் அநீதிகளைப் பார்க்கின்றபோது மீண்டும் கடவுள் சாபத்திற்கு மக்கள் ஆளாக நேரிடுமோவென அச்சமாகவுள்ளது. அன்று சுனாமி பாதிப்பிற்குள்ளான மக்களைவிட சுனாமி தண்ணீர் காலில் படாதவர்கள் தான் அதைக் காரணம் காட்டி பல்வேறு வசதி வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது வெள்ளிடை மலையாகும். இன்றுடன் சுனாமி ஏற்பட்டு பத்து வருடங்கள் (ஒரு தசாப்தம்) கடந்து விட்டபோதும் இன்னும் அந்தப் பாதிப்பில் இருந்து மீள முடியாதவர்களாகவே நேரிடையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றனர். பத்து வருடங்களாக இருப்பதற்குக்கூட வீடு இல்லாது இன்னும் உறவினர் வீடுகளிலும், இரவல் வீடுகளிலும் குடித்தனம் நடத்தி வருகின்றனர். இந்நிலை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக அம்பாறை நுரைச்சோலை எனும் இடத்தில் சவூதி அரசாங்கத்தின் நிதியுதவியால் கட்டப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் இன்னும் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு கையளிக்கப்படாதுள்ளது. இவ்வீட்டுத்திட்டத்திலும் இனவாதம் புகுந்து விளையாடுகின்றது. இவைதவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கெனக் கட்டப்பட்ட வீட்டுத் திட்டங்களில் பாதிக்கப்படாதவர்களும் உரிமை கோருவதும், அரசியல்வாதிகளின் தலையீடும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கெனக் கட்டப்பட்ட வீட்டுத்திட்டங்கள் பல அரையும் குறையுமாகக் கட்டப்பட்ட நிலையில் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன. அதன் விளைவுகளை இம்மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் சிறந்த உதாரணமாகும். கட்டி முடிக்கப்படாத வீடுகள், வீதி அபிவிருத்திகளின்மை, வாழ்வாதார வசதிகளின்மை என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலே இவர்கள் வாழ்கின்றனர். இதேபோன்று கல்முனை குருந்தையடி, பெரிய நீலாவணை சுனாமி வீடமைப்புத் திட்டங்களில் தொடரும் சுகாதாரப் பிரச்சினைகள் சொல்லி மாளாதவையாகும். உறவுகளை இழந்து உடமைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து இன்று தொடர் மாடி வீட்டுத் திட்டங்களில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் கரையோரப் பிரதேசத்து மக்களின் வாழ்வில் அடுத்த வருடமாவது( 2015) இருளகன்று ஒளி பிறக்குமா? ஆழிப்பேரலை ஆர்ப்பரித்து ஊழித்தாண்டம் ஆடி ஆண்டுகள் பத்து கடந்து விட்டன. ஆனால் மக்கள் மனங்களில் நீங்காத நினைவுகளை பசுமரத்து ஆணிபோல் அது ஏற்படுத்திவிட்டது. இதனை நினைவுகூரும் வகையில் நாட்டின் பலபகுதிகளிலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. ஆழிப்பேரலை அள்ளிச்சென்ற உறவுகளுக்காய் நாமும் பிரார்த்திப்போம். மீண்டும் ஒரு அழிவு எம்மை நெருங்காதிருக்க இறைவனை இறைஞ்சுவோம்.
செ.துஷ்யந்தன்
No comments:
Post a Comment