
ஆரம்பத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியான பின்னர் யோசிக்கலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவந்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியான
பின்னர், இரு தரப்பினரின் தேர்தல் அறிக்கைகளும் வெளியாகட்டும். அதன் பின்னர் முடிவை அறிவிப்போம் என்று கூறியுள்ளது கூட்டமைப்பு.
இப்போது வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு, பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவரது தேர்தல் அறிக்கையில், தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற எதுவுமே இடம்பெறப்போவதில்லை என்பது ஏலவே உறுதியாகியுள்ளது.
தமது தேர்தல் அறிக்கையில், 100 நாள் செயற்றிட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நடத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தெரிவாகும் புதிய அரசாங்கமே, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கவனம் செலுத்துமென்றும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதேவேளை, அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கை சாதகமாக இருந்தால் கூட, அவருக்கு ஆதரவளிக்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கமுடியாது. ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை அரசாங்கம் வேண்டாமென்று நிராகரித்துவிட்டது. அதனுடன் பேச்சு நடத்தக்கூட முயற்சிக்கவில்லை.
அப்படியான நிலையில், ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை சாதகமான விடயங்களை கொண்டிருந்தாலும் கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கமுடியாது. அத்தகையதொரு முடிவை அவர்கள் எடுப்பார்களேயானால், சூடு சொரணைகளை கூட்டமைப்பு முதலில் தியாகம் செய்யவேண்டிவரும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கை பற்றி அலட்டிக்கொள்ளாத நிலையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இருக்கப்போவதில்லையென்று தெரிந்துகொண்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருவரதும் தேர்தல் அறிக்கைகளுக்கு காத்திருப்பதாக கூறிவருகிறது.
இன்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை வெளியானாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக முடிவு எடுக்குமென்று கூறுவதற்கில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில், இந்த தேர்தலில் ஒட்டியும் கொள்ளமுடியாமல், ஒதுங்கியும் நிற்கமுடியாதொரு திரிசங்கு நிலையில் இருக்கிறதென்றே கூறவேண்டும்.
வெளிப்படையாக தமது நிலையை அறிவிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்கினாலும், இந்தத் தேர்தலில் என்ன செய்யப்போகிறது. தமிழ் மக்களை எப்படி வாக்களிக்குமாறு கோரப்போகிறதென்பது தொடர்பில் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டதென்றே தெரிகிறது. அந்த முடிவு, கட்டாயம் வாக்களிக்க வேண்டுமென்று தமிழ் மக்களை வலியுறுத்துவதாக இருக்குமென்றும் ஆனால், யாருக்கு வாக்களிப்பது என்பதை சிந்தித்து முடிவு எடுக்கவேண்டுமெனக் கோருவதாகவும் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் என்னவென்றால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள ஒரே தெரிவாக எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது மட்டுமே உள்ளது. ஆனால், அவர் மூலமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைக்குமென்று சிறு உத்தரவாதத்தைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கமுடியாதுள்ளது.
தான் ஓர் இடைக்கால ஜனாதிபதியாக இருப்பேன் என்ற நிலைப்பாட்டின் ஊடாக, பல முக்கியமான சிக்கல்களுக்குள் அகப்படாமல் தப்பிக்கொள்ளப் பார்க்கிறார் பொதுவேட்பாளர்; மைத்திரிபால சிறிசேன.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூட, கூட்டணி தர்மத்துக்காக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமிழ் மக்கள் தீர்வை எதிர்பார்க்கமுடியாதென்று கூறியிருக்கிறார். அவ்வாறாயின், ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு தொடர்பில் பேசப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதற்கு யார் பொறுப்பாளிகளாக இருப்பர் என்ற கேள்விகள் இருக்கின்றன.
எந்தவொரு வாக்குறுதியும் இல்லாமல், ஜனாதிபதியை மாற்றுவதற்காக மட்டும் வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களை கோரமுடியாத நிர்ப்பந்த நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற கௌரவத்தை பெற்றுள்ள, பொறுப்பு வாய்ந்ததொரு கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதனை மீறி ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியாது.
குறைந்தபட்சமாக ஒரு வாக்குறுதியாவது தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டால், அதைக் காரணமாக வைத்து பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறு கோரமுடியும். எனினும், அதற்கான சூழல் இல்லாதபோது, எதிரணியின் பொதுவேட்பாளரை ஆதரிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரும் தார்மிக உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லாது போய்விடுகிறது. அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசிய அரசியலின் மீது ஆர்வமோ, அதனை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க விருப்பமோ இல்லையென்று கருதமுடியாது.
நிச்சயமாக, இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக ஆர்வம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் வாய்ப்பொன்று கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அரசாங்கத்தின் பிரசார உத்தியும் சிங்கள பௌத்த அடிப்படைவாதச் சக்திகள் மத்தியில் ஏற்பட்ட பிளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அத்தகைய பேரம் பேசும் சூழலிலிருந்து புறமொதுக்கிவிட்டன.
உதாரணத்துக்கு, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா பொதுவேட்பாளராக போட்டியிட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த குறைந்தபட்ச பேரம் பேசும் வாய்ப்புக்கூட இம்முறை அவர்களுக்கு கிடைக்கவில்லை. எதிரணியின் பக்கம் ஜாதிக ஹெல உறுமய இணைந்துகொண்டதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதனுடன் ஒட்டிக்கொள்ள முடியாதென்று அரச தரப்புக்கு விளங்கியுள்ளது.
கடந்த பத்தாண்டுளாக, ஜாதிக ஹெல உறுமயவுடன் கூட்டணிக் குடும்பம் நடத்திய, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இந்த அடிப்படை அரசியல் கூட புரியாமல் போயிருக்காது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு வேண்டாமென்று ஆளும் கட்சி கூறிவிட்டது. இதனால், எதிரணியுடன் மட்டுமே பேரம் பேசும் வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எஞ்சியிருந்தது. அதற்குள் எதிரணியுடன் சேர்ந்துகொண்ட ஜாதிக ஹெல உறுமய, வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணையுமாறு அழைப்பு விடுத்தாலும், உள்ளூர அதனைத் தள்ளிவைப்பதில் இன்றுவரை வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணியுடன் இணைந்துகொண்டால், சிங்கள தேசியவாத சக்திகளின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமென்று யோசிக்கிறது எதிரணி. இதனாலேயே, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையில், தமிழர் பிரச்சினை தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படாமல், ஒதுங்கிநிற்க முடிவு செய்யப்பட்டது.
இல்லாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குறைந்தபட்ச பேரம் பேசும் வாய்ப்பும் கிடைத்திருக்கும். ஏதேனும் குறைந்தளவிலான அதிகாரங்கள் தொடர்பான உத்தரவாதத்தையேனும் பெற்றுக்கொள்ளும் சூழலும் உருவாகியிருக்கும். ஆனால், இப்போது நிலைமை மாற்றமடைந்துள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள், எதிலும் ஈடுபடும் தேவையும் இல்லாமலே போயுள்ளது. இதனை கிட்டத்தட்ட ஒரு புறமொதுக்கப்பட்ட நிலையென்று கூறலாம்.
சுமார் நான்கு இலட்சம் வாக்குகளை தீர்மானிக்கும் சக்தி பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தபோதிலும், இந்தத் தேர்தலில் ஓரம் கட்டப்பட்ட நிலையிலிருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இது இனவாதம் இன்னமும் கோலோச்சுகிறது. தமிழ் மக்களுக்கு இன்னமும் சமமான உரிமைகள் கிட்டவில்லை என்பதற்கு சரியானதொரு உதாரணமாகவும் வாய்த்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வேடனுக்கும் நாகத்துக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாகவும் பேயா - பிசாசா என்று தீர்மானிக்கவேண்டிய நிலையில் இருப்பதாகவும் உவமானங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அதாவது, இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நல்லவர் என்று சுட்டிக்காட்டத்தக்க நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்பதையே இது வெளிப்படுத்தி நிற்கிறது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், 'கொடூரமான பேய்க்கு பதிலாக, நல்ல பிசாசு வந்தால் பரவாயில்லை' என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனோ, 'இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒன்றாக அமையப்போவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, எந்த வேட்பாளர் குறித்தும் நம்பிக்கையூட்டுவதற்கு கூட்டமைப்பு தயாராக இல்லை. ஏனென்றால், அது பின்னொரு காலத்தில் கூட்டமைப்பின் கழுத்தின் மீது சுருக்காக வந்து விழும் ஆபத்துள்ளது. எனவே, எவரையும் ஆதரிக்காமல், நடுநிலை என்ற பாத்திரத்தை வகிப்பதனூடாக தமது அரசியல் நகர்வை மேற்கொள்ள முனைகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தமிழ் மக்கள் எப்போதுமே இத்தகைய சூழ்நிலைகளில் குறிப்பறிந்து நடந்துகொள்வதில் வல்லவர்கள். விடுதலைப் புலிகளின் காலத்திலேயே இதுபோன்ற நழுவல் போக்கு கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக ஈரோஸ் களமிறங்கியபோது, விடுதலைப் புலிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேவேளை, அவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. என்றாலும், அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகள், ஈரோஸ் அமைப்பை மறைமுகமாக ஆதரித்தனர். அதனை தமிழ் மக்கள் குறிப்புணர்ந்து வாக்களித்திருந்தனர். அதுபோன்ற நிலை, பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலும் நீடித்தது.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றப்போவதும் அதே பாணியைத்தான். தேர்தலில் ஒதுங்கி நிற்பது போல நிற்கப்போகிறது. ஆனால், ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கும். புலிகள் வாக்களிக்குமாறோ, புறக்கணிக்குமாறோ கோரவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை கட்டாயம் வாக்களிக்குமாறு கோரப்போகிறது.
தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட, கட்டாயம் வாக்களியுங்கள் என்பதையே பிரதானமாக வலியுறுத்தப்போகிறது. இதன் மூலம், ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வெளிக்காட்டலாமென்று கருதுகிறது கூட்டமைப்பு.
இந்தத் தேர்தலிலிருந்து ஒதுங்கி நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டிக்கொண்டாலும், இந்தத் தேர்தல் தொடர்பாக எந்த எதிர்பார்ப்பும் அதற்கு இல்லையென்று கூறமுடியாது. ஆட்சி மாற்றம் நிகழ்வதை கூட்டமைப்பு விரும்புகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் பரவாயில்லை என்றும் கருதுகிறது. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் எப்படி நடந்துகொள்வாரோ என்ற அச்சமுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் யாரை எப்படி மாற்றுமென்று கூறமுடியாது. அந்த அச்சமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தூர விலக்கியும் வைத்திருக்கிறது.
அதேவேளை, தமிழ் மக்களை பொறுத்தவரையில், ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலேயே வெளிப்பட்டிருந்தது. எனவே, அவர்கள் மாற்றான தெரிவாகவுள்ள பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க முனையலாம்.
என்றாலும், தமிழ் மக்கள் எந்தளவுக்கு வாக்களிப்பில் பங்கேற்பர் என்று சரியாக அனுமானிக்கமுடியாது. ஏனென்றால், எந்த நம்பிக்கையையும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அளிக்காத நிலையில், தமிழ் மக்களை வாக்களிப்பு நிலையங்களை நோக்கி நகர்த்துவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்காது.
-கே.சஞ்சயன்
No comments:
Post a Comment