இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, December 6, 2014

எதிரணியின் பாய்ச்சல்!

ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது.  
பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில்,

புறாக்களைப் பறக்கவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தார். ஊடகங்களால் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் நபராக மைத்திரிபால சிறிசேன மாறி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே அவர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்திருப்பதாக சிங்கள ஊடக நண்பரொருவர் குறிப்பிடுகின்றார். அதை, உணரவும் முடிகின்றது. 

அரசாங்கமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரசாரக் கூட்டங்களை இன்னமும் ஆரம்பித்திருக்கவில்லை. அரச நிகழ்வுகளை தமது பிரசார கூட்டங்களாக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் நாட்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடாக, மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வை அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

தேர்தல் காலங்களில், அலரி மாளிகை அன்னசாலை ஆவதும் ஆளும் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமையற்காரர்கள் ஆவதும் வழக்கமானது என்று எதிரணியினர் நாடாளுமன்றத்துக்குள்ளேயே நையாண்டி செய்திருக்கின்றார்கள்.  

ஒவ்வொரு அரசாங்கமும் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார் திட்டங்களை முன்னெடுப்பது வழக்கமானது. தேர்தல் விதிகளுக்கு அது முரணான போதும் அவ்வாறான நடவடிக்கைகளை ஆளும் தரப்பினர் என்றைக்கும் கைவிட்டதில்லை. இது, தெற்காசிய அரசியலின் சாபக்கேடு. இலங்கையிலும் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் இதையே செய்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சி ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்படும்.  

மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், பொது எதிரணிக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு மற்றும் பிரஜைகள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பாரிய கூட்டம் என்று கடந்த நாட்களில் பெரும் கவனம் பெறும் கூட்டங்களை பொது எதிரணி நடத்தியிருக்கின்றது. அந்தக் கூட்டங்களை நோக்கி மக்கள் மெல்ல மெல்ல திரண்டு வருகிறார்கள்.  

இன்னொரு பக்கம், அரசாங்கத்திலிருந்து தொடர்ந்தும் அதிருப்தியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக நவீன் திஸாநாயக்க வெளியேறியிருக்கின்றார். வெளியேறிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியோடு மீண்டும் இணைந்திருக்கின்றார். அதுபோக, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்றைக் கூட்டி, அரசாங்கத்தின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார்.  

'நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. என்னைத் தேடி வந்த மூன்று பேர், மேற்படி பணத்தொகையுடன் என்னை அணுகினர். 

ஆனால், சட்டத்துக்கு முரணான இந்தப் பணத்தை நான் ஏற்க மறுத்து விட்டேன். மேலும் இந்தப் பணம் அரசாங்கம் சார்பிலேயே வழங்கப்பட்டது. பணம் வழங்கியவர்களின் பெயர்களை குறிப்பாக இப்போது கூறமுடியா விட்டாலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியான பின்னர் அவரால் நியமிக்கப்படும் விசாரணைக் குழுவிடம் வெளிப்படுத்துவேன்' நவீன் திஸாநாயக்கவின் குற்றச்சாட்டு மேற்கண்டவாறாக அமைந்தது.  

அரசாங்கத்தின் மீது அதிருப்தியுற்ற அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்ந்தும் தம்மோடு தக்க வைப்பதற்காக, பெருந்தொகைப் பணத்தை அரசாங்கம் வழங்குகின்றது என்று பொது எதிரணியினர் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், நவீன் திஸாநாயக்கவின் மேற்கண்ட குற்றச்சாட்டு மேலும் கவனம் பெறுகின்றது.  

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பூரணமாக நம்பிக்கை கொள்ள முடியாவிட்டாலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், அரசாங்கத்துக்கு எதிராக தன்னுடைய அதிருப்தியை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். தன்னுடைய அமைச்சு வேலைகளையே செய்ய அனுமதிக்கிறார்கள் என்கிற வகையிலாக அது அமைந்திருந்தது.  

அவரே, கடந்த சில நாட்களுக்கு முன்,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்றைக்கு போதைப்பொருள் வர்த்தகர்களாலும் ஊழல்வாதிகளினாலும் நிறைந்துள்ளதாக மக்கள் கூட்டமொன்றில் உணர்ச்சி மிகுதியில் அழுதவாறு தெரிவித்தார். 

அதுவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தன்னுடைய வீட்டுக்கு வந்த போது இந்த நிலைமைகள் தொடர்பில் முறையிட்டதாகவும் ஆனாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்ற ரீதியிலும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்.  
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர விசுவாசியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஜனக்க பண்டார தென்னக்கோன் போன்றவர்கள் அதிருப்தியுடன் அரசாங்கத்தோடு இன்னமும் இருக்கிறார்கள். 

அது, தமது கட்சியை விட்டுக் கொடுக்கும் மனநிலைக்கு வராமையே அன்றி, அது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அல்ல. சிங்கள வாக்காளர்களிலும் பெருமளவிலானவர்கள் இதே மனநிலையில் இருக்கின்றார்கள்.  

ஆனால், அதை உடைக்கும் செயற்பாடுகளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைக் கொண்டு பொது எதிரணி கனகச்சிதமாக முன்னெடுக்கின்றது. மைத்திரிபால சிறிசேன என்கிற பெரும் ஊழல் குற்றங்கள் அற்ற நபர் மீதான நல்லெண்ணமும் அதனை ஓரளவுக்கு சாத்தியமாக்கியிருக்கின்றது.  இது, அரசாங்கத்தின் பெரும் வீழ்ச்சியின் இன்னொரு அறிகுறி.  

ராஜபக்ஷ சகோதரர்களிடமே நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புக்களும் இருக்கின்றன. கிட்டத்தட்ட மன்னராட்சியில் குவித்திருக்கின்ற அதிகாரங்களை ஒத்தது.

 அவ்வாறான நிலையில், தங்களுக்குள் இருந்த ஒரு நபரையே எதிரணி பொது வேட்பாளாராக முன்னிறுத்தும் என்று அவர்கள் கணிக்கத் தவறியமை அல்லது அவர்களின் புலனாய்வின் தோல்வி ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சத்தை வர வைத்திருக்கின்றது.  

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இறுக்கமான போராட்ட இயக்கமொன்றை ஒட்டுமொத்தமாக அழித்து, சாதனையாளராக சர்வதேச ரீதியில் வலம் வந்த கோட்டாபாய ராஜபக்ஷவினால் கூட மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களின் வெளியேற்றம் தொடர்பில் இறுதிக் கணங்கள் வரையில் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. 

அது இப்போது, அரசாங்கத்திலுள்ளவர்களை தக்கவைப்பது தொடர்பில் போராட வைத்திருக்கின்றது. அதனைத் தவிர்த்து மக்களிடம் நேரடியாக செல்வதிலுள்ள மனத்தடையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.  

மறுபுறத்தில், எதிரணி தன்னுடைய செயற்றிட்டங்களை அகல விரித்துக் கொண்டிருக்கின்றது. சிங்கள பௌத்த அடிப்படைவாத கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றை இணைத்துக் கொண்டிருக்கின்றது. 

பொது எதிரணியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவை கைச்சாத்திடவில்லை என்றாலும் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக ஏற்று தேர்தல் மேடைகளில் ஏறுவதற்கு தயாராகிவிட்டன.  

விமல் வீரவங்ச குழுவினரின் பிளவு உள்ளிட்ட காரணங்களால், சோமவன்ச அமரசிங்க காலத்தில் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைவரானதும் மீண்டும் மக்களிடம் செல்வாக்குப்பெற ஆரம்பித்திருக்கின்றது. 

அதுவும் அரசாங்கத்துக்கு எதிரான அவரின் நாடாளுமன்ற உரைகள் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அப்படியான நிலையில், மைத்திரிபால சிறிசேன மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி ஆதரிப்பது தொடர்பிலான முடிவை மக்கள் விடுதலை முன்னணி எடுத்திருப்பது குறிப்பிட்டளவு தாக்கம் செலுத்தும் ஒன்றாகும்.  

பௌத்த தேசியவாத சக்திகளில் ஜாதிக ஹெல உறுமயவுக்கு என்றொரு இடமுண்டு. அது, தன்னுடைய வலிமையை அரசாங்கத்துக்குள் இருந்து வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைந்த போது அங்கிருந்து வெளியேறியிருக்கின்றது. 

அதன்மூலம், மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தன்னுடைய வலிமையை வெளிப்படுத்த முயல்கிறது. 

அரசாங்கத்தின் பின்னணியோடு இயங்குவதாக குற்றஞ்சாட்டப்படும் பொது பல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத குழுவை விட, பௌத்த தேசியவாதிகளிடம் ஜாதிக ஹெல உறுமயவுக்கு பெரும் வரவேற்பு உண்டு. 

பொது பல சேனாவின் மீதான அதிருப்தி சிங்கள மக்களிடமும் உண்டு. ஏனெனில், நாட்டில் இனங்களுக்கிடையிலான பதற்றங்களை ஏற்படுத்தும் முகமாக கருத்தியலை பொது பல சேனா தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. 

அதனை சிங்கள மக்களில் அதிகமானவர்கள் இரசிக்கவில்லை. இவ்வாறான நிலையில், பொது பல சேனாவின், அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாடு அவ்வளவு தாக்கம் செலுத்தும் ஒன்றல்ல.

இவ்வாறான நிலையில் பௌத்த தேசியவாத சக்திகளும் மைத்திரிபால  சிறிசேனவோடு அதிகமாக கூட்டு வைத்துக் கொண்டிருப்பதாக கொள்ள வேண்டியிருக்கின்றது.  

தமிழ் மக்களின் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாடு எதிரணிக்கு சாதமானது. ஆனாலும், வடக்கு- கிழக்கில் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் நோக்கில் பேச்சுக்களை பொது எதிரணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்திருக்கின்றது. 

தேர்தல் பிரசாரங்களின் இறுதிக் காலத்தில் பொது எதிரணிக்கான தன்னுடைய ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும் சாத்தியம் உண்டு. 'புலி எதிர்ப்பு' வாதத்தை அரசாங்கத்துக்கு சளைக்காதவாறு முன்னெடுக்கும் பொது எதிரணிக்கு தமிழ் மக்களின் வாக்கு என்பது பெரும் பொக்கிஷமாக மாறும். ஏனெனில், பிளவுபட்டுள்ள சிங்கள வாக்குகளுக்கு மேலதிகமானது சிறுபான்மை மக்களின் வாக்குகள்.  

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை தங்களால் பெற முடியாது என்ற நிலையில் முஸ்லிம் மக்களின் வாக்குகளையாவது தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கம் பெரும் முயற்சிகளை எடுக்கின்றது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்பு, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்று முயற்சிகள் தொடர்கின்றன. ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பிடிக்குள் இன்னமும் முழுமையாக சிக்கவில்லை.  

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அரசாங்கம் தன்னுடைய பிடியை இழந்து வந்திருக்கின்றது. ஆனால், பொது எதிரணி பாய்ச்சலோடு ஓடிக்கொண்டிருக்கின்றது. 

தமிழ் பட வசனமொன்று இருக்கின்றது, 'முதல்ல யார் ஜெயிக்கிறான் என்பது முக்கியமல்ல, கடைசியில யார் ஜெயிக்கிறான் என்பதுதான் முக்கியம்' என்று. அதுதான் இறுதியாக இருக்கும். 

அந்த இறுதி வெற்றி யாருக்கு என்பதை வாக்காளர்கள் மட்டுமல்ல அதனைத் தாண்டி சில அதிகார இயந்திரங்களும் நிர்ணயித்துவிடும் என்பதுதான் இப்போதுள்ள ஒரே அச்சம். பார்க்கலாம் இறுதியில் யார் வெற்றியாளர்களாக வருகிறார்கள் என்று!


த.புருசோத்தமன்

No comments:

Post a Comment