
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் சிதம்பரபுரம் முகாம் காணப்படுகிறது. யுத்தம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக 1990 ஆம் ஆண்டு இந்த முகாம் உருப்பொற்றது. ஆரம்பத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் காரணமாக அனேகமானவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப தற்போது 186 குடும்பங்கள் இந்த முகாமிலேயே வாழ்ந்து வருகின்றன. மழைக்கால சிவராத்திரி 20 வருடங்களாக முகாம் வாழ்க்கையை அனுபவித்துவரும் ராஜ்குமார் சிவாஜினி தனது இடர்களை இவ்வாறு விவரிக்கிறார். 'நாங்கள் வவுனிக்குளத்தில் இருந்து 1994 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இங்க வந்தனானாங்கள். வரேக்க எனக்கு 6 வயசு; இப்போ என்ர மூத்த பிள்ளைக்கு 10 வயசு; எனக்கு மூன்று பிள்ளைகள். இந்த முகாமில்தான் இருபது வருஷமா வாழுறம். எங்கட வீட்டுக்கு தார் சீற்றுகள் தான் கூரைகளுக்கு போட்டிருக்கு. அவை பிஞ்சு மழைத் தண்ணி எல்லாம் நேரடியாக வீட்டுக்கேயே விழுகிறன. மழை பெய்தால் எமக்கு தினமும் சிவராத்திரிதான்- என்றார்.
ஓட்டைகள் நிறைந்த தார் சீற்றுகளாலான கொட்டில்களுக்குள்ளும் மண் குடிசைகளுக்குள்ளும் இவர்களது வாழ்க்கை நகர்கிறது. மழை காலங்களில் நேரடியாகவே மழை நீர் வீட்டுக்குள் விழுவதால் தினமும் நித்திரை முழிப்பும் இடப்பெயர்வும் இவர்களுக்கு பழகிப்போன விடயங்களாகிவிட்டன. மின்சார சபையும், இம்முகாம் மக்களுக்கான மின் விநியோகத்தை முழுமையாக நிறுத்திவிட்டதால் இருள் சூழ்ந்த நிலையில் அரிக்கன் லாம்புகளே இவர்களுக்கு ஒளியூட்டுகின்றன. சொந்த இடம் மறந்துபோச்சு 19 வருடங்களக்கு முன்னர் இந்த முகாமுக்கு வந்துசேர்ந்த ஆர்.உதயகுமார் தனது சொந்த ஊரை மறந்துவிட்டேன் என்கிறார். நாம 1995 இல் இருந்து இங்க இருக்கிறம். நான் 3 வயசில வந்தனான். ஆனா எனக்கு இப்ப 3 வயசில பிள்ளை இருக்கு. எங்கட ஊரே மறந்து போச்சு. இப்ப என்ர ஊர் எல்லாம் இந்த முகாம்தான். எனக்கு எங்கேயும் காணி இல்லை. இங்க காணி தந்தாங்க என்றா நாம ஏதோ கூலி வேலை செய்து வீட்டை திருத்தி வாழ்க்கைய ஓட்டிருவம்.- என்று ஆதங்கப்படுகிறார் அவர். பாடசாலை செல்லும் பல மாணவர்கள் இருந்தும் மின்சாரம் இன்மையால் அவர்களது கல்வியும் கேள்விக்குறியே? 186 குடும்பங்களுக்கும் ஒரு சில பொதுவான மலசலகூடங்களே உள்ளன.
இதனால் காடுகளையே தாம் அவ்வப்போது பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கின்றனர். குடிதண்ணீர் பம்பிகள் 20 வரை இருந்தும் அவற்றில் இரண்டு மாத்திரமே இயங்கக் கூடியதாக இருக்கின்றது என்கின்றனர் இந்த மக்கள். சொந்தக் காணி சாத்தியமா? "தேர்தல் காலங்களில் மட்டும் எல்லாரும் வாறாங்க. வென்றாலும் வெல்லாட்டாலும் உங்களுக்கு நாங்க காணி தாறாம். நீங்கள் எங்களுக்கு வாக்கு போடுங்க என்கிறாங்க. வெறும் போர்முகளையும் கொண்டந்து காட்டி சிலர் காணியை அளக்கப் போறதாய் கூட சொன்னாங்க. ஆனா தேர்தல் முடிஞ்சு ஒரு வருசம் போட்டுது. எதுவுமே நடக்கல'' என்கிறார் கந்தசாமி சுரேஸ்குமார்.
இவர்களுக்கு சொந்த காணி இல்லாத காரணத்தினால் அப் பகுதியிலேயே காணி வழங்கி குடியமர்த்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் மற்றும் வன்னி அபிவிருத்தி குழு தலைவவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்ட போதும், அது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை. இவையும் தேர்தல் கால வாக்குறுதிகள் போலத் தானா? என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். 'வடக்கின் வசந்தம்', 'திவிநெகும', 'வடக்கின் அபிவிருத்தி', 'மஹிந்த சிந்தனை' எனப் பல பெயர்களில் அரசு கூறிக் கொண்டாலும் இந்த மக்களுக்கு எந்த சிந்தனையும் செல்லவில்லை. மலசலகூடம், குடிதண்ணீர், மின்சாரம், வீடு, காணி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற அவல நிலையிலேயே வாழ்கிறார்கள் இவர்கள். தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கு காணிகளை வழங்கி வேகமாக குடியமர்த்தும் இந்த அரசாங்கம் சொந்த காணிகளற்ற இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பராபட்சம். இவர்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதாலா?
-கே.வாசு-
No comments:
Post a Comment