இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Thursday, November 6, 2014

நியாயமான கேள்வி

வடகொரியா வசம் அணு ஆயுதம் இருப்பது தொடர்பாக வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. 

வடகிழக்கு ஆசியாவில் அமைதிச் சூழல் என்கிற வகையில், அமெரிக்காவின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், வழக்கமான பிடிவாதத்திலிருந்து அது சற்றேனும் இறங்கி வந்தால்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுத சர்ச்சைக்காக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஷிட்னி செய்லர் தனது சுற்றுப்பயணத்தை தென்கொரியாவில் இருந்து தொடங்கியுள்ளார்.
சீனா, ஜப்பான் நாடுகளுக்கும் அவர் சென்றுள்ளார். இதே விஷயம் தொடர்பாக தென்கொரியாவின் சிறப்புத் தூதர் ஹ்வாங் ஜூன்-ஹூக்கும் சீனாவுக்குச் சென்று பேச்சு நடத்தியிருக்கிறார்.
முதல் முறையாக 2006-ஆம் ஆண்டு வடகொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தியபோது, மேற்கத்திய நாடுகளின் வெறுப்பைச் சம்பாதித்தது.
குறிப்பாக, அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வை எட்டுவதற்காக, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளும் 2008-இல் பேச்சுவார்த்தையைத் தொடங்கின.
ஆறுகட்டமாக நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, பேச்சுவார்த்தையிலிருந்து வடகொரியா பாதியிலேயே வெளியேறியது.
"தென்கொரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்; தென்கொரியாவுடனான கூட்டுப் போர்ப் பயிற்சி நிறுத்தப்பட வேண்டும்' என்பவை வடகொரியாவின் நிபந்தனைகள். இதற்கு அமெரிக்கா சம்மதிக்காததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அதன்பிறகு 2009, 2013-ஆம் ஆண்டுகளில் வடகொரியா மீண்டும் அணுஆயுதச் சோதனையை மேற்கொண்டதால், நிலைமை மிகவும் சிக்கலாகி, வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள சூழ்நிலையில், இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளைத் தவிர, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய மூன்று நாடுகளும் அணு ஆயுத பலம் பெற்றவை.
இதில், வடகொரியாவின் அணு ஆயுத பலம் மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக, அமெரிக்காவுக்கு அதிகப்படியாகவே எரிச்சலூட்டுகிறது.
அதனால், தென்கொரியாவுடனான வடகொரியாவின் சண்டையைக் காரணம்காட்டி, வடகொரியாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது.
அணு ஆயுதமற்ற உலகம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், யாரிடம் அணு ஆயுதம் இருக்க வேண்டும், யாரிடம் இருக்கக் கூடாது எனத் தீர்மானிப்பதில் மட்டுமே அமெரிக்கா குறியாக இருப்பதால்தான் சிக்கல் எழுகிறது.
அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு உதாரணமாக இந்தியாவையே எடுத்துக்கொள்ளலாம். அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்று அவ்வப்போது அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியா கையெழுத்திடவில்லை. இதன் காரணம் என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஐந்து நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டவை. அவை அணுஆயுத பலம் இல்லாத நாடுகளுடன் "அமைதியான, ஆக்கபூர்வமான' விஷயங்களுக்காக அணுஆயுதத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். மற்ற அணுஆயுத நாடுகள் அவ்வாறு பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பதே அந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம்.
அதை ஏற்க இந்தியா மறுத்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம் என்பது இந்தியாவின் கேள்வி. அறிவுரை கூறுபவர் முதலில் அதன்படி நடந்துகாட்ட வேண்டும் என்பதுதான் இக்கேள்வியின் அர்த்தம்.
இதே கேள்வி வடகொரியாவின் பிரச்னைக்கும் பொருந்தும். "தென்கொரியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி, அந்நாட்டில் தனது படைகளை அமெரிக்கா இறக்கியிருப்பது எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காதா? நாங்கள் அணு ஆயுதத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தும் அமெரிக்கா, முதலில் அதைச் செய்ய வேண்டாமா என்பது வடகொரியாவின் கேள்வி.
இது நியாயமான கேள்விதானே!

எஸ். ராஜாராம்

No comments:

Post a Comment