ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர், தேசிய அரசியல் நீரோட்டத்தையே நிர்ணயிக்கின்ற பலம்பொருந்திய சக்தியாக திகழ்ந்த மலையக கட்சிகள், தற்போது சிக்கி சின்னாபின்னமாகி, சீரழிந்து, விபசார அரசியலை நடத்திக்கொண்டிருக்கின்றன
மீரியாபெத்த மண்சரிவில், தோட்ட காரியாலயம், பாடசாலைகள், கிராமசேவகரின் ஆவணங்கள், பிரதேச செயலகம் மூழ்கவில்லை என்பதனால் மரணித்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவ்வளவு சிரமமான காரியமாக இருக்காது. மரணித்தவர்களின் துல்லியமான புள்ளிவிவரங்களை முன்வைக்குமாறு மலையக தலைமைகள் ஏன் கோரவில்லை?
.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான், அன்றைய அரசாங்கங்களுக்கு வலிமைமிக்க பலம்பொருந்திய கொம்பாகவே திகழ்ந்தார் என்றால், அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. அது அவரது அரசியல் சாணக்கியம் என்று பிற்காலங்களில் புகழ்ந்துரைக்கப்பட்டது.
அடுத்ததாக மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவர் மறைந்த பெரியசாமி சந்திரசேகரன், 1994ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்துநின்று போட்டியிட்டு வெற்றியீட்டி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சியமைப்பதற்கு காரணமானார். எனினும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி அவர் ஆட்சியிலிருந்து பின்னர் விலகினார்.
2000ஆம் ஆண்டு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி கவிழ்வதற்கு, இன்னாள் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் பிரதான காரணகர்த்தாக்களாக இருந்தபோதிலும், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தற்போதைய ஆலோசகரான வீ. புத்திரசிகாமணி - எதிரணிக்கு மாறியதையடுத்தே, ஆட்சி படகு ஆட்டம் கண்டது.
எனினும், தீபாவளி தினத்துக்கு அரசாங்கம் விடுமுறை கொடுக்காததையடுத்தே தான் அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு மாறியதாக அவர் அன்று விளக்கம் கொடுத்தார். ஆட்சிபீடம் அமைப்பதற்கும் ஆட்சி கவிழ்வதற்குமான இயலுமையும் ஆளுமையும் அரசியல் சாணக்கியமும் மலையக தலைமைகளிடத்தில் அன்றிருந்தன என்பதற்கு இவை சில உதாரணங்களாகும்.
அமரர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோரின் அந்தகால ஆளுமையான முடிவுகள், உரிமைகளை வெற்றெடுக்க செய்தன என்பதற்கு அப்பால், சில நேரங்களில் இளைஞர்கள், சிறைச்சாலைகளுக்கு செல்வதற்கும் போராட்டங்கள் உக்கிரமடைவதற்கும் வழிவகுத்தன. பல உயிர்களும் இரையாகின. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பிரவேசம் கூட அந்த தனியான ஆளுமையுடன் தான் தொடங்கியது எனலாம்.
அவ்வாறான போராட்டங்களை இன்றும் முன்னெடுக்கவேண்டும் என்றோ, மலையக இளைஞர்களை பலிகடாவாக்கவேண்டும் என்றோ, அரசாங்கத்தை கவிழ்த்து, எதிரணிக்கு காவடி தூக்கவேண்டும் என்றோ, இல்லையேல் மலையக அடையாளமின்றி அரசியல் அநாதைகளாக வேண்டும் என்றோ நான் கூறுவதற்கு முனையவில்லை. பதுளை, கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவுக்கு பின்னர், முழுமையாகவே அநாதைகளாக்கவேண்டும் என்ற முயற்சிகளுக்கான கீறல்கள் தென்படுகின்றன.
ஆகக்குறைந்தபட்ச உரிமைக்குரலை கொடுத்தாவது, மக்களின் உரிமைகளில் காணி, வீட்டுரிமை உள்ளிட்ட பலவற்றை பெற்றுக்கொடுத்திருக்கலாம். ஆனால், மலையக தலைமைகளின் சரணாகதி அரசியலினால், 2015ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை வாய்பிளந்து பார்த்துகொண்டிருந்த மலையக மக்களுக்கு, ஆகக்குறைந்த ஒரு முன்மொழிவேனும் இல்லை.
மலையகத்தை தளமாக கொண்ட அல்லது தலைநகரை தளமாக கொண்ட தொழிற்சங்கங்களாக இருந்தால் என்ன, அவையெல்லாம் தொழிற்சங்கங்களுக்கு அப்பால் அரசியல் தொழிற்சங்கங்கள் என்றால்; மாற்று கருத்துக்கு இடமில்லை.
மலையக உழைப்பாளிகளின் உழைப்பிலிருந்து உறிஞ்சும் சந்தாப் பணத்தை வாங்கிகொள்கின்ற இந்த தொழிற்சங்கங்கள், மலையக மக்களின் நலன்சார் விடயத்தில் முழுமையாகவும் சரியாகவும் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, நீண்டகாலமாக சுமத்தப்பட்டுவருகின்றன.
தொழிற்சங்கங்கள், அந்த குற்றச்சாட்டுகளை வாய்மொழி ஊடாக மறுதலித்தாலும் மலையக தொழிற்சங்கங்களின் இயலாமை பதுளை, கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவின் போது படம்பிடித்து காட்டி அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது.
விலைவாசி ஏற்றம், மனித உரிமை மீறல்கள், சுரண்டல்கள், இலஞ்ச ஊழல்கள் என்பன மலையக மக்களும் முகங்கொடுக்கும் பொதுப் பிரச்சினைகளில் சிலவாகும். அதற்கு அப்பால் கூட்டு ஒப்பந்தம், வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றன அம்மக்களும் அதிகமாக முகங்கொடுகின்ற உரிமை பிரச்சினைகளில் சிலவாகும்.
90களின் ஆரம்பத்தில், பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட போது, கூட்டு ஒப்பந்த அடிப்படையில் அல்லாது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால், சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக அன்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில், 1994ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் கூடிய சம்பள உயர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை புதுப்பிக்கப்படுகின்றது.
தொழிற்சங்கங்கள் சார்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கூட்டிணைந்த தொழிற்சங்கங்கள் ஆகியன இணைந்து முதலாளிமார் சம்மேளத்துடன் பேரம் பேசி சம்பள உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்கிறது என்பதுதான் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிலாளர் வர்க்கத்துக்கு காட்டப்படுகின்ற படமாகும்.
ஆனால், அந்த முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில், தோட்ட மக்களின் நலன்புரி மற்றும் சேமநலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் செயலாற்றுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படுகிறது. அதுவும் இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை புதுப்பித்துக்கொள்ளப்படுகின்றது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கின்றது.
இவ்விரு ஒப்பந்தங்களும் 1994ஆம் ஆண்டு 22 கம்பனிகளுடன் செய்துகொள்ளப்பட்டன. ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு முன்னர், முதல் மூன்று மாதங்களுக்கு சேமநல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியில் சம்பள உயர்வு ஒப்பந்தத்துடன் இணைந்து கைச்சாத்திடப்படும்.
சேமநல விடயங்களில் தொழிலாளி ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு வழங்கப்படவேண்டிய சலுகைகள், சவப்பெட்டி, மருத்துவ வசதி, தேயிலை தூள் கொடுத்தல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கும். அந்த ஒப்பந்தம் நிச்சயமாக செய்யப்படும். ஆனால், அது இதுவரையிலும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டே வந்துள்ளது.
இது இவ்வாறிருக்க - இதற்கு முன்னர், அதாவது 1966ஆம் ஆண்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ§க்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் சாதாரண ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். 45 நாட்கள் நடத்தப்பட்ட 17க்கு 50 என்ற பஞ்சப்படி போராட்டத்துக்கு பின்னரே இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், சங்கத்துக்கான சந்தாப்பணம் செக்ரோலில் பிடித்து தொழிற்சங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலைமையிருந்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏகப்பிரதிநிதியாக ஆகிவிடும் என்பதை கருத்திற்கொண்ட முதலாளிமார் சம்மேளனம், 50 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டிருந்தால் ஒப்பந்தம் செய்யலாம் என்று அறிவித்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மீது வெறுப்பு கொண்டவர்கள் அதற்கு பின்னர் பிரிந்துசென்று தொழிற்சங்கங்களை ஆரம்பிக்கத் தொடங்கினர். தொழிலாளர்களின் சந்தா பணத்தை பெற்று யார்வேண்டுமானாலும் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
மறைந்த விஜயதுங்க - ஜனாதிபதியாக இருந்தபோது, வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. அதில் 12 ரூபாயை மட்டுமே முதலாளிமார் சம்மேளனம் வழங்கியது.
இதனையடுத்தே, மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான், 1993ஆம் ஆண்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிலாளர்களின் சேமநல விடயங்கள் உள்ளடங்கலாக சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் நிலம் அரசாங்கத்தின் உடமையாகும். அது 99 வருடங்கள் குத்தகைக்கு முதலாளிமார்களுக்கு வழங்கப்படுகின்றது என்பதாகும்.
நிலம் தனியாருடையதாக இருந்தால் தான், அரசாங்கத்தினால் அவற்றில் ஒன்றையும் செய்யமுடியாது. இல்லையேல் அரசாங்கத்தின் வாஞ்சனையுடன் பெரும்பான்மை பேரினவாதம் நிலத்தை கபளீகரம் செய்திருக்கும். இந்த நோக்கத்துடன்தான் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாக பின்னர் விளக்கமளிக்கப்பட்டது.
அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. ஏனென்றால், பெருந்தோட்டங்களை அண்மித்ததாக இருக்கின்ற பெரும்பான்மையின மக்கள் - பெருந்தோட்டங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் பெரும்பாலானவற்றை சுவீகரித்து ஆக்கிரமித்துவிட்டனர்.
அதுமட்டுமன்றி நாட்டில் யுத்தம் நிலவிக்கொண்டிருந்த காலத்தில், மலையகத்தின் கேந்திர முக்கியத்துவமான சந்திகளில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனை சாவடிகளுக்கு அருகில் புத்தர் சிலைகள் முளைக்கத் தொடங்கியதையடுத்து அங்கு சின்ன சிங்கள கிராமமே முளைத்துவிட்டது. அவையெல்லாம் தகர்த்தெறிய முடியாதவையாகும்.
ஆனால், பதுளை, கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவு, மலையக மக்களுக்கு காணிவேண்டும் என்ற காணியுரிமை கோஷத்தை வலுவடைய செய்துவிட்டது.
மலையக மக்களுக்கு 7 பேர்ச் அல்லது 10 பேர்ச் காணி வேண்டும் என்ற இன்றைய கோரிக்கை நியாயமானதாகும். ஆனால், அந்தக்கோரிக்கை பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இருக்கின்ற இனவாத கண்களை கொண்டவர்கள், முழு மலையகத்தையும் தனிநாடாக ஆக்குவதற்கான கோரிக்கையாகவே பார்க்கின்றனர்.
இது தொடர்பில் சிங்கள தலைமைகளுக்கு மலையக தலைமைகள் தெளிவுப்படுத்தவேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்த திராணியற்றவர்களாக இருக்கின்ற மலையக தலைமைகள், மக்களின் வாக்குகளில் சவாரி செய்து, சந்தாப் பணத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
பெருந்தோட்டம் வாழ்வியல் நிலம் மற்றும் பயிர்ச்செய்கை நிலம் என்று இரண்டுவகையாக வகைப்படுத்தலாம். இதில் வாழ்வியல் நிலத்தை மட்டுமே அம்மக்கள் கோருகின்றனர் என்று மலையகத்தின் அரசியல் தலைமைகள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்.
2013ஆம் ஆண்டு, வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தோட்டங்களில் இருக்கின்ற சுமார் 36ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் அம்மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பில் பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களின் ஏக்கர் குறைத்துக் கூறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த அறிவிப்புக்கு என்ன நடந்தது? அப்போதெல்லாம் கைதட்டி, வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொண்ட மலையக தலைமைகள், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில் வழமை போலவே சரணாகதி அரசியலை உறுதிப்படுத்திவிட்டனர்.
மலையக மக்களின் ஆகக் குறைத்த பட்ச 7பேர்ச் காணி உரிமையையாவது முன்வைத்து பேரம்பேசி, ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு மலையக தலைமைகள் முன்வந்திருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக அமைந்திருக்கும்.
காணியுரிமை கோஷம், கொஸ்லாந்தை - மீரியாபெத்த மண்சரிவுக்கு பின்னரே வலுப்பெறத்தொடங்கியது. அதில், மலையக தலைமைகளிடம் ஒற்றுமையில்லை என்பதை காட்டிவிட்டது. மீரியாபெத்த மண்சரிவில் மாண்ட எமது இனங்களுக்கு ஒருநாள் அனுதாப வேலைநிறுத்தத்தை செய்திருந்தால் இந்த பேரவலம் உலகின் கண்களை இன்னும் இன்னும் ஈர்த்திருக்கும்.
அதற்கு பின்னர், முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம்கொடுத்து, பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை 7பேர்ச் அளவில் பெற்றுக்கொடுத்து, லயன்கள் இன்றி, மாடிவீட்டு லயன் முறைமைகளை மாற்றியமைத்து, தனித்தனி வீடுகளை பெற்றுக்கொடுக்குமாறும் அழுத்தங்களை பிரயோகித்திருக்கலாம்.
அதனை கூட செய்வதற்கு திராணியற்றவர்களாக இருக்கின்ற, மலையகத்தின் தலைமைகள் என்று தங்களை சொல்கின்றவர்கள், மீரியாபெத்த மண்சரிவில் புதையுண்டுபோன உயிர்களின் எண்ணிக்கையை கூட துல்லியமாக வெளிப்படுத்துவதற்கு இதுவரையிலும் கோரவில்லை. ஆனால், 16ஆம் நாள் கருமாதியை முடித்து மொட்டையடித்து தலைமுழுகசெய்துவிட்டனர் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும்.
தோட்டத்திலிருந்து குடும்பத்துடன் வெளியேறினோர்; அல்லது திருமணம் முடித்து அத்தோட்டத்திலிருந்து சென்ற பெண்களின் விவரங்களை தவிர, பெருந்தோட்டங்களில் வாழ்கின்றவர்களின் புள்ளிவிவரங்கள், அந்தந்த தோட்ட குடும்ப நல உத்தியோகத்தரிடம் இருக்கும் 'செக்ரோல்' புத்தகத்தில் காணப்படும். கிராம சேவகரிடம் இருக்கும். பிரதேச செயலகங்களில் இருக்கும், மாணவர்கள் தொடர்பான பதிவுகள் பாடசாலைகளில் இருக்கும். (திருமணம் முடித்து பிரிதொரு தோட்டத்துக்கே சென்றுவிட்டாலும் அந்த பெண்களின் பெயர்கள் அங்கு பதியப்படும்).
மீரியாபெத்த மண்சரிவில், தோட்ட காரியாலயம், பாடசாலைகள், கிராமசேவகரின் ஆவணங்கள், பிரதேச செயலகம் என்பன மூழ்கவில்லை என்பதனால் மரணித்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவ்வளவு சிரமமான காரியமாக இருக்காது. மரணித்தவர்களின் துல்லியமான புள்ளிவிவரங்களை முன்வைக்குமாறு மலையக தலைமைகள் ஏன் கோரவில்லை?
பேருகலைமலையின் பேரழிவு என்பதற்கு அப்பால், மலையகத்தின் உண்மையான உரிமையுடன் கூடிய ஆக்கத்தின் அடியாக மலையக தலைமைகள் எடுத்துகொள்ளவேண்டும்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் ஆற்றும் சிவபெருமான், ஊழிக் காலத்திலே அனைத்தையும் தனக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் தோற்றுவிப்பவன் அவனே. ஊழிப்பெருங்கூத்தை அவனே ஆடி உலகனைத்தையும் அழித்து வரும் வேளையிலே, அன்னை பராசக்தியின் அருள் நிறைந்த பார்வையைக் கண்டு படிப்படியாக வேகம் குறைந்து அமைதி அடைந்து, ஆதிசக்தியின் துணையோடு அனைத்துலகையும் மீண்டும் படைப்பான். இதுவே ஊழிப் பெருங்கூத்தின் விளக்கமாகும்.
ஆனால், மலையத்தில் அழிவு ஏற்படும் போதுமட்மே அரசியல் கோமாளிகள் ஊழிக்கூத்தை ஆடுகின்றனர். அதனை அழிவிலிருந்து ஆக்கத்துக்கான பாதையை வெட்டிக்கொள்ளவேண்டும்.
அதிலும் அரசியல் கோமாளிகளாகவும் மழைக்கு முளைத்த காளான்களாவும் இருந்து செயற்படுகின்றவர்களின் செயற்பாடுகள் அருவருக்க செய்துவிடுகின்றன.
இரத்தம், வியர்வையை மண்ணுக்கு சிந்தி, மண்ணை பொன்னாக்கிய மலைய தங்கங்கள்- மழைக்கு முளைத்த காளான்களால் அடகுகடையில் ஒரேதடவையில் அடகு வைக்கப்படுகின்றனர்.
மலையக அரசியல் தலைமைகள் தங்களை தேசிய அரசியல் நீரோட்டத்துக்கு சவாலாக்கிகொண்டு, காளான்களை களையெடுக்காவிடின் 'மலையக மக்களின் அரசியல் இருப்பு' எதிர்காலத்தில் பெரும் சவாலாகவே இருக்கும்.
இதற்கிடையில் மலையகத்தில் தனி வீடுகளை அமைப்பதற்கு, தோட்ட நிறுவனங்கள் பாதுகாப்பான காணிகளை வழங்குவதில்லை. மாறாக தோட்ட நிறுவனங்களுக்கு பயன்படாத மலை அடிவாரங்களில் உள்ள கரடுமுறடான காணிகளை வழங்குகின்றனர். ஆபத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஆபத்தான இடங்களில் வீடுகளை அமைத்து கொடுப்பது வரவேற்கத்தக்க விடயம் அல்ல. எனவே, மலையக மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க தோட்ட நிறுவனங்கள் பாதுகாப்பான காணிகளை வழங்க வேண்டும்.
இல்லையேல் அரசாங்கம் பலவந்தமாக காணிகளை சுவீகரிப்பதோடு, தோட்ட நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்யும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அப்படியாயின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனித்தனி காணிகளை பெற்றுக்கொடுக்கவேண்டிய தார்மீக கடப்பாடு யாருடைய கைகளில் இருக்கின்றது என்பது சகலருக்கும் வெளிச்சமாகும்.!
கனகராஜ்
No comments:
Post a Comment