இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Monday, November 17, 2014

எதிர்க் கட்சிகளின் தடுமாற்றம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடம் இருக்கிறதா என்றும் அவர், தமது தற்போதைய பதவிக் காலத்தில் நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்த நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா என்றும் இந்த இரண்டு பிரச்சினைகளைப் பற்றி அவர் உயர்நீதிமன்றத்தின் கருத்தை கோர முடியுமா என்றும் சில மாதங்களாக அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வந்த விடயங்களுக்கு
உயர்நீதிமன்றமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

தார்மிக ரீதியில், சரியோ பிழையோ இப்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தான் சட்டமாகிறது. எனவே அதனை சட்டப்படி கேள்விக்கு உட்படுத்த முடியாது.

ராஜபக்ஷ, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடம் இல்லை என்பதும் அவரது தற்போதைய பதவிக் காலம் முடிவடையும் முன் மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது என்பதும் இந்த விடயங்களைப் பற்றி அவர் உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோர அவருக்கு சட்டத்தால் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதுமே எதிர்க் கட்சிகளின் கருத்தாக இருந்தது.

முதல் இரண்டு பிரச்சினைகளைப் பற்றி, உயர் நீதிமன்றத்தின் கருத்தை விசாரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை ஜனாதிபதியே நிராகரித்தார். அவர் அக் கருத்தை ஏற்காது கடந்த 5ஆம் திகதி முதல் இரண்டு பிரச்சினைகளைப் பற்றி உயர் நீதிமன்றத்தின் கருத்தை விசாரித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

பலர் எதிர்பார்த்ததைப் போலவே, உயர்நீதிமன்றமும் அவரது கடிதத்தை நிராகரிக்கவில்லை. அதன் மூலம் உயர்நீதிமன்றமும் எதிர்க்கட்சிகளின் மூன்று வாதங்களில் ஒரு வாதத்தை நிராகரித்துவிட்டது. 

பின்னர் ஜனாதிபதியின் கடிதத்துக்கு அளித்த பதிலில், எதிர்க்கட்சிகளின் ஏனைய இரண்டு வாதங்களையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அதன் படி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் அவர் தமது தற்போதைய பதவிக் காலத்தில் நான்காண்டுகள் முடிவடைந்ததன் பின் மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

மூன்று விடுமுறை நாட்களை உள்ளடக்கிய ஐந்து நாட்களுக்குள் தமது கேள்விகளுக்கு பதிலளிக்குமாறே ஜனாதிபதி, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்து இருந்தார். எனவே, உண்மையிலேயே இந்த விடயத்தில் தமது கருத்துக்களை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நாள் மட்டுமே நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு இருந்தது. 

இந்த சட்டப் பிரச்சினைகள் விடயத்தில், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை சரியா என்ற கேள்வி இங்கு எழுகிறது. அவர்கள் ஜனாதிபதிக்கு பிடி கொடுத்துவிட்டே அவருக்கு எதிரான தமது போராட்டத்தை நடத்தினர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவே முதன் முதலாக கூறியிருந்தார். அதன் பின்னர், மக்கள் விடுதலை முன்னணி அக் கருத்தை தமது தற்கால பிரதான அரசியல் ஆயுதமாக பாவிக்க முற்பட்டது. 

சில்வா, சட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது சட்டத்துறையில் உபயோகிக்கப்படும் தந்திரோபாயங்கள் மற்றும் திருகுதாளங்களைப் பற்றியும் நன்கு அறிந்தவர். ராஜபக்ஷ மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என்று அவர் உண்மையிலேயே கருதியிருந்தால், அதேவேளை சட்டத்தின் ஆதிக்கமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கருதியிருந்தால், அவர் தமது கருத்தை முன்கூட்டியே வெளியிட்டு இருக்கக் கூடாது.

தமது பதவிக் காலத்தி;ல் நான்காண்டுகள் முடிவடைந்த பின், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பல மாதங்களாக வதந்திகள் பரவியிருந்தன. இந்த நிலையில் அந்த நான்காண்டுகள் முடிவடைவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே அவ்வாறு தேர்தலை நடத்த முடியாது என்றும் ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்றும் கூறினால், ராஜபக்ஷ அதைக் கேட்டு 'சும்மா' இருந்துவிடுவார் என சில்வாவும் பல அரசியல் கட்சிகளும் நினைத்திருக்கின்றன போலும்.

முன்கூட்டியே அவ்வாறு கூறியதால், ஒன்றில் ராஜபக்ஷ தமது ஜனாதிபதி அதிகாரங்களைப் பாவித்து தேர்தலை நடத்தவும் அதில் போட்டியிடவும் முற்படுவார், அல்லது உயர்நீதிமன்றத்தை அணுகுவார் என்பது சிறு குழந்தைகளும் ஊகித்து இருக்கும். ஆனால், சில்வாவோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ அதனை விளங்கிக்கொள்ளவில்லை போலும்.

ராஜபக்ஷ, தமது ஜனாதிபதி அதிகாரங்களைப் பாவித்து தேர்தலை நடத்தவும் அதில் போட்டியிடவும் முற்பட்டால் சில்வாவோ வேறு எவருமோ அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. 

ஏனெனில், நிறைவேற்று ஜனாதிபதி செய்த அல்லது செய்யாத எந்த விடயத்தைப் பற்றியும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று சட்டத்தில் இருக்கிறது. ஆனால், ராஜபக்ஷ தமது ஜனாதிபதி அதிகாரங்களைப் பாவித்து தேர்தலை நடத்தவும் அதில் போட்டியிடவும் முற்பட்டால் அந்தத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ராஜபக்ஷவின் வேட்புமனுவை ஏற்றது தொடர்பாகவும் தேர்தல் ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

எதிர்க்கட்சிகள் அவ்வாறு செய்யும் என்பதை, மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவர் அறிந்திருக்க மாட்டார் என்று நினைப்பது மடமை. இவ்வாறு தேர்தல் ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், இந்த நான்காண்டுகளில் தேர்தலை நடத்த முடியுமா என்பதைப் பற்றியும் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியுமா என்பதைப் பற்றியும் சட்ட வாதங்களை முன்வைக்க எதிர்த் தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். சிலவேளை, தேர்தலை தற்காலிகமாகவாவது இடைநிறுத்தவும் நேரலாம். 

இவையெல்லாம் அநாவசியமான தொல்லைகள் என்பதால், அவற்றுக்கு இடம் இல்லாத வகையில், ராஜபக்ஷ மூன்று அரசாங்க விடுமுறை நாட்களை உள்ளடக்கிய ஐந்து நாட்களுக்குள் தமது கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றத்துக்கு கடந்த 5ஆம் திகதி அறிவித்து இருந்தார்.

இதில் அரசியல் நாகரிகம் பற்றிய கேள்விகள் எழலாம். ஆனால், ராஜபக்ஷ செய்தது சட்ட விரோதமானது அல்ல. ஏனெனில் 'குறிப்பிட்ட காலததுக்;;குள்' தமக்கு நீதிமன்றத்தின் கருத்தை அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரலாம் என்றே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காலம் எவ்வளவு குறுகியதாக இருந்த போதிலும் அது சட்ட விரோதமாவதில்லை. அது ஒரு நாளாகவும் இருக்கலாம். அப்போது அதில் அரசியல் நாகரிகத்தைப் பற்றிய கேள்விகள் எழலாமேயொழிய சட்டப் பிரச்சினை எழப் போவதில்லை. 

இந்த விடயங்களைப் பற்றிய நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி கோரிய போது, நீதிமன்றம் மூன்று விதமாக அதற்கு பதிலளிக்கலாம். முதலாவதாக, ஜனாதிபதி குறிப்பிட்டு இருக்கும் காலத்துக்குள்ளேயே தமது கருத்தை நீதிமன்றம், ஜனாதிபதிக்கு அறிவிக்கலாம். அல்லது ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்ட ஒரு காலத்துக்;குள் ஜனாதிபதிக்கு தமது கருத்தை அறிவிக்கலாம். அல்லது முறையானது என நீதிமன்றம் கருதும் வகையில் விசாரணையொன்றை நடத்தி அதன் பின்னர் தமது கருத்தை அறிவிக்கவும் முடியும். 

எனவே, நீதிமன்றம் விரும்பினால் ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்ட காலததுக்குள் அல்லாது விசாரணையொன்றை நடத்தியும் தமது கருத்தை ஜனாதிபதிக்கு அறிவிக்கலாம். ஆனால், அவ்வாறு உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி தமது கருத்தை அறிவிக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

எனவே, மஹிந்த ராஜபக்ஷ மீதான துவேசத்தினாலன்றி, உண்மையிலேயே சட்டத்தின் ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சரத் என். சில்வா ஜனாதிபதி நான்கு ஆண்டுகளில் தேர்தலை நடத்துவதையும் அதில் போட்டியிடுவதையும் தடுக்க நினைத்தாரென்றால், தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தேர்தல் ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதே சிறந்த நடவடிக்கையாக இருந்திருக்கும். 

அவ்வாறு செய்வதனாலும் நீதிமன்றம் சில்வாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஆனால், அவ்வாறு செய்யாததனால் எதிர்ப்பின்றியே தாம் சட்டபூர்வமான வேட்பாளராக போட்டியிட ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என சில்வா தமது கருத்தை தெரிவித்ததன் பின்னர் பிரதான எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இரண்டு விதமாகவே அது சம்பந்தமாக நடந்து கொண்டன. இந்த சட்டப் பிரச்சினையின் பின்னால் போவதால் தமக்கு எந்தப் பயனையும் அடைய முடியாது என்று நினைத்தோ என்னவோ ஐ.தே.க. அதனை அவ்வளவாக பொருட்படுத்தாது தேர்தல் நடந்தால் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கொள்வது சம்பந்தமாக சிந்திக்க முற்பட்டது. 

குறிப்பாக ஊவா மாகாண சபைத் தேர்தலில் அக் கட்சி தமது பலத்தை அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அக் கட்சியின் தன்னம்பிக்கையும் அதிகரித்திருந்தது. அதனால் அக் கட்சி இந்த சட்டப் பிரச்சினையின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவது நேரத்தை வீணாக்குவதாக கருதியது போலும். 

ஆனால், ஐ.தே.க.வைப் போலவே இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக கருதும் ம.வி.மு., அச் சட்டப் பிரச்சினையின் பின்னால் வெகு தூரம் சென்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்தது. 

ம.வி.மு.வின் கருத்துப் படி, ஐ.தே.க.வும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் முதலாளித்துவ கட்சிகளே. இரண்டு கட்சிகளின் அரசியலும் ஊழல், மோசடி, வீண் விரயம் மற்றும் குற்றச் செயல்களை வளர்க்கும் அரசியலே. எனவே, ஜனாதிபதித் தேர்தலின் போது இக் கட்சிகளில் ஒரு கட்சியின் வேட்பாளருக்கு எதிராக மற்றைய கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதில் அர்த்தம் இல்லை என்றே ம.வி.மு. கருதுகிறது. 

ஆனால், புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஐ.தே.க. அளவுக்கு அதிகமாக அடிமையாக இருந்ததனால், அக் கட்சியை எந்த வகையிலாவது தோற்கடிக்க வேண்டும் என 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ம.வி.மு. நினைத்தது. அது தனிச் சிறப்பானதோர் நிலைமை என்பதால் ம.வி.மு., மஹிந்த ராஜபக்ஷவை அன்று ஆதரித்தது. 

அந்த அடிப்படையில் சிந்திப்பதாக இருந்தால், ம.வி.மு. இன்றைய நிலைமையையும் தனிச் சிறப்பான நிலைமையாக கருதலாம் என வாதிடலாம். இரு பிரதான கட்சிகளும் ஊழல் மலிந்த கட்சிகளாக இருந்த போதிலும் ஐ.ம.சு.கூ.வின் ஜனாதிபதி வேட்பாளர் ம.வி.மு.வின் கருத்துப் படி சட்டவிரோதமான வேட்பாளராக இருக்கிறார். ஐ.தே.க. வின் வேட்பாளரோ அல்லது ஐ.தே.க.வின் ஆதரவைப் பெறும் வேட்பாளரோ குறைந்த பட்சம் சட்டவிரோதமான வேட்பாளராக இல்லை. 

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் போது, புலிகளுக்கு எதிரான போரில் அரச படைகள் வெற்றி பெற்றிருந்தன. அரச படைகளின் வெற்றியை வரவேற்ற போதிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவையே ம.வி.மு. அன்று ஆதரித்தது. எனவே இப்போதும் வேண்டும் என்றால் ம.வி.மு. ராஜபக்ஷவை எதிர்ப்பதை நியாயப்படுத்த முடியும்.

சட்டத் துறையில் தமது போராட்டம் தோல்வியுற்று இருப்பதனால் ம.வி.மு. உட்பட எதிர்க் கட்சிகள் வேண்டும் என்றால் இப்போது ஓரணியாக திரண்டு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள முடியும். அதற்காக அவர்களுக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதென்ற பொது சுலோகமும் கிடைத்திருக்கிறது. 

இந்த சுலோகத்தை அரசாங்கத்தில் உள்ள சிலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அதற்காக அரசாங்கத்தை எதிர்க்க அவர்களில் பலர் தயாராக இல்லை. ஆனால், ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரலியே ரத்தன தேரர் உட்பட சிலர் இந்த விடயத்தில் கடுமையாக இருக்கிறார்கள். 

சகல எதிர்க் கட்சிகளும் ஒரணியாக நின்று போட்டியிட்டால் ஐ.ம.சு.கூ க்கு அது கடும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எதிர்க் கட்சிகள் மத்தியிலும் அக் கட்சிகளில் உள்ள சில முக்கியஸ்தர்களிடையிலும் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆளும் கட்சியாக வந்து அதில் இரண்டாம் வரிசையில் இருந்தாலும் அது எதிர்க்கட்சியில் எந்தப் பதவியை வகிப்பதையும் விட மேலானது என்பதை அவர்களில் பலர் விளங்கிக் கொள்ள வில்லை. 

இதன் காரணமாக கடைசி நேரம் வரை அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை தேடிக் கொள்வார்களா என்ற சந்தேகம் பலமாக எழுகிறது. சிறுபான்மை மக்களை பொறுத்தவரை இது மிகவும் மோசமான நிலைமையாகும். ஏனெனில், சிறுபான்மை மக்களுக்கும் ஐ.ம.சு.கூ. அரசாங்கத்துக்கும் இடையில் தற்போது சுமுக உறவு இல்லை.     

No comments:

Post a Comment