ஆனால், அந்த பணிப்புரையோடு ஐரோப்பாவில் புலிகள் மீதான தடை நீக்கப்படவில்லை. இந்த நீதிமன்ற பணிப்புரை விதிக்கப்பட்டு மூன்று மாதங்களில் அப்பணிப்புரை அமுலுக்கு வருவதே அதற்குக் காரணமாகும்.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் விரும்பினால் இரண்டு மாதங்களுக்குள் புலிகள் அமைப்புக்கு எதிராக முறைப் படி புதிய தடைகளை விதிக்கலாம் என்றும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறியிருக்கிறது.
எனினும் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும் விடயத்தில், இத் தீர்ப்பு எவ்வித மதிப்பீட்டையும் மேற்கொள்ளவில்லையென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதாவது புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பா இல்லையா என்ற விடயத்தை நீதிமன்றம் கவனத்திற்கொள்ளவில்லை. புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதி அவ் அமைப்பை ஐரோப்பாவில் தடை செய்யும் போது ஐரோப்பிய ஒன்றியம் சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றே நீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் கூறியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி தாமாக விசாரணை செய்யாது ஊடகங்கள் மற்றும் இணையத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டே புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துள்ளது என்றும் இந்தியா, புலிகளை தடை செய்யும் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு போதிய சட்டப் பாதுகாப்பு வழங்கியிருக்கிறதா என்பதை பார்க்காது ஐரோப்பிய ஒன்றியம் இந்தியத் தடையை பின் பற்றியுள்ளது என்றும் நீதிமன்றம் தமது தீர்ப்புக்கான காரணங்களை விளக்கியிருக்கிறது.
புலிகளுக்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இரண்டு மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கும் நீதிமன்றம், அவ்வாறு எதிர்க் காலத்தில் தடைகள் விதிக்கப்படலாம் என்பதனால் ஐரோப்பாவில் புலிகளின் சொத்துக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தற்காலிகமாக தொடர்ந்தும் அமுலில இருக்கும் என்றும் கூறியுள்ளது.
தாம், இலங்கை அரசாங்கத்துடன் ஆயுதப் போரில் ஈடுபட்டு இருந்ததனால், போர் தொடர்பான சட்ட திட்டங்களின் பிரகாரமே தமது அமைப்பு விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே அல்லாமல் பயங்கரவாதம் தொடர்பான சட்ட திட்டங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பது தவறு என்று புலிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதம் தொடர்பான சட்ட திட்டங்கள் ஆயுதப் போராட்டங்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பானது, புலிகள் பெற்ற மாபெரும் வெற்றி என்பது உண்மையாக இருந்த போதிலும் அதை நிரந்தர வெற்றியாக கருத முடியாது என்பதையே இது காட்டுகிறது.
ஒரு வகையில் இந்தத் தீர்ப்பைப் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். முறையாக சட்ட விதிகளைப் பின்பற்றாமல் ஐரோப்பிய ஒன்றிம் புலிகளை தடை செய்துள்ளது என்று கூறியே, நீதிமன்றம் அத் தடையை நீக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.
சட்டத்தின் ஆதிக்கத்தை மதிக்க வேண்டும் என்று ஏனைய நாடுகளுக்கு போதித்து வரும் ஐரோப்பிய ஒன்றியமே சட்டத்தை முறையாக பின்பற்றவில்லை என ஐரோப்பிய நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது. இது வெட்கப்பட வேண்டிய விடயம் இல்லையா?
ஜனநாயக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் சட்டத்தின் ஆதிக்கத்தை ஏற்று நடக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை உட்பட பல நாடுகளை பல்வேறு விதமாக தண்டித்தும் உள்ளது. இதே குற்றச்சாட்டின் பேரிலேயே இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்காக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் 2010ஆம் ஆண்டு இரத்துச் செய்தது.
அந்த ஐரோப்பிய ஒன்றியமே சட்டத்தை முறைப்படி பின்பற்றவில்லை என்று ஐரோப்பிய நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், தமக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தளவு நியாயமானவை என இலங்கை உட்பட அந்த நாடுகள் இப்போது கேள்வி எழுப்பலாம்.
புலிகளை தடை செய்யும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது என்பது தெளிவான விடயமாகும். ஊடகங்கின் வந்த செய்திகளால் தான் 2006ஆம் ஆண்டு புலிகளை தடை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதியிருக்க முடியாது. அச் செய்திகள் ஓரளவுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இலங்கையிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள், இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி தத்தம் நாடுகளுக்கு அனுப்பிய அறிக்கைகளும் இலங்கை அரசாங்கத்தின் நெருக்குதலுமே இத் தடைக்கு முக்கிய காரணமாகின.
எனவே, புலிகளை தடைசெய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அப்போது கருதியிருந்தால் தமது தூதுவர்கள் அனுப்பிய அறிக்கைகளையே அதற்காக பாவித்து இருக்கலாம். அக் காலத்தில் புலிகளின் பயங்கரவாதப் போக்கை காண தூதுவர்கள் போர் களத்துக்குச் செல்ல வேண்டியிருக்கவில்லை. கொழும்பிலும் அதனை சுற்றியும் புலிகள் பஸ்களிலும் ரயில்களிலும் உல்லாசப் பிரயாண ஹோட்டல்களிலும் வங்கிகளிலும் சாதாரண மக்களை படுகொலை செய்தனர். அவற்றை பகிரங்கமாக நியாயப்படுத்தியும் வந்தனர்.
2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21, 22 ஆகிய திகதிகளில், புலிகளுக்கும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்;கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், புலிகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க பல உலக நாடுகள் தள்ளப்பட்டன. அதுவும் புலிகளை அம்பலப்படுத்தியது.
போர் நிறுத்த உடன்படிக்கைக்கும் அதன் கீழான சமாதானத் திட்டத்துக்;கும் பல நாடுகள் நேரடியாகவே தமது பங்களிப்பை வழங்கின. நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கையை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றன. சமாதானத் திட்டத்தின் கீழ் போர் இடம் பெற்ற பகுதிகளை புனரமைக்கவும் அபிவிருத்தி செய்யவும் உதவி வழங்குவது தொடர்பாக 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது.
அதற்கு முன்னரே வடக்கு, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, புலிகளினதும் அரசாங்கத்தினதும் இணக்கப்பாட்டில் நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதனை முகாமைப்படுத்தும் பொறுப்பு உலக வங்கியிடம் வழங்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் சமாதானத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பாக ஜப்பானின்; டோக்கியோ நகரில் மற்றொரு மாநாடு கூட்டப்பட்டதோடு நான்கு வருடங்களில் இலங்கைக்கு 45,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதென அதில் தீர்மானிக்கப்பட்டது.
51 நாடுகளும் 22 சர்வதேச நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டு நீண்ட கால கூட்டாகக் கருதப்பட்டு அதற்கு கூட்டுத் தலைமை ஒன்றும் நியமிக்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் அக் கூட்டுத் தலைமையில் அங்கம் வகித்தன.
இவ்வாறு உலக நாடுகள், இலங்கையின் சமாதானத் திட்டம் விடயத்தில் தமது பங்களிப்பையும் பணத்தையும் வழங்கியிருந்த நிலையில், புலிகளின் நடவடிக்கைகள் அந் நாடுகளால் மிக சமீபமாகவும் கூர்ந்தும் கவனிக்கப்பட்டு வந்தன.
புலிகள் இதனை பொருட்படுத்தாது தொடர்ந்தும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறினர். அரச ஒற்றர்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வந்தனர். போர் நிறுத்த கண்காணிப்பாளர்களுக்கு அறிவித்துவிட்டு ஆயுதமின்றி வட பகுதிக்குச் சென்ற 700 படை வீரர்களைக் கொண்ட கப்பல் ஒன்றைத் தாக்க முயற்சித்தனர்.
சில சந்தர்ப்பங்களில், போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களே கடத்தப்பட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக, படகொன்றில் இருந்த போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் கடலில் குதிக்க வேண்டியிருந்தது.
இது போன்ற சமபவங்களின் விளைவாகவே 2006ஆம் ஆண்டு கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளை தடை செய்தன. அதற்கு முன்னர் ராஜிவ் காந்தி கொலையை அடுத்து 1992ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கை மத்திய வங்கி மீதான தாக்குதலை அடுத்து 1996ஆம் ஆண்டு அமெரிக்காவும் புலிகளை தடை செய்திருந்தன.
தமது தூதரகங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கூறப்பட்டவற்றைப் போன்ற சமபவங்களைப் பற்றி விசாரணை செய்து அவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் புலிகளை தடை செய்யாது, வெறுமனே ஊடகங்களிலும் விக்கிபீடியா போன்ற இணையத் தளங்களிலும் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு புலிகளை தடை செய்தமையானது பொறுப்பற்ற செயல் என்பது தெளிவாகிறது.
இத் தடைக்கு எதிராக புலிகளின் ஐரோப்பிய கிளை 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதியே வழக்குத் தாக்கல் செய்தது. அவ் அமைப்பின் சார்பில் அம்ஸ்டர்டாமைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான விக்டர் கொப் என்பவரே வழக்குக்கான மனுவை தாக்கல் செய்திருந்தார். ஈரான், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்டுள்ள பி.கே.கே. என்ற கெரில்லா அமைப்பு ஐரோப்பாவில் தடை செய்யப்பட் போதும் இந்த விக்டர் கொப்பே அதற்கு எதிராக வழக்காடி அத் தடையை நீக்கிக் கொடுத்தார்.
புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்துக்;கு வழங்கியிருக்கும் ஆணையைப் பற்றி இலங்கையின் அரச தலைவர்கள் இரண்டு தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்கியிருக்கிறது என்பது அவற்றில் ஒரு தவறான கருத்தாகும்;. தடையை நீக்க வேண்டும் என்று ஐரேப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்துக்;கு உத்தரவு பிறப்பித்துள்ளதேயல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் ஐரேப்பாவுக்;குச் சென்று புலம்பெயர் தமிழர்களை சந்தித்து இரண்டு வாரங்களில் இத் தடை நீக்கம் இடம் பெற்றுள்ளது என்றும் அரச தலைவர்கள் கூறுகிறார்கள். அதாவது விக்கிரமசிங்கவின் தூண்டுதலாலேயே தடை நீக்கம் இடம் பெற்றுள்ளது என்றே அவர்கள் கூறுகிறார்கள். இதுவும் துவேசம் கலந்த தவறான கருத்தாகும்.
விக்கிரமசிங்க, அண்மையில் ஐரோப்பாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக அது 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்ததொன்றாகும். விக்கிரமசிங்க இம் முறை தமது விஜயத்தின் போது புலம் பெயர் தமிழர்களை சந்தித்தாரா என்பது தெளிவில்லை. சந்தித்தாலும் அவ்வாறான சந்திப்பொன்றால் இந்த வழக்கில் எந்த வித மாற்றத்தையும் செய்ய முடியாது. அது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்;குட்பட்ட விடயமாகும்.
அவ்வாறு மாற்றம் செய்ய முடியுமாக இருந்தாலும் அந்த மாற்றத்தை கொண்டு வர புலம்பெயர் தமிழர்கள் விக்கிரமசிங்க வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஏற்கெனவே வழக்கொன்றையே தாக்கல் செய்திருந்த அவர்கள் தாமாகவே அதனை செய்து கொண்டு இருப்பர்கள்.
முக்கியமானதோர் விடயம் என்னவென்றால் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயத்துக்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே இந்த வழக்கின் தலைவிதி தீர்மானிக்கப்பட்டு இருந்தது என்பதே. தடையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி தீர்ப்பு வழங்கிய போதிலும் பிழையான அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதியே கூறியிருந்தது.
ஐரோப்பாவில், புலித் தடைக்காக விக்கிபீடியா தகவல்களை பாவித்தமை பிழையென்றும் இந்திய புலித் தடையை பின்பற்றியமை பிழையென்றும் அன்று தான் நீதிமன்றம் கூறியிருந்தது. அந்த அடிப்படையிலேயே ஒக்டோபர் 16ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது. எனவே விக்கிரமசிங்க, ஐரோப்பாவுக்;கு விஜயம் செய்யும் போது தீர்ப்பை வெளியிடுவது மட்டுமே மீதமாக இருந்தது.
புலம்பெயர் தமிழர்கள் நடத்தி வரும் இணையத்தளங்களில் வரும் செய்திகளின் பிரகாரம் தடைக்கான காரணங்களை ஏற்க முடியாது என நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் கூறும் போது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நீதிமன்றத்தில் பார்வையாளர்களாக இருந்துள்ளனர்.
எனவே, ஐரோப்பாவில் புலித் தடை நீக்கப்படப் போகிறது என்பதை அவர்கள் அன்றே அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அரசாங்கத்துக்;கு அதனை அறிவித்ததாகவோ அல்லது அரசாங்கம் அதன் படி எதேனும் நடவடிக்கை எடுத்ததாகவோ தகவல்கள் இல்லை.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலின் போது புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலுள்ள தமது உறவினர்களை விக்கிரமசிங்கவுக்;கு வாக்களிக்க தூண்டும் வகையிலேயே தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச விசித்திரமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார்.
புலித் தடை இருந்தால் புலம்பெயர் தமிழர்கள் தமது உறவினர்களை தூண்ட முடியாதா என்ற கேள்வி இங்கே எழுகிறது. புலித் தடை நீக்கத்தை எதிர்க்க வேண்டியவர்கள் அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிப்பதையே இது காட்டுகிறது. எனவே அரச தலைவர்கள் தடை நீக்கத்தை விரும்புகிறார்கள் என்றும் வாதிடலாம்.
தடை நீக்க உத்தரவானது அரசியல் முடிவு அல்ல, நீதிமன்றத் தீர்ப்பே என்று, ஐரோப்பிய ஒன்றியம் தீர்ப்பை அடுத்து வெளியிட்டு இருந்த அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது. தீர்ப்பை தீவிரமாக ஆராய்ந்து பரிகார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த முயற்சியில் தமக்கு ஏதாவது பங்களிப்பை வழங்க முடியுமா என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு, தடை நீக்கத்தை பாவித்து வரப் போகும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் லாபமடைவதற்காகவே தடை நீக்கத்தின் பொறுப்பை அரசாங்கம் விக்கிரமசிங்கவின் தலையில் போட முயற்சிக்கிறது போலும். சிலவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது புதிய தடைகளை விதிப்பதை அரசாங்கம் விரும்பாமலும் இருக்கலாம்.
நன்றி - தமிழ்மிரர்
No comments:
Post a Comment