ரஜினி- இந்த மூன்றெழுத்து தமிழகத்தில் அவ்வப்போது சுனாமி போல் மக்கள் மனதில் எழும். பிறகு அது அப்படியே எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அமுங்கிப் போகும். ஒவ்வொரு சினிமா படம் எடுக்கும் போதும் “அரசியலுக்கு வருகிறார் ரஜினி” என்ற கோஷம் கிளம்பும். பிறகு அப்படியே சப்தம் குறைந்து விடும். இதுதான் கடந்த 18 வருடங்களாக தமிழகம் கண்ட காட்சி.
“சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்” என்ற சினிமா பாடல் வரிகள் நிஜமும்கூடத்தான். சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு ரஜினியின் தாக்கம் விழாதவர்கள் இல்லை தமிழகத்தில் என்று சொல்லலாம். அதை வைத்துத்தான் அவர் அரசியலுக்கு வருகிறரார் என்ற முழக்கம் திடீர் திடீரென்று கிளம்புகிறது. 1996 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினிக்கும்- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. “பாட்ஷா” பட வெளியீட்டு விழாவில் இந்த மோதல் பற்றிக் கொண்டது. சினிமா இயக்குனர் மணிரத்தினம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து மேடையில் “வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் வந்து விட்டது” என்று ரஜினி பேச தமிழகத்தில் அன்றைய தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் ரஜினி காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் முயற்சி செய்தார். காங்கிரஸை விட்டு வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் அப்போது கோரிக்கை விடுத்தார். ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அதற்கு பதில் தி.மு.க.- தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தார். அந்தக் கூட்டணியின் “மாபெரும்” வெற்றிக்கு ரஜினியின் ஆதரவு முக்கியமானது என்று பேசப்பட்டது. அப்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என்ற நிலை இருந்தது. ஏனென்றால் ராஜீவ் படுகொலை குற்றச்சாட்டு, வைகோ வெளியேறியது போன்றவற்றால் தி.மு.க. பெயர் கெட்டு நின்ற நேரம். அதே போல் “ஊழல் குற்றச்சாட்டுகள்” பிரச்சாரம், வளர்ப்பு மகன் திருமணம் போன்ற விஷயங்களால் அ.தி.மு.க.விற்கும் இமேஜ் கெட்டுப் போயிருந்த நேரம். ஆனால் அந்த வாய்ப்பை ரஜினி பயன்படுத்தவில்லை.
அதன் பிறகு ரஜினிக்கும்- டாக்டர் ராமதாஸுக்கும் மோதல் வெடித்தது. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விஷயத்தில் சந்தன வீரப்பன் பற்றி குறை கூறி கருத்துச் சொன்னார் ரஜினி. அதனால் அவருக்கும் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தகராறு முற்றியது. இதன் விளைவாக “பாபா” படம் வெளியிடுவது ரஜினிக்கு பெரும் சிக்கலானது. வட மாவட்டங்களில் சில தியேட்டர்களில் சினிமா ரீலை தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். இதனால் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டார் ரஜினி. ஆனால் அந்த நேரம் மெகா கூட்டணியில் ராமதாஸ் இருந்தார். அதனால் ரஜினியின் கட்டளைப்படி அவரை தோற்கடிக்கமுடியவில்லை. அதனால் ரஜினியின் மவுசு இவ்வளவுதானா என்ற கருத்த பரவியது.
அரசியல் பிரவேசம் செய்யுங்கள் என்று ரஜினிக்கு வந்த கோரிக்கை புதிதல்ல. பிரதமராக இருந்த நரசிம்மராவ் கோரிக்கை விடுத்துள்ளார். பிறகு பிரதமராக இருந்த வாஜ்பாய் பக்கம் நின்று ரஜினி குரல் கொடுத்துள்ளார். சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அப்போதைய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினியின் வீட்டிற்கே நேராகச் சென்று பேசினார். இப்போது பா.ஜ.க. வின் சார்பிலும், திரையுலகினர் சார்பிலும் “அரசியலுக்கு வாருங்கள்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “பாட்ஷா” பட விழாவில் தொடங்கிய ரஜினி அரசியல் இப்போது “லிங்கா” பட விழாவில் வந்து நிற்கிறது.
ரஜினி இரு வேடங்களில் “லிங்காவில்” நடிக்கிறார். அப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்தியம் தியேட்டரில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய ரஜினி, “நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலைதான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறது. நாளைக்கும் சூழ்நிலைதான் என்னை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறதோ. அரசியல் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். அது எவ்வளவு ஆழமானது, ஆபத்தானது என்றும் எனக்குத் தெரியும். யார் தோள் மீதெல்லாம் நடந்து உங்களையெல்லாம் மிதித்து அங்கே போக வேண்டும். அப்படி மிதித்துப் போனால் நாம் நினைத்ததை செய்ய முடியுமா? என்ற சந்தேகம் இருக்கிறது” என்றவர் “அது ஒரு அலை மாதிரி எழ வேண்டும். அரசியலை நினைத்து தயங்குகிறேன். பயப்படவில்லை. எதுவானாலும் கடவுள் தீர்மானிப்பார்.” என்று பூடகமாகப் பேசியிருக்கிறரா். இந்தப் பேச்சு ரஜினிக்கு அரசியலில் குதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை வெளிக்காட்டுகிறது. ஆனால் அது எப்போது? எந்தக் கட்சி வடிவில்? என்பதுதான் இன்னும் முடிவு செய்ய வேண்டியதிருக்கிறது.
ஏற்கனவே பா.ஜ.க.விற்கு வர வேண்டும் என்று ரஜினிக்கு தூது விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய மாநில தலைவராக வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ, “ரஜினியின் ரசிகர்கள் அனைத்துக் கட்சியிலும் இருக்கிறார்கள். அவர் பா.ஜ.க.வில் சேரக்கூடாது. அரசியலுக்கும் வரக்கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் “லிங்கா” பட விழாவில் ரஜினி பேசியிருக்கும் இந்த பரபரப்பான அரசியல் கருத்து முதலில் “லிங்கா” படம் வெற்றிக்கு கை கொடுக்கும். ஒவ்வொரு ரஜினி படம் வெளியிடப் படும் போதும் இப்படித்தான் “ரஜினி அரசியலுக்கு வருகிறார்” என்ற கருத்து தீவிரமாக பரப்பப்படும். படம் வெற்றிப்படமாக மாறியவுடன் அது நின்று போகும். ஆனால் இந்த முறை அப்படியிருப்பது போல் தெரியவில்லை. ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறது என்ற எண்ணம் இந்த பேச்சில் எதிரொலிக்கிறது.
1996ல் ஏற்பட்டது போன்றதொரு சூழல் தமிழகத்தில் இப்போது உருவாகி வருகிறது. ஒரு புறம் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதால் அ.தி.மு.க. “மாலுமி” இல்லாத கப்பல் போல் நிற்கிறது. இன்னொரு பக்கம் “2ஜி அலைக்கற்றை வழக்கில்” என்ன தீர்ப்பு வரும் என்ற அச்சத்தில் தி.மு.க. இருக்கிறது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களிடம் “ஊழல் கட்சிகள்” என்ற முத்திரை மீண்டும் அழுத்தமாகப் பதியும் காரணிகளாக சொத்துக் குவிப்பு வழக்கும், 2-ஜி அலைக்கற்றை வழக்கும் தெரிகிறது. இதைப் பயன்படுத்தி “திராவிடக் கட்சிகளுக்கு மாற்று” என்ற கோஷத்தை இந்த முறை பா.ஜ.க. கையிலெடுக்கிறது. அதற்கு ரஜினியை பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரஜினியின் “லிங்கா” பேச்சு, பா.ஜ.க.விற்கு நம்பிக்கையூட்டும் பேச்சு.
தமிழகத்தில் தேசிய கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்கின்றன. 1996ல் ரஜினியைப் பயன்படுத்தி அதை சாதிக்க நினைத்தது காங்கிரஸ் கட்சி அது முடியாமல் போனது. அதற்கும் முன்பு ராஜீவ் காந்தியைப் பயன்படுத்தி 1989லேயே இதைச் சாதிக்க நினைத்தது காங்கிரஸ். அது இயலவில்லை. பிறகு இப்போது பா.ஜ.க. அதைச் சாதிக்க எண்ணுகிறது. அதற்கு “ரஜினி” என்ற மூன்றெழுத்துதான் மந்திர சக்தி என்று கருதுகிறது. ரஜினி முதல்வர் வேட்பாளர் என்று பிரதமர் நரேந்திரமோடி முன்னிறுத்தினால், ரஜினியும் அதற்கு சம்மதித்து அரசியல் களத்தில் குதித்தால் தமிழக அரசியல் வித்தியாசமான திசையில் பயணிக்கும். அதற்கான முன்னோட்டம்தான் ரஜினியின் “லிங்கா” பேச்சு!
எம்.காசிநாதன்
No comments:
Post a Comment