இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Wednesday, November 12, 2014

நிறைவேற்று ஜனாதிபதி முறையை எப்படி நீக்குவது?

னாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது  வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பெரும்பாலும் கரு ஜயசூரியவே போட்டியிடுவார் என்று ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன. இப்போது கரு
ஜயசூரியவின் பெயர் தான் ஊடகங்களில் அடிபடுகின்றது. நாட்கள் செல்லச்செல்ல மாற்றம் ஏற்படலாம்.
பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கரு ஜயசூரிய  நீண்டகால முயற்சியில் ஈடுபட்டவர். பௌத்த மதகுருமார் மூலம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததே இவர் மேற்கொண்ட முயற்சியில் பிரதானமானது.
ஐக்கிய பிக்குகள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் அமைப்பு கரு ஜயசூரியவைப் பொது வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்திவந்தன. மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் கரு சந்தித்து ஆதரவு கோரியிருக்கின்றார்.

சிங்கள, பௌத்த தேசியவாதத்தின் பக்கம் சாய்வு நிலையைக் கொண்டவரான கரு ஜயசூரிவை இந்தப் பின்னணியில் நோக்கும்போது இவரும் பௌத்த மதகுருமாருக்கு வளைந்து கொடுக்கும் ஜனாதிபதியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகின்றது.
ஒரு கட்சியிலிருந்து பொது வேட்பாளராக  முன்வருபவர் அக்கட்சியின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவராக இருப்பதே சிறப்பு. கரு ஜயசூரியவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகோபித்த ஆதரவு இல்லை.

தலைமை மட்டத்தில் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாகவே கருவை எதிர்க்கிறார். ரணிலின் வலது கரமான மலிக் சமரவிக்கிரம முன்னாள்  ஜனாதிபதி சந்திரிகாவே போட்டியிட வேண்டும் என்று இப்போதும் சொல்கிறார். பாராளுமன்றத் தேர்தலில்  கம்பஹா மாவட்டத்தில் கட்சி சார்பில் ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெறவில்லை என்பதும் கருவுக்கு எதிராகச் சொல்லப்படுகின்ற ஒரு காரணம். தொலைக்காட்சி நடிகை பபாவிலும் (BABA) பார்க்கக் குறைவான விருப்பு வாக்குகளையே அவர்  பெற்றார்.

கடைசி நேரத்தில் ரணில் என்ன செய்வார் என்று எவரும் எதிர்வுகூற முடியாது. நம்பக்கூடிய நபரல்ல என்ற அபிப்பிராயம் அவரைப் பற்றி அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது. கட்சி விசுவாசம் என்னவாக இருந்தாலும் கரு ஜயசூரிய ஜனாதிபதி ஆகுவதைத் தனிப்பட்ட முறையில் ரணில் விரும்பப்போவதில்லை.

சந்திரிகா குமாரதுங்க போட்டியிட்ட முதலாவது  ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராகச் சந்திரிகாவுக்கு வாக்களிக்கும்படி ரணில் சொன்னதாக நந்தா மத்தியூ ஒரு  சந்தர்ப்பத்தில் கூறினார்.

யார் பொது வேட்பாளர் என்பதிலும் பார்க்க அவர் என்ன செய்யப்போகின்றார் என்பதே பிரதானமானது. பொது வேட்பாளரை நிறுத்துவதில் அக்கறை காட்டும் எதிரணிக் கட்சிகள் பொது வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு நேரம் செலவிடுவதாகத் தெரியவில்லை.

மாதுலுவாவே சோபித தேரர் ஒரு வேலைத்திட்டத்தை வெளியிடப்போவதாகக் கதை அடிபடுகின்றது. இது அவருடைய வேலைத்திட்டம். பொது வேலைத்திட்டம் என்பது சம்பந்தப்பட்டவர்கள் கூடி விவாதித்துத் தயாரிக்கும் ஆவணம்.
பொது வேட்பாளரைத்  தீர்மானிக்கும்  விடயத்தில் மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடியவர் யார் என்ற கேள்வி தான் மேலோங்கி நிற்கின்றதேயொழிய நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடியவர் யார் என்ற கேள்வி எழுவதாகக் காணோம். பொது வேட்பாளர் இரண்டு விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிரணி வட்டாரங்களில் சொல்கின்றார்கள்.  
ஜனநாயகத்தை மீட்டெடுப்பது ஒருவிடயம். நிறைவேற்று ஜனாதிபதி   முறையை நீக்குவது மற்றைய விடயம். மகிந்தவின் ஆட்சியில் ஜனநாயகம் செத்துவிட்டது எ ன்று சொல்வதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலும் ஜனநாயகம் உயிர்வாழவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது.
கலவான இடைத் தேர்தலில் சரத் முத்தெட்டுவேகம வெற்றியீட்டியதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின்  சகல பிரிவுகளும் நடந்துகொண்ட முறையும் அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்கு அரசாங்க அனுசரணையுடன் கல்லெறிந்ததும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டுகள்.

ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் இனப்பிரச்சினையின் தீர்வு அடங்கவில்லையா என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகின்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஹெல உறுமயவும் ஜே.வி.பி.யும் ரணிலின் ஆட்சிமாற்ற அமைப்பில்  அங்கம் வகிக்கும் பேரினவாதக் கட்சிகளும் உடன்பாட்டுக்கு வருவார்களா?  இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கிய நகர்வு இல்லாமலும் ஒரு ஜனநாயகமா?
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை
நீக்க முடியாது.

அது அரசியலமைப்புத்  திருத்தம்  சம்பந்தப்பட்ட விடயமென்பதால் பாராளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. எதிரணியின் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்காது. பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்குப்போனாலும்  மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும்  என்று எதிர்பார்க்க முடியாது. எப்படி அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவார்?

No comments:

Post a Comment