
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வங்கி,
இத்தேர்தலில் மிகவும் முக்கியமானதொரு விடயமாகக் கருதப்படுகிறது.
சுமார் நான்கு இலட்சம் தமிழர்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேச முனைவதாக, அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அமைச்சர் விமல் வீரவன்சவின் காழ்ப்புணர்வை காட்டுவதாக மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை, கொழும்பின் பிரதான அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன என்பதையே முக்கியமாக சுட்டி நிற்கிறது.
விரும்பியோ, விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலில், சக்திவாய்ந்ததொரு தரப்பாக பார்க்கப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
கடந்த வருடம் நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 353,595 வாக்குகளை பெற்றிருந்தது. அதுபோலவே, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு 193,827 வாக்குகள் கிடைத்திருந்தன. இதன் மூலம், வடக்கிலும் கிழக்கிலும் அண்மைய தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 547,422 வாக்குகளை பெற்றிருக்கிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில், சில ஆயிரம் வாக்குகளைக் கொண்ட கட்சிகளையும் அமைப்புகளையும் தம்பக்கம் இழுத்துவிட்டு, பெரிதாக தம்பட்டம் அடிக்கும் பிரதான அரசியல் கட்சிகளுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்தரை இலட்சம் வாக்குகளும் அவ்வளவு சாதாரணமானதொன்றாக இருக்கமுடியாது.
மாகாணசபைத் தேர்தல்களில் கிட்டத்தட்ட ஐந்தரை இலட்சம் வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுவாக அக்கறைகொள்வது குறைவு. இதனை கருத்திற்கொண்டு பார்த்தால், சுமார் நான்கு முதல் நான்கரை இலட்சம் வாக்குகளை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கப்போவது உறுதி.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அரச தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். அதற்கு தடையேதும் உள்ளதா என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தை கேட்டிருந்தார். இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் கருத்து அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டதால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சிகளின் தரப்பில் யார் போட்டியிடப்போவது என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் நெருங்கி வந்துவிட்டன.
ஊவா மாகாணசபைத் தேர்தலை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என்றதொரு நிலை உருவானது. ஆனால், ஐ.தே.க. வுக்குள், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எழுப்பிய புயலும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட சில கட்சிகளும் அமைப்புகளும் ரணிலை ஆதரிப்பதற்கு மறுத்தமையும் கடைசி நேரத்தில் அவர் ஒதுங்கிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்திவிட்டது.
அதுபோல, போட்டியிலிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட உத்தேச பொதுவேட்பாளர்களும் இப்போது பின்னரங்குக்கு வந்துள்ளனர். இந்தக் கட்டத்தில், ஐ.தே.க. வின் பிரதித் தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரியவே பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பிலும் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், கடுமையான போட்டி இருக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இப்போது, அரசாங்கத்துக்கு ஆதரவான எந்த அலையும் கிடையாது.
அதேவேளை, எதிர்க்கட்சிகளின் தரப்பில் மிகப் பெரியளவில் கவர்ச்சியான வேட்பாளர் எவரும் நிறுத்தப்படும் வாய்ப்பும் இல்லை.
எனினும், அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி அலையும் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடுமையான போட்டியை கொடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கள மக்களின் ஆதரவு என்பது இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் இடையில், சம அளவில் பிரிந்துபோகும் சூழலை உருவாக்கியுள்ளது. இது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முக்கிய கட்டம் எனலாம்.
ஏனென்றால், இம்முறை 50 சதவீத வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறமுடியாது போகலாமென்ற கருத்து பலரிடமும் காணப்படுகிறது. 50 சதவீத வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறமுடியாமல் போனால், இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டிய கட்டாயம் உருவாகும். இத்தகைய நிலை இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை.
1982இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 52.91 சதவீத வாக்குகளையும் 1988இல் பிரேமதாச 50.43 சதவீத வாக்குகளையும் 1994இல் சந்திரிகா குமாரதுங்க முதல் தடவை 62.28 சதவீத வாக்குகளையும் 1999இல் இரண்டாவது தடவை 51.12 சதவீத வாக்குகளையும் 2005இல் மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவை 50.29 சதவீத வாக்குகளையும் 2010இல் இரண்டாவது தடவை 57.88 சதவீத வாக்குகளையும் பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தனர்.
எனவே, 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது, இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் வெற்றியைத் தீர்மானிப்பது என்பன இம்முறை முக்கியமான தேர்தல் வியூகங்களாக இருக்கும்.
சிங்கள வாக்காளர்களின் வாக்குகள் சம அளவிலோ, சற்று ஏறக்குறைவாகவோ இரு வேட்பாளர்களுக்கும் இடையில் பிரிந்து போகக்கூடியதொரு சூழலில், சிறுபான்மையினரின் வாக்குகளே பெறுமதிமிக்கவையாக இருக்கப்போகின்றன. அதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி எல்லாத் தரப்பாலுமே குறி வைக்கப்படுமொன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் வரையான தமிழ் மக்களின் வாக்குகளை திரட்டும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பேரம் பேசுவதில் முக்கிய பங்கை ஆற்றுமென்று எதிர்பார்க்கலாம்.
ஏற்கெனவே ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்றும் அதன் மூலம் நல்லதொரு செய்தியை வழங்கி, புதியதொரு ஆரம்பத்துக்கு அடித்தளம் இடலாமென்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
அதுபோலவே, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டுமென்று கூறியிருக்கிறார். இவை இரண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடயத்தில், இரண்டு தரப்புமே கொண்டுள்ள அக்கறையை காட்டுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் பதிலிகள் என்றும் புலிகளின் வழிகாட்டலில் செயற்படும் கட்சியென்றும் விமர்சித்த அரசாங்கம், இப்போது தேர்தல் வந்ததும் அதையெல்லாம் மறந்துவிட்டு கூட்டமைப்பிடம் ஆதரவு கேட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்ற வினா நீடித்துவருகிறது. கடந்த சில மாதங்களாக இது பற்றிய கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன. பல்வேறு ஊகங்களும் வெளியாகின்றன. ஆனால், அவசரப்பட்டு யாருக்கும் ஆதரவு அளிப்பதாக வாக்குறுதி கொடுக்க இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவில்லை.
ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பெறுமானத்தை உணர்ந்து, இதனை தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பதில் இருப்பதாகவே தெரிகிறது.
தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவேட்பாளருடன், பேரம் பேசி எழுத்து மூலமான உடன்பாடொன்றில் கையெழுத்திட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணியுள்ளதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், அரச தரப்பிலிருந்து விடுக்கப்படக்கூடிய அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதாசீனப்படுத்த தயாரில்லை.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுத்த அழைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த அழைப்பை திறந்த மனதுடன் பரிசீலிக்கத் தயாரென்று கூறியுள்ளார்.
அரச தரப்பு எத்தகைய இராஜதந்திரத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்ததோ, அதேபோன்ற இராஜதந்திரத்துடனேயே இரா.சம்பந்தனும் இதனை அணுக முற்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
அதேவேளை, தமக்கு இது பற்றி அதிகாரபூர்வமான முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதையும் அவ்வாறு அழைத்தால் அதைப் பரிசீலிக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஆழம் பார்க்கவே, ஊடகங்களின் மூலம் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார் என்று கருதவேண்டும். அதற்கேற்றவாறு எடுத்த எடுப்பிலேயே இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிடாமல், தந்திரமான முறையில் பதிலளித்துள்ளார் இரா.சம்பந்தன்.
ஆனால், அரச தரப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதென்பது மிகவும் கடினமானதொரு காரியமாகவே இருக்கும். ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ, தமிழ் மக்களினதா நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ அவரது அரசாங்கமோ இதுவரை செயற்பட்டிருக்கவில்லை. முன்னர் கொடுத்திருந்த வாக்குறுதிகளையும் காப்பாற்றியிருக்கவில்லை.
அதை விட வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களிடையில் நிலவும் அரச எதிர்ப்பு அலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் தீவிரக் கருத்துடையோரின் ஆதிக்கமும் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவொன்றை எடுப்பதற்கு கடுமையான சவாலை கொடுக்கும்.
அரச தரப்பின் கோரிக்கையை பரிசீலிக்கலாமென்ற இரா.சம்பந்தனின் கருத்து, அரச தரப்பை ஆதரிப்பதற்கு தயாரென்று அர்த்தமாகாது.
அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லையென்றும் கூறுவதுண்டு.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததை, அதுபோல ஒன்றாகத்தான் கருதவேண்டும். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடயத்தில் அத்தகைய அபூர்வமொன்று நிகழ்வதற்கு சாத்தியம் குறைவு.
அதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் துவேசத்துடன் அணுக்கக்கூடாது என்ற கருத்தையும் இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, இதுவரையில் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை அதற்கு ஆதரவு அளிப்பதுமில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர்களின் வாக்களிப்பு வீதம் மிகமிகக் குறைவாகவே இருந்திருக்கிறது.
கடந்த முறை எதிர்க்கட்சிகளால் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தபோதும், தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. போருக்கு அவர் தலைமை தாங்கியிருந்ததும், அப்போரின் இரத்தவாடை கூட அகலாத நிலையில், அந்தத் தேர்தல் நடத்ததும் அதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.
அதுபோன்றோ அல்லது தமக்குச் சார்பாக செயற்படாத ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்வதால் என்ன பயன் என்றோ, ஒதுங்கியிருக்காமல் செயற்பட வேண்டுமென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக தெரிகிறது. இத்தகைய கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தல் புறக்கணிப்பு முடிவையோ அல்லது ஒதுங்கியிருக்கும் முடிவையோ எடுக்குமென்று கருதுவதற்கில்லை. ஏதோவொரு வேட்பாளரை ஆதரித்து, அவர் மூலம் தீர்வொன்றை எட்டவே முயற்சிக்கும்.
ஆனால், அது எந்தளவுக்கு சாத்தியமாகும்? இந்த பேரம் பேசும் இராஜதந்திரக் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் இலக்கு எட்டப்படுமா என்பதை, கூட்டமைப்பு ஆதரிக்கப்போகும் வேட்பாளரின் வெற்றியின் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்படாது. அந்த வேட்பாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எட்டக்கூடிய உடன்பாட்டை நிறைவேற்றும் அர்ப்பணிப்பை கொண்டவராக இருத்தல்வேண்டும்.
கே.சஞ்சயன்
No comments:
Post a Comment