

இடத்தெரிவும் இட நெருக்கடியும்
வடமாகாண பண்பாட்டு பெருவிழா வவுனியாவில் நடத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்ட போதும், அதற்கான அரங்கு தெரிவு செய்யப்பட்டமையில் குறைபாடுகள் காணப்பட்டுள்ளன. ஒரு மாகாணத்திற்குரிய நிகழ்வாக இது அமைந்தமையால் பெருமளவான கலைஞர்கள், படைப்பாளிகள் 5 மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டனர். அவர்களை ஒன்றிணைக்க கூடியதான இடவசதி கொண்டதாக வவுனியா கலாசார மண்டபம் காணப்பட்ட போதும் இரு பாடசாலைகளின் மண்டபங்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன. இதனால் தமது நிகழ்வுகள் எங்கு நடைபெறும் என பல கலைஞர்கள் குழப்பமடைந்தனர். இதேவேளை நிகழ்வுக்கு வருகை தந்த மக்களுக்கு குறித்த இரு பாடசாலை மண்டபங்களும் போதியதாக காணப்படவில்லை. இதன் காரணமாக கொட்டி தீர்த்த மழைக்கு மத்தியில் பலர் இடப்பற்றாக்குறையால் நின்று கொண்டே நிகழ்வை பார்க்க வேண்டியிருந்தது.
முதலமைச்சரும் அதிகாரிகளும் புறக்கணிப்பு
வடமாகாண பண்பாட்டு விழாவினுடைய திகதி தீர்மானிக்கப்பட்ட போது வடக்கு முதலமைச்சரின் வருகையை உறுதிப்படுத்தி அவருக்காகவே கடந்த முதலாம், இரண்டாம் திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் மாகாணசபையின் முதலாவது பண்பாட்டு பெருவிழாவை புறக்கணித்திருந்தார். இதனால் முதலமைச்சரிடம் விருது வாங்கும் ஆவலுடன் வந்த பல கலைஞர்களும் படைப்பாளிகளும் ஏமாற்றமடைந்தனர். இது தவிர, வடமாகாண ஆளுநரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதே நிலைதான். வவுனியாவில் இடம்பெற்ற நிலையில் வவுனியா மாவட்ட அரச அதிபர், மாவட்டத்திற்குரிய பிரதேச செயலாளர்கள் என எவரும் கலந்து கொள்ளவில்லை. இவை தொடர்பில் பலரும் குறைபட்டுக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.
கலாசார பேரணியை குழப்பிய வாகனங்களும் வேடிக்கை பார்த்த பொலிஸாரும்
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஏ9 வீதியூடாக சென்று கந்தசாமி கோவில் வீதியை அடைந்து அங்கிருந்து இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி வரை கலாசார பேரணி நடைபெற்றது. கலாசாரத்தை பிரதி பலிக்கும் நடனங்கள், கோலாட்டங்கள், காவடிகள், மங்கள வாத்தியங்கள், ஊர்திப் பவனிகள், பண்டாரவன்னியனின் பதிவுகள் என பல விடயங்களை வெளிப்படுத்தி பேரணி இடம்பெற்றது. பேரணி இடம்பெற்ற போது வீதியால் சென்ற பலர் அதனை பார்த்து ரசித்ததுடன் தமது மொபைல் போன்களில் படமும் பிடித்து கொண்டனர். ஆனால் அவ் வீதிவழியாக வந்த வாகனங்கள் பேரணியை குழப்பும் வகையில் வீதிகளில் தொடர்ந்து பயணித்தன. இதனால் பேரணி வீதி ஓரமாகவே இரண்டு நிரைகளில் செல்ல வேண்டியிருந்தது. இதனை போக்குவரத்து பொலிஸார் அவதானித்த போதும் கலாசார பேரணிக்கு சாதகமாக போக்குவரத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தவில்லை. இதனால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
மறந்து போன கொடியேற்றம்
இந்த நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்பு இடம்பெற்ற போது தேசியக் கொடியை யார் ஏற்றுவது என சார்ச்சைகள் ஏற்பட்டிருந்தது. பிரதம விருந்தினர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். அவர் தேசிய கொடியை ஏற்றுவாரா எனவும் குழப்பங்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அவற்றை ஏற்றுவதற்கு ஒவ்வொருவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்வுகள் நடைபெற்ற போது தேசியக்கொடி, வடமாகாண கொடி, மாவட்ட கொடி என எந்த கொடியும் ஏற்றப்பட இல்லை. இது தொடர்பில் அதிகாரிகளும் ஆர்வம் காட்டவில்லை.
தமிழ் தாய்க்கு நடந்த அவலம்
இறுதி நாள் மாலை நேர அரங்க நிகழ்வு ஆரம்பமாகிய போது மங்கள விளக்கேற்றல், தமிழ் தாய்க்கு மாலை அணிவித்தல், தமிழ் தாய் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, எல்லோரும் எழுந்து நின்று மௌனம் காத்தனர். ஆனால் தமது நிகழ்வை அரங்கேற்றுவதற்காக வந்திருந்த சிங்கள மாணவர்கள் சிலர் தமிழ் தாய் வாழ்த்தை பொருட்படுத்தாது அமர்ந்திருந்து தமக்குள் கதைத்து சிரித்துக் கொண்டிருந்தனர். இது பலரது மனங்களில் அசௌகரியத்தையும் சிங்கள மாணவர்கள் மீதான வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
பார்த்து ரசித்த அமைச்சர்

முதல் நாள் நிகழ்வின் மாலையில் இந்திய துணைத்தூதர் தட்சணர்மூர்த்தியும், இறுதி நாள் மாலை நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா முழு நிகழ்வுகளையும் இரண்டு நாட்களும் முழுமையாக பார்த்து ரசித்தார். குறிப்பாக ஊடகவியலாளர்கள் சிலர் புகைப்படம் எடுத்த போது, அவர்களை அழைத்து தனக்கு மறைக்காமல் நிற்குமாறு பணித்ததுடன் முழுமையாக நிகழ்வுகளை பார்வையிட்டார். சில கலை நிகழ்வுகள் மேடையேறிய போது பலர் தம்மை மறந்து தாளம் போட்மையையும் காணமுடிந்தது.
நிகழ்வுகளை குழப்பிய மாணவர்கள்
இவ்விரு நாள் நிகழ்வுகளிலும் வவுனியா நகர பாடசாலைகளில் இருந்து வேறு வேறு வகுப்பு மாணவர்கள் சுழற்சி முறையில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடையில் எழுப்பி கூட்டம், கூட்டமாக மண்டபத்தை விட்டு வெளியேறி, சபையில் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். வடக்கு மாகாண பண்பாட்டு விழாவுக்கு ஏன் இந்த நிலை என்று பலரும் பேசிக்கொண்டதை அவதானிக்கமுடிந்தது. அடுத்த வருடம் நடைபெறும் பண்பாட்டு பெருவிழா இவற்றைக் கருத்தில் கொண்டு குறைகளைக் களைந்து சிறப்பாக அமைய வேண்டும் என்பதே கலை, கலாசார, பண்பாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாகும்.
கே.வாசு
No comments:
Post a Comment